Published : 09 Feb 2019 11:03 AM
Last Updated : 09 Feb 2019 11:03 AM
உலகில் மிக உயரமாகப் பறக்கக்கூடிய பறவை இனங்களில் பட்டைத்தலை வாத்தும் ஒன்று. வெளிறிய சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்தப் பறவையின் தலையில் இரண்டு பட்டைகள் இருப்பதால், இது பட்டைத்தலை வாத்து என அழைக்கப்படுகிறது. பறக்கும்போது கார் ஹாரன் போன்ற ஒலியை எழுப்பியபடி பறப்பதால், தூரத்தில் பறக்கும்போதே, எழுப்பும் ஒலியைக்கொண்டு அதை எளிதில் இனம்கண்டு கொள்ளலாம்.
பொதுவாக, 30-40 பறவைகள் சேர்ந்து கூட்டமாகவே இவை பறக்கும். இந்தப் பறவையின் தாயகம் திபெத். கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா. மத்திய ஐரோப்பாவின் சில நாடுகளிலும் இது காணப்படுகிறது. அந்த நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக, பல ஆயிரம் அடி உயரம் கொண்ட இமய மலைத் தொடரைத் தாண்டி இந்தப் பறவை இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவின் குளிர்கால விருந்தினர் என இந்தப் பறவையைச் சொல்லலாம். அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகைதரும் இந்தப் பறவை, மார்ச் மாதம் தன் தாயகத்துக்குத் திரும்புகிறது.
இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஷா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தப் பறவையைக் காணலாம். கூந்தன்குளம், கோடியக்கரை போன்ற இடங்களுக்கு இந்தப் பறவை ஆண்டுதோறும் தவறாமல் வருகிறது. ஏரிகளின் ஓரத்தில் இருக்கும் புற்களையும் இலைகளையும் இது உண்ணும். சில நேரம் ஏரிகளில் மூழ்கி பாசி, சிறு மீன், நண்டு போன்றவற்றையும் உண்ணும்.
ஒரு பெண் பறவை பத்து முட்டைகள்வரை இடும். அனைத்தையும் குஞ்சுகளாகப் பொரிப்பதில்லை. பெண் பறவையே அடைகாக்கும். ஆண் பறவை அருகில் காவலுக்கு நிற்கும். குஞ்சுகள் பொரிந்த இரண்டு நாட்களிலேயே, தாயுடன் ஏரியில் நீந்தித் தானே இரை தேடிக்கொள்ளும் திறன் கொண்டவை. கழுகு, பருந்து போன்ற இரைகொல்லிப் பறவைகளிடமிருந்து தாய்ப் பறவை குஞ்சுகளை மறைத்துவைத்து, வளர்த்தெடுக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் குஞ்சுகள் தானே பறந்து செல்லத் தொடங்கிவிடும்.
ஒவ்வொர் ஆண்டும், சரியாக முன்பு வந்த இடத்துக்குத் திரும்ப வரும் பழக்கமும் ஆற்றலும் இந்தப் பறவைக்கு உண்டு. நீர்நிலைகள் அருகிவருவதாலும், ஈரநிலங்கள் அழிவதாலும், இந்தப் பறவைகள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் சூழல் தற்போது நிலவுகிறது. நீண்ட பயணக் களைப்பால் சில பறவைகள் மடியவும் நேரிடுகிறது. இந்தப் பறவையை வேட்டையாடும் பழக்கமும் இந்தியாவில் இருந்தது.
பரத்பூர் பறவைகள் சரணாலயத்திலும் சுல்தான்பூர் தேசியப் பூங்காவிலும் இந்தப் பறவையை நான் முதலில் பார்த்தேன். இந்தப் பறவையைப் பல முறை படமெடுத்திருக்கிறேன். அதன் அழகில் மெய் சிலிர்த்து நின்றிருக்கிறேன். அவற்றில் சில இங்கே...
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT