Last Updated : 24 Mar, 2018 11:00 AM

 

Published : 24 Mar 2018 11:00 AM
Last Updated : 24 Mar 2018 11:00 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 75: நுண்ணுயிர்களின் ஒத்திசைவு

மண் என்பதற்கும் மணல் என்பதற்குமான பெரிய அடிப்படை வேறுபாடு உண்டு. மணல் என்பது வெறும் சிதைந்த நுண்ணிய பாறைத் துகள்களை மட்டுமே கொண்டிருப்பது. மாறாக, மண் என்பது கரிம ஊட்டம் நிறைந்தது. கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்கள் வாழ இடம் கொடுப்பது.

மண்ணில் நுண்ணுயிரிகள், பூஞ்சாளங்கள், பாசிகள், இன்னும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு உயிரினங்களின் செயல்பாடும், மண்புழு, கரையான், எறும்பு, மரவட்டை போன்ற கண்ணுக்குப் புலப்படும் பெரிய உயிரினங்களின் செயல்பாடும் இடையறாது நடந்த வண்ணம் உள்ளன.

இன்று நவீன எலக்ட்ரான் நுண்ணோக்கிகளின் மூலம் மண்ணை உற்றுப் பார்க்கும் அறிவியலாளர்கள் பெரிதும் வியந்து போகின்றனர். வெப்ப மண்டல நாடுகளில் ஒரு கோப்பை அளவுள்ள மண்ணில் ஏறக்குறைய 200 கோடி குச்சிலங்கள் (பாக்டீரியா), இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கதிர்க்காளான்கள் (ஆக்டினோமைசீடு), 2 கோடி முந்துடலிகள் (புசோட்டோசோவா), 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாசிகள், பூஞ்சாளங்கள் உள்ளதாக அறிந்துள்ளனர். அப்படி என்றால் கண்ணுக்குத் தெரியாத இந்த உயிரினங்களின் எண்ணிக்கை, ஒரு குட்டி நிலத்தில் எவ்வளவு இருக்கக்கூடும் என நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத மாபெரும் அளவில் இருக்கிறது.

சிதைப்புச் செயல்பாடு

பெரும்பாலான குச்சிலங்களின் வேலையே சிதைப்பதுதான். இறந்துபோன தாவரங்களை, விலங்குகளை மற்ற நுண்ணுயிரிகளைச் சிதைப்பதே இவற்றின் வேலை. குச்சிலங்களால் உயிரோடு இருக்கும் ஒரு தாவரம் அல்லது விலங்கு, கழிவாக வெளியேற்றும் பல்வேறு கரியம், நைட்ரஜன் கூட்டுப் பொருட்கள் போன்றவை சிதைக்கப்பட்டுத் தனித்தனி தனிமங்களாகின்றன. இன்னொரு வகையில் சொன்னால் கரியம், நைட்ரஜன் சுழற்சியில் இவை பெரும் பங்காற்றுகின்றன.

இந்தச் சிதைப்புச் செயல்பாட்டைத்தான் நாம் ‘மட்குதல்’ என்று அழைக்கிறோம். பயிர்கள் வேர் மூலம் எடுத்துக்கொள்ளும் வகையில் மட்கும் பொருட்களிலிருந்து பல்வேறு வகைப்பட்ட ஊட்டங்கள் நொதிகளாக, கரைசல்களாக வெளிப்படுகின்றன. இந்த வகையில்தான் செடி, கொடி, மரங்களுக்குத் தேவையான உணவு இயற்கையாகக் கிடைக்கிறது.

கூட்டுப் பொருள்… கூட்டுச் செயல்பாடு…

இது மட்டுமல்லாது அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற பல்வேறு நுண்ணுயிரிகள் செடிகளின் வேரோடு இணைந்து காற்றில் ஏராளமாக இருக்கும் நைட்ரஜனை செடிகளுக்கு ஏற்றவகையில் நைட்ரஜன் கூட்டுப் பொருட்களாக மாற்றுகின்றன. செடிகளின் வேர்கள், நுண்ணுயிரிகள் வாழத் தகுந்த சூழலை அளிக்கின்றன. இந்த ஒத்திசைவு மண்ணில் உயிரினங்களின் மாபெரும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதற்கும் காரணமாக உள்ளது.

(அடுத்த வாரம்: உயிரி உரங்கள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x