Last Updated : 27 Apr, 2019 12:29 PM

 

Published : 27 Apr 2019 12:29 PM
Last Updated : 27 Apr 2019 12:29 PM

விவசாயிகளுக்கு எதிராக பெப்சி வழக்கு

விவசாயிகளுக்கு எதிராக பெப்சி வழக்கு

பெப்சி கோ நிறுவனத்தின் ‘லேஸ் சிப்ஸ்’ தயாரிப்பதற்காக தனித்துவமான FL 2027 என்னும் உருளைக்கிழங்கு விதையை  அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கான காப்புரிமையும் பெப்சி வாங்கிவைத்துள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் சாபர்கட்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நால்வர் பெப்சியின் அனுமதியின்றி FL 2027 உருளைக்கிழங்கு விதையைப் பயிரிட்டுள்ளதாக பெப்சி ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. பெப்சியின் இந்த வழக்குக்கு எதிராக அங்குள்ள விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.

மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன. பெப்சி, தனியார் துப்பறியும் ஆட்களை மேற்குறிப்பிட்ட விவசாயிகளிடம் அனுப்பி ரகசியமாக அவர்கள் பேசுவதை வீடியோ பதிவுசெய்துள்ளது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் வழக்கும் தொடரப்பட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது.

வேளாண் பல்கலைக்கழகப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பத் துறையின் சார்பில் நடத்தப்படும் ‘வணிக முறையிலான காய்கறி மற்றும் பழம் பொருட்கள் தயாரித்தல்’ பயிற்சி நடத்தப்படவுள்ளது.

இந்த மாதம் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.1,500. பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்குத் துறைத் தலைவரை 0422 6611268 என்ற எண்ணில் தொடர்புகொள்க.

கோடை விவசாயம்

ராமநாதபுரம் பகுதியில் கோடை மழை பெய்துவருகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகக் கோடை உழவு செய்யப்பட்டது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் களைச் செடிகள் வளர்வதும் தடுக்கப்படும்.

மக்காச்சோளப் பயிரைத் தாக்கிவரும் படைப்புழுவைக் கட்டுப்படுத்தவும் இந்தக் கோடை உழவு உதவும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கோடை மழையை நம்பி கரும்பைப் பயிரிட்டு வருகின்றனர்.

பஞ்சாபில் அறுவடை செய்யும் மணிப்பூர்த் தொழிலாளர்கள்

தென்னிந்தியாவில் இப்போது உணவு விடுதிகளிலிருந்து கட்டிட வேலை, துணிக் கடை விற்பனை என எல்லா வேலைகளும்  வட இந்தியத் தொழிலளார்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்கள் உண்மையில் அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இப்போது விவசாயக் கூலிகளாகவும் மாறிவிட்டனர். இந்த நிலைக்கு வட இந்திய மாநிலங்களும் விலக்கல்ல. ஆனால், இன்றைக்கு அவர்கள் விவசாயக் கூலிகள் என்ற நிலையிலிருந்து விவசாயிகளாக மாறியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநில விவசாய வேலைகளும் மணிப்பூர் தொழிலாளர்களைச் சார்ந்துதான் இருக்கிறது. விவசாய வேலைகள் நடைபெறும் காலங்களில் மணிப்பூரிலிருந்து பெரும் தொழிலாளர் திரள் பஞ்சாபுக்கு ஆண்டுதோறும் செல்கிறார்கள். சுமார் 5 லட்சம் பேர் இம்மாதிரி பஞ்சாப் வந்து இறங்குவதாகச் சொல்லப்படுகிறது.

தொலைதூர ரயில்களில் வரும் இவர்களை வரவேற்க பஞ்சாப் விவசாயிகள் ரயில் நிலையங்களில் காத்து நின்றது கவனிக்கப்பட வேண்டிய ஒரு சமூக நிகழ்வு. அவர்கள் கோதுமையை, அரிசியை அறுவடைசெய்து கொடுத்துவிட்டுத் தங்கள் மாநிலத்துக்குத் திரும்புவார்கள்

இந்த நிலையில் இன்றைக்குப் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பஞ்சாபில் உள்ள நிலங்களைக் குத்தகைக்குப் பிடித்து அவர்களே விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், பஞ்சாபில் மரபான விவசாயத்தில் கிடைத்த நஷ்டம் காரணமாக அங்குப் பலரும் விவசாயத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.

அந்த இடைவெளிக்குள்தான் மணிப்பூர் தொழிலாளர்கள் விதைக்கத் தொடங்கி உள்ளனர். இவர்கள் கோதுமை, அரிசி போன்ற பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகளைப் பயிர்செய்து வருகின்றனர்.

அவர்கள் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.50,000 வரை குத்தகைப் பணம் தர வேண்டியிருக்கிறது. இந்நிலையில் கோதுமை ஏக்கருக்கு ரூ.25,000 மட்டுமே வருமானம் தரக்கூடியது. ஆனால் கேரட், முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற காய்கறிகள் பயிரிட்டால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம்வரை சம்பாதிக்க முடியும்.

இதனால் மணிப்பூர் விவசாயிகள் பலரும் காய்கறிகளையே முதன்மையாகப் பயிரிடுகிறார்கள். இந்த மணிப்பூர் விவசாயிகள் பஞ்சாபின் புதிய சமூகமாகஉருவாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x