Published : 19 Jan 2019 11:45 AM
Last Updated : 19 Jan 2019 11:45 AM

குப்பையைக் குறைத்த முன்னோடி இலக்கிய விழா

ஜனவரி 12 முதல் 14வரை சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தி இந்து லிட் ஃபார் லைஃப் ஒன்பதாம் ஆண்டு இலக்கியத் திருவிழாவில் ‘தி இந்து’வின் சுற்றுச்சூழல் அக்கறையும் முன்னிலைபெற்றது. முற்றிலும் குப்பை, கழிவுகளற்ற ஜீரோ வேஸ்ட் (Zero-Waste) விழாவாக இதை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.

 ‘சென்னை கலைத் தெருவிழா’ என்ற அமைப்பைச் சேர்ந்த சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமனும் அவரது குழுவினரும் இந்த முயற்சிக்கு வழிகாட்டி ஒருங்கிணைத்தனர். 12 மாணவர்கள் தன்னார்வலர்களாக  இந்த முயற்சியில் பங்கேற்றனர்.

நீண்ட நாள் இலக்கு

‘ஜீரோ-வேஸ்ட்’ என்பது ஒரே நாளிலோ ஒரு விழாவில் மட்டுமோ முழுமையடைந்துவிடக்கூடிய கொள்கை அல்ல . அது ஒரு நீண்ட நாள் இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கான பயணத்தை இந்த ஆண்டு முதல் ‘தி இந்து’ லிட் ஃபார் லைஃப் தொடங்கியிருக்கிறது. விழாவில் சேர்ந்த குப்பைகளைக் கணக்கெடுத்து எவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கின்றன, அதை வருங்காலத்தில் எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான பரிந்துரைகள் அறிக்கை வடிவில் விழாக்குழுவினருக்கு வழங்கப்பட இருக்கிறது.

விழாவுக்கு வந்த தனியார் வாகனங்களும் கணக்கெடுக்கப்பட்டன. முதல் நாள் முதல் இரண்டு மணி நேரத்தில் 1,087 தனியார் வாகனங்கள் வந்தன. அவற்றில் 446 கார்கள் ஒரு பயணியை மட்டும் சுமந்து வந்தன. விழாவுக்கு வரும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. பொதுப் போக்குவரத்தின் மூலம் விழாவுக்கு வந்தவர்கள் டிக்கெட்டுகளைக் கொடுத்தால் அவற்றுக்குச் சிறு பரிசுகள் தரப்பட்டன.

கடந்த ஆண்டு ‘தி இந்து’ லிட் ஃபார் லைஃப் விழாவில் 2,400 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு அது முற்றிலும் தவிர்க்கப்பட்டது. மூன்று நாட்களும் விழாவில் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்கப்படவில்லை. பபிள்டாப் கேன்களில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது.

அதை எடுத்துக் குடிப்பதற்கும் பிளாஸ்டிக் அல்லாத குவளை வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வீட்டிலிருந்து குடிநீர் எடுத்து வந்தவர்களுக்கு ‘தி இந்து’ சார்பில் சின்னச் சின்ன பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனால்தான் என்னவோ, கடந்த ஆண்டு 8,700 லிட்டர் குடிநீர் செலவானது. இந்த ஆண்டு அது 2,750 லிட்டராகக் குறைந்தது.

சமூக நலனையும் உள்ளடக்கிய கொள்கை

இந்த முயற்சியைப் பற்றிப் பேசிய நித்யானந்த் ஜெயராமன், “விழாக்கள் என்பது ஒருவருக்கு மகிழ்ச்சி அளிப்பவையாகவும் எங்கோ இருக்கும் மற்றொருவருக்கு தலைவலி கொடுப்பவையாகவும் ஆகிவிட்டன. விழாக்களை நாம் பொறுப்புடன் நடத்தினால் அந்தத் தலைவலியைக் குறைக்கலாம். கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு அருகில் இருக்கும் கொருக்குப்பேட்டையில்தான் சென்னை கலைத் தெரு விழா செல்கிறது. இந்த விழாக்களுடன் ஒரு உரையாடல் மூலமாக கொருக்குப்பேட்டைக்குச் செல்லும் குப்பையைக் குறைக்க முயல்கிறோம்" என்றார்.

இந்தத் திருவிழாவை ‘ஜீரோ வேஸ்ட்’ கொள்கையைப் பரப்புவதற்கான தளமாக அவர்  பயன்படுத்தினார். இதைத் தாங்கள் பரிந்துரைத்தபோது ‘தி இந்து’வின் எதிர்வினை மிகச் சிறப்பாக இருந்தது என்கிறார். இந்து சார்பில் இங்கு வைக்கப்படும் ஃபிளெக்ஸ் பேனர்களின் அளவு 7,000 சதுரடியிலிருந்து 4,500 ஆகக் குறைந்திருக்கிறது.  700 சதுர அடி பேனர்கள் துணியால் நெய்யப்பட்டன. இதன் மூலம் உள்ளூர் கலைஞர்களுக்கு ரூ.1,20,000 ஊதியமாகச் சென்றுள்ளது.

“ஜீரோ வேஸ்ட் என்பது சுற்றுச்சூழல் சார்ந்தது மட்டுமல்ல. யார் பயனடைகிறார்கள் என்ற சமூக நலன் சார்ந்ததும் ஆகும்.  வருங்காலத்தில் இதில் நாங்கள் பங்கேற்கிறோமோ இல்லையோ ‘இந்து’ இதை முன்னெடுத்துச் செல்லும். இந்த ஆண்டு எவ்வளவு குப்பை சேர்ந்தது, சுற்றுச்சூழலுக்கு இசைவில்லாத எவ்வளவு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, எத்தனை வாகனங்கள் வந்தன, எங்கெல்லாம் மின்சாரம் பயன்பட்டது இவற்றையெல்லாம் எப்படிக் குறைக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளைக் கொடுப்போம். அவற்றை அவர்கள் அடுத்த ஆண்டும் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x