Published : 20 Apr 2019 12:49 PM
Last Updated : 20 Apr 2019 12:49 PM
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் பூமியில் இருந்து தானியமாக, இலையாக, மரக் கட்டையாக, கச்சா எண்ணெய்யாக, கனிமங்களாக, மற்ற உயிரினங்களிடம் இருந்து நாம் எடுத்ததே. ஓர் இலையைக்கூட இயற்கையின் உதவியின்றி நாம் உருவாக்கிவிட முடியாது. இயற்கையிடமிருந்து நாம் எடுக்கும் ஒவ்வொரு பொருளும் நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருள் அல்ல. நம் குழந்தைகளிடம் இருந்தும் அவர்களுடைய குழந்தைகளிடம் இருந்தும் கடனாக வாங்கும் பொருள்.
அவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பெருக்கும் அல்லது சேமிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. உதாரணத்துக்கு, கச்சா எண்ணெய்யை நாம் பெருக்க முடியாது, சேமிக்க மட்டுமே முடியும்; காடுகளை நாம் பெருக்க முடியும். ஆனால், இன்று நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை, இந்த இரண்டையும் அழிக்க மட்டுமே செய்கிறது.
எங்கே போகிறோம்?
அழித்தலை ஒரு பிரச்சினையாகப் பார்த்தால், அதைவிடப் பெரிய பிரச்சினை பொருட்களை நாம் அழிக்கும் முறை. பொருட்களை அழிப்பதற்கு இயற்கையிடம் நேர்த்தியான முறை ஒன்று இருக்கிறது, அது ‘மக்குவது’.
ஆனால், நாமோ ஒரு பொருளைப் பயன்படுத்தி முடித்த பின் பொருட்களை நிலத்தில் தூக்கி எறிகிறோம் அல்லது குப்பைக் கிடங்குகளில் பல்லாண்டுகளுக்குப் போட்டு வைக்கிறோம்; மொத்தமாகத் தீ வைத்துக் கொளுத்திவிடுகிறோம் அல்லது கடலில், நீர்நிலைகளில் கொட்டி வைக்கிறோம். இவ்வாறு நாம் இயற்கையில் இருந்து எடுக்கும் பொருட்களை அதனிடம் திரும்பிக் கொடுக்கும்போது இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் வழிமுறைகளையே பின்பற்றுகிறோம்.
ஞெகிழிக் குப்பை
இன்றைய நம்முடைய குப்பையில் முக்கியப் பொருள் ஞெகிழி. இதனுடன் சேர்த்துக் குப்பையைப் புதைக்கும்போது, எரிக்கும்போது, நீரில் வீசி எரியும்போது என்னென்ன கொடுமைகளைச் சூழலுக்குச் செய்கிறோம் என்பதை உணர்ந்து வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டே ஆக வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இப்போதைய அவசரத் தேவை இயற்கையைப் புரிந்துகொள்வதும், அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும்தான்!
தூக்கி எறியும் ஞெகிழிப் பொருட்கள் எப்படி நம்மிடமே திரும்பி வருகின்றன என்பதைப் பற்றி அடுத்து வரும் வாரங்களில் அறிந்துகொள்வோம்.
கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT