Published : 07 Oct 2014 12:52 PM
Last Updated : 07 Oct 2014 12:52 PM
வெளி நாட்டில் இருந்து வந்த இந்தத் தாவரம் அரளியை ஒத்திருந்ததால் கப்பல் அரளி, மலை அரளி எனப்படுகிறது.
மயக்கும் நறுமணம், இலைகள் இருந்தாலும் இல்லாத நேரத்திலும்கூடக் கொத்துக் கொத்தாகப் பூத்துப் பார்ப்பவரை தன் பக்கம் ஈர்க்கும் மலர்கள், கிளைகள் அனைத்தும் ஒரே அளவில் தடித்த தோற்றம் - இதுதான் பெருங்கள்ளி, நிலசம்பங்கியின் அடையாளம். அழகான இந்த மரத்தின் பூக்கும் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
இதில் இரண்டு வகைகளைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். அதிக எண்ணிக்கைகளில் இல்லாத சிவப்பு மலர் கொண்ட வகை ஒன்று. பெரும்பாலான இடங்களில் பார்க்க வாய்ப்புள்ள வெள்ளை மலர் கொண்ட வகை மற்றொன்று. உயரமாக வளரக்கூடிய மர வகை அல்ல இது.
சிவப்பு மலர் கொண்ட மரம் இலையுதிர்க்கக் கூடியது. வெள்ளை, பசுமை மாறாத் தாவரம். இரண்டின் இலைகளும் தடிமனாக இருக்கும். இலையையும் தண்டையும் கிள்ளினால், வெள்ளையான பால் போன்ற திரவம் வெளியே வரும். தண்டை வெட்டி வைத்தாலே வேர் விட்டு வளர்ந்து அடர்த்தியான மரமாகிவிடும். இவற்றில் நிறைய கலப்பினங்கள் உண்டு.
கோயில்களில் இத்தாவரத்தை அதிகம் பார்க்க முடியும். தோட்டங்கள், பூங்காக்களில் அழகு சேர்ப்பதற்காக நட்டு வளர்க்கப்படுகிறது. இந்த அயல் தாவரத்தைத் தமிழகம் எங்கும் பரவலாகப் பார்க்கலாம்.
ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் இலைகளை முற்றிலும் உதிர்த்து, கிளைகளின் நுனிகளில் மட்டும் கொத்துக்கொத்தாகப் பூக்களை முகிழ்க்கும்.
தமிழில்:
கப்பல் அரளி, மலை அரளி
ஆங்கிலப் பெயர்:
Frangipani, Temple Tree, Pagoda Tree
அறிவியல் பெயர்:
வெள்ளை (Plumeria alba), சிவப்பு (Plumeria rubra)
தாயகம்:
மேற்கிந்திய தீவுகள், மெக்சிகோ
பூக்கும் காலம்:
பிப்ரவரி முதல் அக்டோபர் வரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT