Published : 24 Mar 2018 11:00 AM
Last Updated : 24 Mar 2018 11:00 AM
த
மிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே தென்படும் இந்த வகை ஆடு, செம்மறி ஆட்டினம். எனவே இதற்கு ‘நீலகிரி ஆடு’ என்று பெயரிடப்பட்டது. செம்மறி ஆடுகள் அவை தரும் பயன்களின் அடிப்படையில் ‘இறைச்சி ஆடுகள்’ என்றும், ‘கம்பளியிழை ஆடுகள்’ என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
நீலகிரி ஆடு, அது தரும் தரமான கம்பளி இழைகளுக்காகப் பெயர் பெற்றது. அந்த இழைகளிலிருந்து கம்பளிப் போர்வைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த ஆடு கம்பளியிழை ஆடுகள் பிரிவில் வரும். தமிழ்நாட்டில் உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமே.
வெள்ளை நிறம்
தமிழகத்தில் நீலகிரி ஆடுடன் சேர்த்து, கோயமுத்தூர், குரும்பை, திருச்சிக் கருப்பு என நான்கு வகையான கம்பளியிழை ஆட்டினங்கள் உள்ளன. இவற்றில் நீலகிரி ஆடு, அழியும் நிலையில் உள்ள உயிரினமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த வகை ஆடுகள், கம்பளி இழைகளுக்காக வளர்க்கப்பட்டாலும், இறைச்சிக்காகவும் பயன்படுகின்றன. எனவே, அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்த வகை ஆடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். சில ஆடுகளின் முகத்திலோ உடலின் சில பகுதிகளிலோ பழுப்பு நிறத்தில் வட்டங்கள் இருக்கும். இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் கிடையாது. இவற்றின் வால் நீளமாக இருக்கும். ஆண் ஆடு 25 முதல் 40 கிலோ உடல் எடையும், பெண் ஆடு 20 முதல் 30 கிலோ உடல் எடையையும் கொண்டிருக்கும். இவை ஆண்டுக்குச் சுமார் 1 கிலோ கம்பளியைத் தரும் வல்லமை கொண்டவை. இந்த வகை ஆடுகளில் சுமார் 20 சதவீத ஆடுகள், ஈற்றுக்கு இரண்டு குட்டிகள் போடக்கூடியவை என்கிறார்கள் கால்நடை நிபுணர்கள்.
இனவிருத்தி முயற்சி
பாரம்பரிய வேளாண்மையிலிருந்து தோட்டக் கலை, தேயிலை, காபி உள்ளிட்ட பணப் பயிர் சாகுபடி என நவீன வேளாண்மைக்கு நீலகிரி மக்கள் மாறிய காரணத்தாலும் இந்த வகை ஆடுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. எனவே, இந்த ஆடுகளைப் பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் சாண்டிநல்லா பகுதியில் ஆடு இனவிருத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு 1950-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மேலும் இவற்றைப் பாதுகாக்க, விலங்கு மரபியல் பாதுகாப்பு தேசியப் பணியகத்தால், தேசிய திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாண்டிநல்லா நிலையம் தொடங்கப்பட்டு 15 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு நீலகிரி ஆட்டை, மெரினோ என்ற அயல்நாட்டு ஆட்டினத்துடன் கலப்பினப் பெருக்கம் செய்து உருவாக்கப்பட்டதே ‘சாண்டினோ’ எனும் ஆட்டினம். இது ஆண்டுக்குச் சுமார் 3 கிலோ கம்பளியைத் தருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT