Published : 08 Jun 2019 10:17 AM
Last Updated : 08 Jun 2019 10:17 AM
இந்தியாவிலிருந்த கடைசி ஒராங்ஊத்தன் பென்னி, உடல்நிலை சரியில்லாமல் கடந்த 31-ம் தேதி காலமானது.
ஒடிசாவில் உள்ள நந்தன் கானன் விலங்குக் காட்சியகம் தெற்காசியாவின் மிகப் பெரிய விலங்குக் காட்சியகம். கடந்த பதினாறு ஆண்டுகளாக பென்னி என்ற பெண் ஒராங்ஊத்தன் இங்கே பராமரிக்கப்பட்டுவந்தது. இந்த ஒராங்ஊத்தன் சிங்கப்பூர் நாட்டிலிருந்து புனேவில் உள்ள ராஜிவ்காந்தி விலங்குக் காட்சியகத்துக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. பிறகு நந்தன் கானன் காட்சியகத்துக்கு வந்தது.
அறிவுப்படிநிலையில் மேம்பட்ட உயிரினமான ஒராங்ஊத்தன்கள், தற்போது அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. காட்டழிப்பு, ஒராங்ஊத்தன்கள் வேட்டையாடப்படுவதே இதற்கு முக்கியக் காரணம். மழைக்காடுகளில் வசிக்கும் ஒராங்ஊத்தன்கள் ஆசியாவில் போர்னியோ, சுமத்ரா ஆகிய தீவுகளில்தான் காணப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள விலங்குக் காட்சியகத்தில் வசித்துவந்த கடைசி ஒராங்ஊத்தனாக பென்னி (41) இருந்தது. முதுமையாலும் சுவாசக் கோளாறாலும் கடந்த சில மாதங்களாகவே அது அவதிப்பட்டுவந்தது. பென்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மே 31 அன்று அது காலமானது. மழைக்காடுகளில் இயற்கையாக வசிக்கும் ஒராங்ஊத்தன்கள் 45 வயதுவரை வாழக் கூடியவை.
நந்தன் கானன் விலங்குக் காட்சியகத்துக்கு பென்னி வந்தது முதலே தனியாவே வாழ்ந்துவந்தது. பென்னிக்குத் துணையாக ஆண் ஒராங்ஊத்தனைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அது நடக்கவில்லை. “வாழ்நாள் முழுவதும் தனியாகக் கழித்த பென்னி, உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டிருந்தது. பென்னிக்கு முன்னதாகவே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால், இன்னும் சில நாட்கள் அது வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு" என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் சஞ்சய் குமார்தாஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT