Last Updated : 22 Sep, 2018 10:51 AM

 

Published : 22 Sep 2018 10:51 AM
Last Updated : 22 Sep 2018 10:51 AM

மழை வெள்ளம் தாங்கும் புதிய நெல் ரகம்

கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் கோ-43 (சப்-1) புதிய நெல் ரகம் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 1983-ம் ஆண்டு கோ-43 என்ற நெல் ரகத்தை வெளியிட்டது. விவசாயிகளும் வேளாண்மைத்துறையினரும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் பிரபலமாகத் திகழ்கிறது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ரகம் சாகுபடி செய்தவதற்கேற்றது.

1.ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் மகசூல் தரவல்லது.

2. சாகுபடி செய்த 140 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

3. குண்டு ரகம்.

4. உவர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியது.

இந்த கோ-43 நெல் ரகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்ட சீரிய ஆராய்ச்சியின் மூலம் மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் வகையில், கோ-43 (சப்-1) என்ற மேம்படுத்தப்பட்ட துணை ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன், ஆசியாவின் பிரபல நெல் ரகங்களான ஸ்வர்ணா, சம்பா மசூரி, வங்காளதேசம் பி.ஆர்.2, ஐ.ஆர். 64, சி.ஆர். 1009 ஆகிய 5 நெல் ரகங்களின் மரபணுக் காரணிகளைக் கொண்டு, மேம்படுத்தப்பட்ட துணை நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஒவ்வொரு நெல் ரகத்திலும் உள்ள நற்குணங்கள், துணை ரகங்களுக்கு மாற்றப்பட்டன.

அந்த ஆராய்ச்சிக்கு இணையாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கோ-43 என்ற நெல் ரகத்தை, கோ-43 (சப்-1) என்ற மேம்படுத்தப்பட்ட துணை ரகமாக தாவர மூலக்கூறுவியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது” என்று இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவர மூலக்கூறுவியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.ஞானம் கூறினார்.

கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் வகையில் இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் துணை ரகம் கோ-43-ன் அனைத்து மரபியல் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.

இந்தப் புதிய ரகம் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் அகில இந்திய அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 50 முதல் 100 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 பகுதிகளில் சோதனை முறையில் சாகுபடி செய்து பார்த்ததில், மற்ற நெல் ரகங்களைக் காட்டிலும் இந்த ரகம் 25 முதல் 30 சதவீதம் கூடுதல் மகசூல் கொடுத்தது.

தற்போது கோ-43 (சப்-1) ரகத்தின் கரு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வல்லுநர் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன. இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் இந்த ரகத்தின் விதை நெல்களை வாங்கி கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x