Last Updated : 18 Mar, 2014 12:00 AM

 

Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

வீட்டைச் சுற்றும் விருந்தினர்

வீட்டில் தங்காமல் ஊர் சுற்றுவதிலே அலாதி பிரியம் கொண்டவன் நான். என்னைப் போன்ற மனநிலை கொண்டவர்க்கு, வீட்டில் கிடைத்திடும் ஏசல்கள் ஒரு பொருட்டில்லை! ஆனால், சமீபத்திய பொங்கலுக்குக் கிடைத்த விடுமுறை, வீட்டிலேயே என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

புது வீடு கட்டிக்கொண்ட பின்பு அந்த வீட்டோடு அமரிக்கையாய் இருந்து நேரத்தைக் கழித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அந்த வீடு நம்மோடு சிநேகம் கொண்டு பேசும். பின்னர் நம்மைப் பார்க்க வரும் உறவினர்களையும் விருந்தினர்களையும் கவனிக்க வேண்டும். அக்கம்பக்கத்தை நோட்டம் பார்க்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறச் சூழலையும் கூர்ந்து நோக்க வேண்டும். இந்தப் பழகிப் பார்க்கும் வேலைக்கு, அந்த விடுமுறை வாய்த்திருப்பதாக எண்ணிக்கொண்டேன்.

அறிவியல்பூர்வமாகச் சொல்ல வேண்டுமென்றால், வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் தனி வாழிடம். அறிவியலில் வாழிடம் என்பதற்குப் பன்மைப் பொருள் உண்டு. ஓர் உயிரிக்குத் தேவையான உணவு, உகந்த காலநிலை, ஆபத்தில்லாத தன்மை, புழங்கு வெளி ஆகியவற்றை உள்ளடக்கியதே வாழிடம். இதை ஓர் உயிரி வாழ்வதற்கேற்ற சூழல் அலகு என்றும் கூறமுடியும். சூழலியல் இதை 'நீஷ்' (Niche) என்கிறது. என் வாழிடத்தைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன்.

என் வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவுக்குள்ளாகவே விவசாய நிலங்கள் உண்டு. மனை அளந்து விட்டிருக்கும் இடங்களில் முட்செடிகள் காடாய் மண்டியிருக்கின்றன. வீட்டுத் தெருவுக்கு மேற்கே இருக்கும் தென்னந்தோப்பிலும், ஊருக்கு மிக அருகில் இருக்கும் வனக்காவலர் ஓய்வு இல்ல வளாகத்திலும் ஏராளமான மரங்களைப் பார்க்கலாம். இந்த மரங்களிலும் நிலங்களிலும் வசித்துவரும் பல வகைப் பறவைகள், விடுமுறையிலிருந்த என்னை வந்து சந்தித்துப் போகத் தொடங்கின.

விதவிதமான பறவைகள்

ஒரு நாளுக்குள்ளாகவே வகைவகையான பறவைகளை நான் சந்தித்துவிட்டேன்! தேன்சிட்டுகள், சிட்டுக்குருவி, கருங்குருவி, வாலாட்டிக்குருவி, இரட்டைவால்குருவி, மைனா, காகங்கள், வெண்கழுத்து மீன்கொத்தி, மணிப்புறா, செம்போத்து என அவற்றை மனதுக்குள் பட்டியலிட்டபோது எனக்கு வியப்பாய் இருந்தது.

வீட்டுக்கு முன்னால் நட்டு வைத்திருந்த முருங்கைக் கொம்பு மெலிதான இரண்டு கிளைகளை விட்டுப் பூவெடுத்திருந்தது. முருங்கைப் பூக்களில் தேன் குடித்திடத் தேன்சிட்டுகள் வந்து போன வண்ணமிருந்தன. இரண்டு வகையான தேன்சிட்டுகளைப் பார்க்க முடிந்தது. பழுப்பு நிற இறக்கைகளும், மஞ்சள் நிற உடலும் (Purple-rumped Sunbird) கொண்டது அவற்றுள் ஒன்று. இன்னொன்று கருநீல வண்ணம் (Purple Sunbird) கொண்டது.

காலை வேளையில் இளஞ்சூரியன் பொலியும்போது சிட்டுகள் சுறுசுறுப்பாக இயங்கின. அவற்றின் வேகம் அபாரமானது. ஒரு விநாடிக்குள்ளாகப் பல சிறுகிளைகளுக்குத் தாவி வெண்ணிற முருங்கைப் பூக்களில் தேன் உறிஞ்சின. ஆர்வ மிகுதியால் என் மைத்துனர் வீட்டிலேயே வைத்துவிட்டுப் போயிருந்த நிக்கான் கூல்பிக்ஸ் எல் 310 கேமராவால் தேன்சிட்டுகளைப் படமெடுக்க முனைந்தேன்.

அவற்றைப் படமெடுப்பது மிகமிகக் கடினமானது என்பது சில நிமிடங்களிலேயே புரிந்துவிட்டது. ஒரு விநாடியின் ஒரு சிறு துளியில்கூட ஒரே இடத்தில் தேன்சிட்டுகள் நிற்கவில்லை. ‘அவள் சிட்டாய்ப் பறந்தாள்' என்று நமது எழுத்தாளர்கள் எழுதுவதன் பொருள் எனக்கு விளங்கிவிட்டது! துடிதுடித்து அலைவதும் தவ்விக்கொண்டே இருப்பதும் சிட்டுகளின் இயல்பு. உலகில் தேன்சிட்டுகளில் மட்டும் 650 வகைகள் இருக்கின்றனவாம்!

தவளைகளும் மீன்கொத்திகளும்

தெருக் குழாயிலிருந்து வரும் தண்ணீர் பக்கத்து மனையில் குட்டை போலத் தேங்கியிருந்தது. அதில் பெருகியிருக்கும் தவளைகள் இரவு முழுக்கப் பாடுகின்றன. அவற்றுக்குத் தாலாட்டுப் பாடுவதாக நினைப்போ, என்னவோ. எந்தச் சூழலிலும் அவை இரவுக் கச்சேரியை முடித்துக்கொள்வதேயில்லை. அவற்றின் பாடல் வெண்கழுத்து மீன்கொத்தியை (Whitethroated Kingfisher) வரவழைத்திருந்தது. குட்டையைச் சுற்றி வளர்ந்திருந்த முட்செடிகளின் தாழ்ந்த கிளைகளிலேயும் மின் கம்பத்தின் மீதும், அதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் கிரீச்சிடும் குரலும், நெடுநேரமாய் ஒற்றைத் தவளைக்காக அமர்ந்திருக்கும் பொறுமையும் என்னை என்னவோ செய்தன. நீர்நிலைகளின் கரைகளில் ஈர மண்பொந்துகளில் அவை கூடு அமைக்கின்றன என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.

இறக்கைகளின் ஓரங்களிலும், வாலின் விளிம்பிலும் வெண்மை நிறம் கொண்ட வாலாட்டிக் குருவிகள் சிலவற்றைப் பார்க்க முடிந்தது. சில புத்தகங்களில் வழிமறிச்சான் என்று குறிப்பிடப்படுவது இக்குருவிகளைத்தானா என்றெனக்குத் தெரியவில்லை. வாலைத் தாழத்தாழ ஆட்டியபடியே, அவை புழு பூச்சிகளைத் தேடின.

துணிச்சல் பறவைகள்

இரட்டைவால் குருவிகளையும் மைனாக்களையும் மிகத் துணிச்சலான பறவைகளாகக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. சிட்டுக்குருவிகளையும்கூட இவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம். மனித வாழிடங்களை அண்டி வாழ்வதால், மனிதர்கள் குறித்த பயம் இவற்றுக்கு இல்லை. நான் பார்த்தபோதெல்லாம் வீட்டெதிரில் இருந்த மின்கம்பத்திலும் கம்பிகளிலும் நின்று ஊஞ்சலாடியும் கொண்டிருந்தன. இவை எல்லாமே தங்கள் இணையுடனே சுற்றித் திரிந்தன.

கருங்குருவிகள் என்னை அதிகம் கவர்ந்தன. உருண்டையான உடலும் நீண்ட வாலும் கொண்டவை இவை. அவற்றின் கண்கள் முத்தைப் போல ஒளிர்ந்தன. இரட்டைவால் குருவியொன்றும் கருங்குருவியொன்றும் தனிமையில் தவித்து அலைவதைப் பார்க்கத் துக்கமாயிருந்தது. மின்கம்பத்துக்கும் கம்பிக்கும் முட்கிளைகளுக்கும் என அங்கலாய்த்து வலம் வந்துகொண்டிருந்தன. ஒரு வேளை முட்டையிடுவதற்கும் கூடமைப்பதற்குமான முனைப்போ அல்லது ஆண் பறவைகளின் காவல் கண்காணிப்போ என்றுகூடத் தோன்றியது. இணையோடு இருக்கின்ற ஆண் குருவிகள் சில, தனது வசிப்பிட எல்லைக்குள் வேறு பறவைகளை அண்டவிடாது.

தேன்சிட்டின் கதை

பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்கையில் முன்பு படித்த தேன்சிட்டு பற்றிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்துபோனது. முன்பு ஒரு காலத்தில் தேன்சிட்டு ஒன்று தேன் ஒழுகும் தேன்கூடு ஒன்றைக் கண்டுபிடித்ததாம். தனியாளாகத் தேனை எடுக்க முடியாது என்பதால், அது ஒரு மனிதனைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு போனதாம். தேனீக்களை விரட்டிவிட்டுத் தேனை எடுத்த மனிதனோ, ஒரு துளி தேனைக்கூடச் சிட்டுக்குத் தரவில்லை. கடுஞ்சினம் கொண்ட தேன்சிட்டு, மனிதனுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டதாம். பல நாள் தேடி மீண்டும் ஒரு தேன்கூட்டைக் கண்டுபிடித்த தேன்சிட்டு, மனிதனைத் தேடிப் போய் மீண்டும் உதவிக்கு அழைத்ததாம். தேனின் சுவை நாக்கிலே எச்சிலைச் சுரக்க வைக்க, மனிதன் தேன்சிட்டைப் பின்தொடர்ந்தானாம். தேன்கூட்டை மனிதன் அடைந்தபோது, குட்டி ஈன்ற சிறுத்தையொன்றை அருகே காண நேர்ந்தது. தேன்சிட்டின் வஞ்சத்தை உணர்ந்துகொள்வதற்கு முன்பாகவே, அவன் கதை முடிந்துபோனது! தேன்சிட்டு தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டது. அன்றிலிருந்து இன்று வரை பழங்குடி மனிதர்கள் தேன்சிட்டை மதித்தே நடக்கிறார்களாம்! (சிங்கம் பறந்தபோது - ஆப்பிரிக்கக் கதைகள்)

இந்தப் பழங்குடிக் கதையைப் படித்தபோது, தேன்சிட்டுகள் வஞ்சம் தீர்க்கும் குணம் கொண்டவை என்ற சித்திரத்தை என்னால் நம்ப முடியவில்லை. இப்போது இக்கதையை நினைவுபடுத்திக்கொண்டபோது தேன்சிட்டுகள், மனிதனால் ஏமாற்றப்பட்டவை என்பதை என்னால் நம்ப முடிந்தது.

அவற்றின் 'சிவிட் சிவிட்' என்ற ஓயாத தவிப்பு, அப்படித்தான் நினைக்கச் செய்தது.

‘டிட் டிட்' என்றும் ‘கீச் கீச்'சென்றும் ‘சிவிட் சிவிட்' என்றும் சத்தம் எழுப்பித் திரிந்த இந்த அழகின் வார்ப்புகளைக் காணக் காணக் கொள்ளை போனது மனது. உலகில் நான் மட்டுமே இருக்கிறேன் என்ற மனித மமதை அழியும் தருணம் எதுவெனக் கேட்டால், பறவைகளைக் கவனித்திடும் தருணமே என்பேன் நான். அவற்றைக் கவனிப்பது ஒரு தவம் எனத் தோன்றுகிறது!

- அழகிய பெரியவன், எழுத்தாளர், தொடர்புக்கு: aravindanmarch@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x