Last Updated : 16 Sep, 2014 01:16 PM

 

Published : 16 Sep 2014 01:16 PM
Last Updated : 16 Sep 2014 01:16 PM

பெங்களூர் உயிரியலாளருக்கு ஜப்பான் விருது

பெங்களூரைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சி யாளரான கமல் பவாவின் பெயர் கடந்த வாரம் உலகச் செய்திகளில் இடம்பெற்றது. பல்லுயிரியம் தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியே அதற்குக் காரணம். அப்படியென்ன ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார்?

பெங்களூரில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனமான அசோகா டிரஸ்ட்டின் (Atree) தலைவர் கமல் பவா (75). சூழலியல் விஞ்ஞானியான இவர் 2014-ம் ஆண்டுக்கான பல்லுயிரியம் தொடர்பான மிடோரி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறக்கட்டளை 2010–ம் ஆண்டு முதல் மிடோரி விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ. 50 லட்சம். இந்த ஆண்டுக்கான மிடோரி விருது, தென்கொரியாவில் அக்டோபர் மாதம் நிகழும் விழாவில் வழங்கப்படும்.

இமயமலை ஆராய்ச்சி

இமய மலையில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சி, மேலும் பல்வேறு பல்லுயிரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை, மத்திய அமெரிக்கா, இமயமலை ஆகிய பகுதிகளில் உயிரியல் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து, அவர் மேற்கொண்ட ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் ஆராய்ச்சி.

இயற்கை வளங்களை வகைதொகையில்லாமல் சேதப்படுத்தினால், அதன் எதிர்விளைவை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். இதைத்தான் கமல் பவாவும் வலியுறுத்துகிறார். "இயற்கை வளங்கள் சேதமடைந்தால் நமது பண்பாடு அழியும். உள்ளூர் மட்டத்திலும் உலக அளவிலும் பல்லுயிரியம், சுற்றுச்சூழலைப் பேண வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வைக் கமல் பவா உருவாக்கியுள்ளார்" என்கிறார் அசோகா டிரஸ்ட்டின் இயக்குநர் கணேசன் பாலசந்தர்.

மற்றொரு விருது

கமல் பவா 40 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் உள்ள மாஸ்ஸசுசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

2012-ம் ஆண்டில் வளங்குன்றாத அறிவியல் தொடர்பாகச் சர்வதேச அளவில் வழங்கப்படும் குன்னெரஸ் விருதைப் பெற்றுள்ளார். நார்வே நாடு வழங்கிய இந்த விருதை முதன்முறையாகப் பெற்றவர் அவர்.

பல்லுயிரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் அது மனித இனத்துக்கு அத்தியாவசியம் என்பதையும் உணர்ந்து, அது குறித்து அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கமல் பவா போன்றவர்களின் செயல்பாடு பல்லுயிரியத்தை மட்டுமல்ல, நமது பண்பாட்டைக் காக்கவும் அவசியம்.

கமல் பவா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x