Published : 16 Sep 2014 01:40 PM
Last Updated : 16 Sep 2014 01:40 PM
கொலை பயத்தைக் காட்டிலும் கொலஸ்ட்ரால் பயம் அதிகம் உள்ள காலம் இது. பி.பியும் ஷுகரும் அதிகரித்துவரும் நிலையில், நல்ல உணவை மக்கள் தேடித் தேடிச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் இதய நோய்களும் ரத்தஅழுத்தமும் நீரிழிவும் அதிகரித்ததற்கு ஊட்டச்சத்து இல்லாத, உடலுக்குத் தேவையற்ற உணவு வகைகளைச் சாப்பிடுவதே முக்கியக் காரணம்.
மறுபக்கம் கொலஸ்ட்ரால், எடை குறைப்பு, நீரிழிவு நோய்க்குத் தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பலர், வழக்கமான உணவுக்குப் பதிலாக சிறுதானியங்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
சிறுதானியங்கள்
புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள ஆரோக்கியா இயற்கை உணவகம் மற்றும் ஆறாம் திணை இயற்கை விளைபொருள் அங்காடி, இதற்குச் சிறந்த விடையைத் தருகிறது. ஒரே இடத்தில் ஆரோக்கியமான பொருட்களை விற்பனை செய்யும் அங்காடியையும், அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளைப் படைக்கும் உணவகத்தையும் நடத்திவருகிறார் நாகஜோதி.
சிறுதானிய உணவின் அருமை குறித்துப் பலருக்கும் தெரியாமல் இருந்த காலத்திலேயே, ஆரோக்கியம் காக்கும் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. ஆரோக்கியா இயற்கை உணவகம், முழுக்க முழுக்க வேதிப்பொருட்கள் இல்லாத சிறுதானிய உணவகம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சாமை, வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம், கேழ்வரகு, சிவப்பரிசி, அவற்றின் அவல் வகைகளைக் கொண்டே இங்கே உணவு தயாரிக்கப்படுகிறது.
உணவகத்தில் எல்லாமே உடனடியாகச் செய்து தரப்படு கின்றன. அதுமட்டும் இல்லாமல் வெகன் உணவு (Vegan food) எனப்படும் வேக வைக்காத இயற்கை உணவு வகைகளும் இங்கே கிடைப்பது சிறப்பம்சம்.
மாக்டெய்ல் ஜூஸ்
நான்கு வகை சிறுதானியங்கள் கலந்து பணியாரம், இட்லி, தோசை ஆகியவை தயாரிக்கப் படுகின்றன. இனிப்புச் சுவைக்குப் பனைவெல்லம், கரும்பு வெல்லம், தேன் போன்றவையே பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவக் குணம் கொண்ட ஜூஸ்களான அஸ்வகந்தா, திரிபலா, திரிகடுகு, மூலிகை ஜூஸ்களான கற்றாழை, செம்பருத்தி, தூதுவளை, பொன்னாங்கண்ணி போன்றவை பரிமாறப்படுகின்றன.
மாக்டெய்ல் ஜூஸ் எனப்படும் கலப்பு ஜூஸ் வகைகளும் உண்டு. ஆப்பிள்-கேரட்-இஞ்சி கலந்த ஜூஸ், ஆரஞ்சு-கேரட்-இஞ்சி கலந்த ஜூஸ் எனப் பல வகைகள் உண்டு. "எல்லா உணவு வகைகளும் தரும் பலன்களை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறோம். சாலட், எனர்ஜி ஃபிளேக்ஸ், கஷாயம், சூப் ஆகியவற்றைச் செய்து தருகிறோம்.
வெஜிடபிள் புலவ், ஹெல்தி ஃபிளேக்ஸ், சிறுதானிய இட்லி, மூலிகை தோசை, சப்பாத்தி, சிறுதானிய கலவை சாதம் என உங்கள் நாக்கின் சுவை விருப்பத்துக்கு ஏற்பச் சாப்பிடலாம்" என்கிறார் நாகஜோதி.
இயற்கை அங்காடி
உணவகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இயற்கை விளைபொருள் அங்காடியில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள் கிடைக்கின்றன. நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால், இவை கட்டுப்படியாகும் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கே மளிகைப் பொருட்கள், செக்கில் ஆட்டிய எண்ணெய், குழந்தைகளுக்குத் தேவையான பிஸ்கெட் வரை அனைத்தும் கிடைக்கின்றன. சிறுதானிய உணவு பொருளை வாங்குபவர்களுக்கு, அதைக் கொண்டு உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான யோசனைகளும் ஆலோசனை களும் செய்முறைகளும் தரப்படுகின்றன.
குழந்தைகளுக்கு
பிரான்ஸிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த ராஜன் கூறுகையில் "நமது பண்டைய சமையல் முறையைப் பிரான்ஸ் நாட்டினர் அமோகமாக வரவேற்கிறார்கள். புதுவைக்கு விடுமுறைக்கு வரும்போது இயற்கை உணவு விடுதியில் பொருட்களை வாங்குவதுடன், அதைச் செய்யவும் கற்றுக்கொண்டிருக்கிறோம். சிறுதானிய உணவைச் சமைப்பது எளிது. உடலுக்கு ஊட்டச்சத்து அதிகம். பசியையும் தாங்கும்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.
பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவைத் துறந்து, கெட்ட கொழுப்புடன் ஊட்டச்சத்துகள் இல்லாமல் வளரும் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குச் சிறுதானியங்களைக் கொண்டு பனை வெல்லம், செக்கில் ஆட்டிய எண்ணெய் சேர்த்துச் செய்யப்பட்ட அவல் லட்டு, குக்கீஸ், சேவு, சீவல், முறுக்கு போன்ற நொறுக்கு தீனிகளும் கிடைக்கின்றன, தின்பண்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உணவு விடுதியை நாடி வெளிநாட்டினர் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர்.
தொடர்புக்கு: 0413 2342921, 88073 72921
மின்னஞ்சல்: arokyanaturerestaurant@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT