Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM

கற்பக தரு 21: ஓலைப் பட்டாசுகளின் கொண்டாட்டம்

தமிழ்ச் சமூகத்தில் பட்டாசு வெடிக்கும் வழக்கம் எப்போது தோன்றியது என்பது குறித்துப் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால், நான் பட்டாசுகளை ஒரு புது வரவாகவே பார்க்கிறேன்.

ஒரு சமூகம் தன்னுள் ஏற்படும் புது மாறுதல்களைக்கூடத் தனது கலாச்சாரத்தையே மையப்படுத்தி உள்வாங்கும் விதம் அழகானது. அப்படித்தான் ஓலைப் பட்டாசு அல்லது ஓலைவெடி இங்கு அறிமுகமாகிறது. புது விஷயங்களை உள்வாங்கும் விதத்தில்கூட ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருக்குமானால் அச்சமூகம் எத்துணை நெருக்கத்தை ஒரு மரத்துடன் கொண்டிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த ஓலைப் பட்டாசு, ஓலைபடக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இது காகிதம் விலை அதிகமாக இருந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். சுமார் ஐந்து தலைமுறைகளாக இந்த வகைப் பட்டாசுகளைத் தயாரிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். சுமார் 120 வருடங்களுக்கு முன்பு வள்ளியூரில் ஒருவர் ஓலைபடக்குகளைச் செய்யும் விதத்தை கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இன்றும் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாற்றின்கரையில் கூடைப் பனையோலையில் செய்யப்படும் ஓலை வெடிகள் உண்டு. முக்கோண வடிவில் செய்யப்படும் இவ்விதப் பட்டாசுகள் மூன்று அளவுகளில் கிடைக்கிறன. நகங்களை விடச் சற்றே பெரிதாக இருப்பவை சிறுவர்கள் வெடிப்பதற்கானவை. இவ்வித வெடிகளுக்கு வால் இருக்காது.

ஆனால், ஒரு ஈர்க்கிலை ஓலைக்குள் நுழைத்து குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்கலாம். சத்தம் அதிகம் வராது. சற்றே அளவில் பெரிய வெடிக்கு ஓலையிலேயே வால் இருக்கும். அது இளைஞர்களுக்கானது.அதாவது ஓலையின் ஒரு பகுதியைக் கையில் பிடித்துக்கொண்டு வெடியைக் கொளுத்தி வீசிவிட வேண்டும்.

எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஓலை படக்கு சமோசா அளவில் இருக்கும். சமோசா வெடிதான் இதன் பெயர். ஆனால் அது சரம் என்று சொல்லப்படும் கயிற்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும், கோயில் திருவிழாக்கள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளில் பேரொலியுடன் வெடிக்கப்படும். அதைக் கம்பம் என்று அழைப்பார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பாரம்பரியமாக இவற்றைத் தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.

பனை ஓலையில் செய்யும் வெடிகளில் சிறியவற்றை ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 5,000 வரை செய்வார்கள். இந்த வேகம் அசரவைப்பது. இரண்டு அல்லது மூன்று வினாடிகளில் ஒரு வெடியைச் செய்பவர்கள்கூட இருக்கிறார்களாம். இந்தத் திறமைகள் மடை மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பனை ஓலைப் பட்டாசு செய்பவர்களுக்குச் சில சரும நோய்களும், உடல் உபாதைகளும் ஏன் சில வேளைகளில் தீக்காயங்களும் விபத்துகளும் ஏற்படும். ஆகவே, வருங்காலத்துக்கு நாம் எவ்வகையிலும் பரிந்துரைக்க முடியாத தொழில் இது.

எனினும், தற்போது தமிழகத்தில் வாழும் சில குடும்பங்கள் இவற்றை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. ஆனால், இப்போது இந்தத் தொழில் நசிவடைந்துவிட்டது. அரசு இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுவரையில் இந்த எளிய தொழிலை ஆதரிப்பது நமது கடமை.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x