Last Updated : 10 Mar, 2018 12:23 PM

 

Published : 10 Mar 2018 12:23 PM
Last Updated : 10 Mar 2018 12:23 PM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 73: மண்ணில் இருக்க வேண்டிய ஊட்டங்கள்

 

ளமான மண்ணில் மக்கிய சத்துக்கள் அதிகம் இருக்கும். அந்த மக்கின் அளவைப் பொறுத்து வளம் அமைகிறது. அதிக மக்கு இருந்தால் அதிக வளம், குறைவான மக்கு இருந்தால் குறைவான வளம் இருக்கும். மேலும், மண்ணை அதன் நீர்வடி திறனைக் கொண்டு பின்வருமாறு பிரிக்கின்றனர் நவீன வேளாண் விஞ்ஞானிகள்:

மிகைதிற நீர்வடி மண்

இந்த மண் வகையில், நீர் பொதுவாக முற்றிலும் வடிந்துவிடும் என்றாலும், மெல்ல மெல்லவே வடியும். மண்ணின் நயம் நடுத்தரமாக இருக்கும். நிலத்துக்குள் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும்.

மிதத்திற நீர்வடி மண்

இங்கு நீர் நடுத்தரமாக வடியும். ஈரப்பதம் ஓரளவு காக்கப்படும். நீண்ட நேரம் ஈரப்பதம் இருக்கும்.

குறைதிற நீர்வடி மண்

இங்கு நீர் அதிக நேரம் தங்கி மண்ணுள் செல்லும். இதனால் மண்ணின் ஆழத்தில் ஈரப்பதம் இருக்கும். செடிகளுக்கு, குறிப்பாக மரப் பயிர்களுக்கு ஈரம் கிடைக்கும்.

16 வகை ஊட்டங்கள்

மண்ணில் பயிர் வளர்வதற்கான ஊட்டங்கள் இயல்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, 16 வகையான ஊட்டங்கள் ஒரு பயிரின் வளர்ச்சிக்குத் தேவையாக உள்ளன. இவற்றைத் தாது ஊட்டங்கள் பதிமூன்று, அல்தாது (தாதுசாரா) ஊட்டங்கள் மூன்று என்றும் பிரிக்கலாம்.

அல்தாது ஊட்டங்களான கரி (கார்பன் டை ஆக்சைடு), நீரீன் (ஹைட்ரஜன்), உயிரீன் (ஆக்சிஜன்) ஆகிய மூன்றும் இயற்கையாகப் பெரிதும் கிடைக்கின்றன. குறிப்பாகக் காற்றின் மூலமாகவும் நீரின் மூலமாகவும் இவை கிடைக்கின்றன.

ஒளிச்சேர்க்கையின்போது கரி வளியும் நீரும் சிதைந்து வெயிலின் ஆற்றலைக்கொண்டு சர்க்கரையையும் நார்ப்பொருளையும் உருவாக்குகின்றன. இவை பயிர்களுக்கு உணவாகப் பயன்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் உணவாகின்றன.

தாவரங்களுக்கான தாது ஊட்டங்கள்

தாது ஊட்டங்களான 13 வகைகளும் மண்ணில் இருந்து கிடைக்கின்றன. நீரில் கரைந்து இந்த ஊட்டங்கள் வேர்களின் வழியாகப் பயிர்களுக்குள் செல்கின்றன. இவற்றைப் போதிய முறையில் மண்ணில் இருக்குமாறு பராமரித்துவந்தால் சிக்கல் இல்லை. அவ்வாறு இல்லாதபோது பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்தத் தாது ஊட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அதாவது பேரூட்டங்கள், நுண்ணூட்டங்கள் என்று பிரிக்கப்படுகின்றன.

இந்தப் பேரூட்டங்கள் முதன்மை ஊட்டங்கள் என்றும் இரண்டாம்நிலை ஊட்டங்கள் என்றும் பிரிக்கப்படுகின்றன.

முதன்மை ஊட்டங்கள் வெடியீன் (நைட்ரசன்) என்ற தழை ஊட்டம், ஒண்பொறை (பாஸ்பரஸ்) என்ற மணி ஊட்டம், சாம்பரம் (பொட்டாசு) என்ற சாம்பல் ஊட்டம் முதலியன.

இரண்டாம் நிலை ஊட்டங்கள் சுண்ணம் (கால்சியம்), வெளிமம் (மக்னீசியம்), கந்தகம் (சல்பர்) ஆகிய மூன்றும்.

இந்த ஊட்டங்களைச் சரியான முறையில் பதிலீடு செய்வதன் மூலம் விளைச்சலைத் தொய்வின்றி எடுக்கலாம். மண்ணில் உள்ள உயிர்கள் பற்றித் தெரிந்துகொள்வது இயற்கைவழி வேளாண்மைக்கு மிக முக்கியமானது.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x