Published : 23 Feb 2019 11:46 AM
Last Updated : 23 Feb 2019 11:46 AM
அனாடிடே (Anatidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த சாம்பல் வாத்து (Greylag goose), வாத்துகள் அனைத்துக்கும் முன்னோடி எனக் கருதப்படுகிறது. சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இதன் இறக்கையும், ஆரஞ்சு நிறத்தில் இதன் அலகும் இருக்கும். பாதம் தட்டையாக இருக்கும். அதிக எடை கொண்டது. மற்ற பறவைகளைப் போன்று இதனால் எடுத்தவுடனே பறக்க முடியாது. விமானத்தைப் போல் தண்ணீரின் மீது கொஞ்ச தூரம் தாழப் பறந்து சென்ற பின்னர்தான், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.
கோடைக்காலத்தில் இது இனப்பெருக்கம் செய்யும். முட்டை இட்ட பிறகு, இறகுகளை முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதம் ஆகும். அதுவரை வலசைக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்காக இது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், மற்ற விலங்குகளால் எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதால், பெருங்கூட்டமாகவே இவை வசிக்கும்.
ரஷ்யா, துருக்கி, மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் இந்த வாத்து, குளிர்காலத்தைக் கழிக்க தெற்கு நோக்கி இந்தியா, பர்மா உள்ளிட்ட நாடுகளுக்கு, 20,000 – 25,000 என்ற எண்ணிக்கையில் பெருங்கூட்டமாக வலசை வருகின்றன. தண்ணீரும் உணவும் இருக்கும் இடத்தைத் தேடி இவை வரும். இமயமலையைத் தாண்டியே இந்தப் பறவையும் இந்தியாவுக்கு வருகிறது. அக்டோபர் மாதம் வருகை தரும் இந்தப் பறவை, மார்ச் மாதம் தன் தாயகம் திரும்புகிறது. புல்வெளி, விவசாய நிலம், காயல், ஏரி ஆகிய இடங்களில் அதிகம் காணப்படும்.
ராஜஸ்தானில் உள்ள பரத்பூரில் இந்தப் பறவை அதிகம் காணப்படுகிறது. அங்கு உள்ள புல்வெளிகளுக்கு இடையே உள்ள மணல் மேடுகளின் மீது கூட்டமாக வாழும் இந்தப் பறவையைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நளினம் மிகுந்த அதன் நடை பார்ப்பவர்களின் மனத்தை மயக்கும். இது தண்ணீரில் குளித்து விட்டு, தனது இரண்டு இறக்கைகளையும் சிலுப்பி, தண்ணீரை விசிறி அடிக்கும். அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி. அதை நான் ஒளிப்படமும் எடுத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒளிப்படங்களுள் ஒன்று அது.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT