Published : 09 Sep 2014 01:07 PM
Last Updated : 09 Sep 2014 01:07 PM

காட்டுவாசியாக இருப்பது அவர்களுடைய உரிமை!

ஆங்கிலத்தில் ‘அபாரிஜினல் (Aboriginal)' என்ற வார்த்தை உண்டு. லத்தீன் மொழியில் ‘அபாரிஜின்ஸ் (Aborigines)' என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவானது. இதற்கு ‘ஆதியிலிருந்து இருப்பவர்கள்' (ஒரிஜினல்) என்று அர்த்தம்.

சுமார் 16-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்தச் சொல், காலத்துக்கு ஏற்பக் காட்டுவாசிகள், ஆதிவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள் என்று பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சொல்லே இத்தனை மாற்றங்களுக்கு உள்ளாகிறபோது, ஆதியின் எந்தச் சுவடும் மாறாமல் இன்னமும் சில பூர்வகுடிகள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால்... அது பேரதிசயம் அல்லவா?

ஜராவா பழங்குடிகள்

இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் அப்படி வசிக்கும் இனங்களில் ஒன்றுதான் ஜராவா பழங்குடியினம். கற்காலத்தைச் சேர்ந்த இந்தப் பழங்குடிகளை, இப்போதுவரை நாகரிகச் சுவடுகள் தீண்டவில்லை. அந்தத் தீவுகளுக்குச் சென்ற சுற்றுலாவாசிகள் ஏற்படுத்தும் பல்வேறு தொந்தரவுகளால் அந்தப் பழங்குடியினத்தினர் ஊடகங்களில் பதிவானார்களே தவிர, அவர்களுடைய கலாசாரமோ, வரலாறோ பொதுவெளியில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

இதுவரை அந்தத் தீவுகளைப் பற்றியோ அல்லது அந்த இனக் குழுவினரைப் பற்றியோ மானுடவியல் ரீதியிலான ஆய்வேடுகள், ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கலாம். அதேபோல அந்தத் தீவுகளை மையமாக வைத்துப் பல புத்தகங்களும் வந்திருக்கலாம். ஆனால், முதன்முறையாக அந்தத் தீவுகளைப் பற்றியும், ஜராவா பூர்வகுடிகள் பற்றியும் ஒரு நாவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

" ‘தி லாஸ்ட் வேவ்' எனும் இந்த நாவலின் தலைப்பு தீவுகளைச் சுற்றி எழும் அலைகளை மாத்திரம் குறித்ததல்ல. முடிவுறாத இன்னல்களைக் குறிப்பதற்கான உருவகமும்கூடத்தான். ஆம்! அந்தத் தீவுகளை முடிவற்ற சுனாமி தாக்கிக்கொண்டே இருக்கிறது" - ஒரு ஆழ்கடலுக்கான அமைதியுடன் உரையாட அமர்கிறார் அந்த நாவலின் ஆசிரியர் பங்கஜ் சேக்ஷரியா.

சூழலியல் இன்ஜினீயர்

ஹைதராபாத்தில் வசிக்கும் இவர் டெல்லி, பூனேயை மையமாகக்கொண்டு இயங்கும் ‘கல்பவிருக்ஷ்' எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் செயல்பாட்டாளர். அந்தமான் நிகோபார் தீவுகளைக் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், தற்போது நாவலாசிரியரும்கூட.

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டுச் சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியவரிடம் அந்தமான் தீவுகளைப் பற்றி விவாதித்தால், தன் ஆய்வு அனுபவங்களிலிருந்து ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

இலக்கிய முயற்சி

"1994-ம் ஆண்டு என் மாணவப் பருவத்தில் முதன்முதலாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றேன். 1998-ம் ஆண்டிலிருந்து அந்தத் தீவுகளைப் பற்றியும், அங்குள்ள மக்கள், சூழ்நிலையைப் பற்றியும் பத்திரிகைகளில் எழுதி வருகிறேன்.

ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குப் பிறகு என் ஆய்வு அனுபவங்களை வெறும் கட்டுரைகளாக மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் போதாது என்று தோன்றியது. அங்குள்ள பிரச்சினைகளை இன்னும் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பினேன். அதற்கு, வெறுமனே தீவுகளைச் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே எழுத முடியாது. இன்னும் பெரிய களம் தேவைப்பட்டது. அதற்கு நாவல் இலக்கியம் சரியான தளமாக இருந்தது. அப்படித்தான் நாவலை எழுதத் தொடங்கினேன்.

இது சுற்றுச்சூழல் விஷயங்களை மட்டுமே பேசுகிற நாவல் அல்ல. ஒரு காதல் கதையும்கூட. ஆராய்ச்சி அனுபவங்கள், இதழியல் நுட்பங்கள், 'ஆக்டிவிசம்' எனும் உரிமைகளுக்குக் குரல்கொடுத்தல், கற்பனை ஆகிய நான்கும் சங்கமிக்கிற படைப்பாக இது இருக்கும் என்று நம்புகிறேன்!" என்கிறார்.

இயல்பே முக்கியம்

பூர்வகுடிகளின் உரிமைகளுக்கான ஆர்வலராக, பூர்வகுடிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் அதேநேரம் அவர்களைப் பார்த்து அதிசயிப்பதைப் பங்கஜ் விமர்சிக்கிறார்.

"இந்தத் தீவுகளில் சுனாமி வந்தபோது பல்லாயிரக் கணக்கான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்தார்கள். ஆனால் ஜராவா இனத்தினர் மலையுச்சிகளில் இருந்ததால், யாரும் உயிரிழக்கவில்லை. இதுதான் உண்மைக் காரணம். ஆனால் இதைத் தவறாகப் புரிந்துகொண்ட பலர், ஜராவா இனத்தினருக்கு ஏதோ இயற்கையைப் பற்றி பெரிய புரிதல் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அவர்களின் இயல்பான இருப்பை 'ரொமான்டிசைஸ்' செய்கிறார்கள்" என்கிறார்.

மீறப்படும் தீர்ப்புகள்

வெளியாட்களால் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பூர்வகுடிகளின் உரிமைகள் மீறப்படுவதை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. 2002-ம் ஆண்டு பூர்வகுடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முக்கியமான சில உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதில் பெரும்பாலானவை இப்போதுவரை நடைமுறைப் படுத்தப்பட வில்லை.

உதாரணமாக, அந்தமானில் ஜராவா பூர்வகுடிகள் இருக்கும் இடத்தை ஆக்கிரமித்துப் போடப்பட்டிருக்கும் கிரேட் அந்தமான் டிரங்க் ரோடு எனும் சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இன்னமும் அது மூடப்படவில்லை.

நாகரிகம் அவசியமா?

"சாலைகள் அமைப்பதால் சுற்றுலா மேம்படும் என்கிறார்கள். சுற்றுலா மேம்பட்டால் அப்பகுதி மக்களை, அதிலும் குறிப்பாக ஜராவா போன்ற பூர்வகுடிகளை மேம்படுத்தலாம் என்கிறார்கள்.

ஆனால் என்னுடைய கேள்வி, நாம் ஏன் அவர்களை மேம்படுத்த வேண்டும்? அவர்களைப் பண்படுத்துவதில் ஏன் தீவிர ஆர்வம் காட்டுகிறோம்? காடுகளில் வாழ்வது அவர்களுடைய அடிப்படை உரிமை. ஆனால், நம்மை நாமே நாகரிகமானவர்கள் என்று அழைத்துக்கொண்டு, நாகரிகமடைந்து விட்டதாலேயே நாம் உயர்வானவர்கள் என்றும் கருதிக்கொள்கிறோம்.

தப்புமா ஜராவா?

ஆனால், சுற்றுலா என்ற போர்வையில் அங்குள்ள சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுகிறது. ஜராவா தவிர்த்து இன்னும் சில பூர்வகுடியினங்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களில் பலர் தற்போது மதுவுக்கும், புகையிலைக்கும் அடிமையாகி இருக்கிறார்கள். அதற்குக் காரணம் வெளியாட்கள்தான்.

ஓர் உண்மை தெரியுமா? தற்போது ஜராவா இன மக்களின் மொத்த எண்ணிக்கை வெறும் 400தான்! தொடரும் நம்முடைய செயல்பாடுகளால் இந்த எண்ணிக்கையை இன்னமும் குறைக்கப் போகிறோமா ‘நாகரிகமடைந்தவர்கள்' என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்" என்கிறார் பங்கஜ்.என்ன பதில் வைத்திருக்கிறோம்?

நாவலுடன் பங்கஜ் சேக்‌ஷரியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x