Published : 06 May 2017 10:26 AM
Last Updated : 06 May 2017 10:26 AM
தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.
இப்படி எத்தனைக் கோடி முறை மறுபிறப்பு அடைந்த வரலாற்று நீர் உங்கள் பாதங்களைச் சற்று முன்னர் தழுவிச் சென்றது! வியப்பு மேலிட , சலம்பும் கடலை நோக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.
கடலுக்கு நெடிய வரலாறு இருக்கிறது. கடலொட்டி வாழும் துறைவர்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. கடலின் பண்புகள் துறைவர்களிடம் காலம்காலமாகப் படிந்துபோன வரலாறு அது. விரிவு, பேராழம், பிரம்மாண்டம், மந்தணம் எல்லாம் பொதிந்து கிடக்கும் இந்த உப்புநீர்ப் பெருவெளியானது, சொல்லிமாளாத பெருங்கதைகளுடன் உங்களுக்காகக் காத்திருக்கிறது...
மீண்டும் எழுத்துக்கு…
1990களின் பிற்பாதியிலிருந்து தமிழில் தொடர்ந்து எழுதிவந்த நான் 2004 ஆழிப் பேரிடருக்குப் பிறகு தீவிர எழுத்தில் இறங்க வேண்டியதாயிற்று. கடற்கரைப் பயணம், நெய்தல் எழுத்தார்வலர்களுடன் கருத்துப் பகிர்வுகள், ஆவணப்படுத்துதல் என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தேன். நிமிர்ந்து பார்த்தபோது பத்தாண்டுகள் கடந்திருந்தன. ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ என்கிற என்னுடைய 30ஆவது நூலுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளத் தோன்றியது. அது தவறான முடிவு என்று காலம் பிறகு சொன்னது. அதே தீவிரத்துடன் எழுத்துக்குத் திரும்புவது அத்தனை எளிதாக இல்லை.
‘கடலம்மா பேசுறங் கண்ணு‘ தொடர் மூலம் சமவெளி மனிதர்களுக்கு நெய்தல் வாழ்க்கையைப் பரிச்சயப்படுத்தும் தொடரை ஆரம்பிக்கிறேன். நெளிவுசுளிவற்ற ஆவண - அறிவியல் எழுத்துகளிலிருந்து என்னைச் சற்றே விடுவித்துக்கொண்டு, இளம் வாசகர்களுக்கு எழுதுவதாகப் பாவித்துக்கொண்டு மீண்டும் எழுத்தில் நுழைகிறேன்.
என் சிறுபருவ நினைவுகளிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நெய்தல் வாழ்வைக் குறித்து எழுதுவதற்குக் கடலளவு இருக்கிறது. மனித ஆயுட்காலம் அதற்கெல்லாம் ஒருவரை அனுமதிக்காது. விட்டுப்போனவற்றில் மிக முக்கியமானவற்றையாவது பதிவு செய்துவிட வேண்டுமென மனம் பேராசை கொள்கிறது. கடலை அதன் ஆர்ப்பரிப்போடு, ஆழத்தோடு உங்கள் வரவேற்பறைக்குக் கொண்டுவர ஆசை. அந்த ஆசையின் திசையில் என் பேனா நகர்கிறது…
சொல் புதிது கழிவெளி - கழிமுகப் பரப்பு கழிமுகம் - கடலும் ஆறும் இணையுமிடம் துறைவர் - கடலைச் சார்ந்து கடற்கரையில் வாழும் மக்கள். ('கடலோடி'யைவிடப் பொருத்தமான சொல்) |
பேராசிரியர் வறீதையா
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளம்துறையை சேர்ந்த முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் (1959) கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர், விலங்கியல் பேராசிரியர். கடல், கடல் சார்ந்த மக்களைக் குறித்து தொடர்ந்து பேசி, எழுதி, ஆய்வு செய்துவருகிறார். 2004 ஆழிப்பேரலைக்குப் பிறகு கடல் - கடற்கரைச் சூழலியல், மீன்வளம், மீனவர் வாழ்வாதாரம் குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். 35-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருப்பதுடன், நெய்தல் வெளி பதிப்பகத்தின் மூலம் 30-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.
(அடுத்த வாரம்: பேரிழப்பு தந்தது என்ன?)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT