Published : 27 Apr 2019 12:48 PM
Last Updated : 27 Apr 2019 12:48 PM
புத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்திலேயே இயற்கை வழி விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் வாழும் தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் உணர்ந்துவிட்டாலும், விளைந்த பொருட்களை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டுசெல்லும் வழிகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பின்னணியில் சிந்தித்ததன் விளைவாகக் கடந்த 2006-ல் அனந்துவும் அவருடைய நண்பர்களும் இணைந்து, இயற்கை விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். அப்படித் தொடங்கியதுதான் ‘ரீஸ்டோர்’. அதைத் தொடர்ந்து இயற்கை விவசாயப் பொருட்களின் நன்மைகளை உணர்ந்த
இளைஞர் கூட்டம் பெருகவே உண்டானதுதான் இயற்கை விவசாயிகளின் சந்தை (Organic Farmers Market-OFM) இதன் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா, உண(ர்)வு விழாவாக கடந்த ஞாயிறன்று சென்னை, அடையாறில் உள்ள கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் சங்க வளாகத்தில் ஓ.எஃப்.எம். சார்பில் நடத்தப்பட்டது. விவசாயிகளையும் நுகர்வோரையும் இணைக்கும் ஒரு பாலமாக இது அமைந்தது.
உணவோடு உணர்வு
“விவசாயிகளிடம் நேரடியாக நுகர்வோர் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கான வழியை இந்த விழாவின் மூலம் நாங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
இயற்கை விவசாயப் பொருள்களைக் கொண்டு செய்யப்படும் உணவின் மகத்துவத்தைப் பற்றி துறை சார்ந்த வல்லுநர்களின் உரை, பாரம்பரிய உணவு, கலை நிகழ்ச்சிகள் என நல்ல உணவோடு உணர்வையும் நுகர்வோர்களின் மனங்களில் ஏற்படுத்தவே இந்த விழாவை நடத்தினோம்” என்றார் ஓ.எஃப்.எம்மின் நிறுவனர் அனந்து.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். நாம் உண்ணும் உணவே நஞ்சானால், நம்மைக் காப்பவர் யார் என்னும் கேள்விக்குப் பதிலாக அமைந்தது மருத்துவர் கு.சிவராமனின் உரை.
மறைந்த பழக்கம்
நாகரிக வாழ்க்கையில் காய்கறிகள் உண்ணும் பழக்கம் பெரிதும் குறைந்துவருகிறது. துரித உணவான வறுவல்களும் எண்ணெய்யில் பொரித்த உணவுக்கும் சந்தைகள் பெருகி உள்ளன. அவற்றில் மிக மோசமான பதப்படுத்தும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த உணவை உண்ணும் குழந்தைகள் அளவின்றிப் பெருத்துப் பொதிமூட்டைபோல் ஆகிவிட்டனர். இதனால் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் போன்று எண்ணற்ற பெருநோய்கள் அதிகரித்துவருகின்றன.
உலக அளவில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இதை விழாவில் ஒளிபரப்பிய சில காணொலிக் காட்சிகள் தெளிவாக்கின.
செவிக்கும் வயிற்றுக்கும்
நிகழ்ச்சியில் பல துறை சார்ந்த அறிஞர்களின் உரைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவை இடம்பெற்றன.
அத்தோடு விதவிதமான அரிசி ரகங்கள், இயற்கை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட
பானங்கள், காராமணி, மொச்சை போன்ற சிறுதானியங்களைக் கொண்டு தயாரித்த சுண்டல் வகைகள், சீரகச் சம்பா ரக அரிசியைக் கொண்டு செய்யப்பட்ட பிரியாணி போன்றவை நிகழ்ச்சியில் இடம்பெற்றவர்களின் வயிற்றுக்கு விருந்தளித்தன.
செயற்கை உரங்களை நம்பியிருக்கும் ஒரு விவசாயியை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது பெரிய விஷயமல்ல. நாம் ஒவ்வொருவரும் இயற்கையோடு எந்த அளவுக்கு நம்மை ஒப்புக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதற்கான பலன் நமக்கும் நம்முடைய சந்ததிக்கும் கிடைக்கும் என்னும் புரிதலையும் தெளிவையும் உணர்வுபூர்வமாக அளித்தது இந்த விழா.
காட்டுயானம், பூங்கார், குள்ளக்கார், மட்டைக்கார், குழிவெடிச்சான், மைசூர் மல்லி, கருடன் சம்பா, ஒட்டடையான் சிவப்புக்கவுனி, கறுப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா.. இப்படி 51 அரிசி ரகங்களின் பெயரைச் சொல்லி அசத்தினாள், விவசாயிகள் கூட்டத்துக்கு வந்திருந்த ராகவி எனும் சிறுமி. |
நுகர்வோர் தயாரா? நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் மதுமதியிடம் ரேஷனில் இயற்கை விவசாய விளைபொருட்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “நுகர்வோர் பாதுகாப்பும் எங்கள் துறையின்கீழ் வருகிறது. அதனால் பாதுகாப்பான உணவைக் குறித்த விழிப்புணர்வை அளிப்பதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் சிறுதானிய வகையை ரேஷனில் விற்பனை செய்துதரக் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. மக்கள் ரேஷனில் சிறுதானிய வகைகளை வாங்குவதற்குத் தயாராக இருக்க வேண்டும். நுகர்வோர் வாங்குவதற்குத் தயாராக இருந்தால் அதுவும் நடக்கும்” என்றார். |
சான்றிதழ் உத்தரவாதமில்லை இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு, அவை உண்மையிலேயே இயற்கை முறையில் விளைந்த பொருட்கள்தாம் என்னும் தரச்சான்றைப் பெற வேண்டும் என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. வலியுறுத்துவதை எதிர்த்து, அறச்சலூர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். வழக்கின் தன்மை குறித்து அவரிடம் கேட்டோம்: “சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் வேளாண் துறையிடம் இருக்கிறது. ஏற்கெனவே அந்தத் துறைக்கு இருக்கும் பத்து வேலைகளோடு பதினொன்றாவதாகவே அது இருக்கும். அரசு அந்தச் சான்றிதழ் வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வேலைகளை அந்தத் துறையில் ஏற்படுத்த வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்புகளை எல்லா விவசாயிகளுக்கும் எளிமைப்படுத்திவிட்டு, இதைச் செயல்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வசதி எதுவும் இல்லாமல் வழங்கும் சான்று, பிரபல நிறுவனங்கள் தங்களின் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே பலனளிக்கும் விஷயமாக இருக்கும். அப்படி வழங்கப்படும் சான்றிதழ் இயற்கை விவசாய விளைபொருள் என்பதற்கான உத்தரவாதமாக இருக்க முடியாது” என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT