Published : 26 Jan 2019 12:26 PM
Last Updated : 26 Jan 2019 12:26 PM
சென்னையில் நடந்த ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கிய விழாவில் தமிழ் அமர்வுகளில் ஒன்று உணவு பற்றியது. நாஞ்சில் (தென் தமிழகம்) உணவு பற்றி எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் கொங்கு உணவு பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகனும் உரையாடினார்கள். ஊடகவியலாளர் ஹரிகிருஷ்ணன் சங்கரன் இந்த உரையாடலை ஒருங்கிணைத்தார்.
உள்ளதுகொண்டு உண்ணுதல்
“மேற்குப் பகுதி என்று சொல்லக்கூடிய கொங்குப் பகுதி பெரும்பாலும் காடும் காடு சார்ந்த இடங்களையும் உள்ளடக்கிய முல்லை நிலமாக இருந்த பகுதி. நீர்ப்பாசனம் உள்ள நன்செய் விவசாயம் இங்கு கிடையாது.
20-ம் நூற்றாண்டில் அணைக்கட்டுகள் எல்லாம் வருவதற்கு முன்பாகக் குறைந்தபட்ச நீராதாரம்கூட இருக்கவில்லை. அங்கு இரண்டு மூன்று மாவட்டங்களில் காவிரி ஓடினாலும் நீரைத் தேக்கிவைப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் அப்போது கிடையாது. ஆகையால் பெரும்பாலும் புன்செய் விவசாயம்தான். இன்றைக்கு ஆரோக்கியத்துக்குப் பரிந்துரைக்கப்படும் திணை, சாமை, வரகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள்தான் அங்கு அதிகமாகப் பயிரிடப்பட்டன.
எனக்குத் தெரிந்து 1990கள் வரைக்கும்கூட எங்கள் ஊரில் அரிசிச் சோறு என்பது மிக அரிதானது. இறைச்சியுடன் அரிசிச் சோறு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்பதற்காக எப்போதாவது இறைச்சி சமைக்கும் நாளில் அரிசிச் சோறு ஆக்குவார்கள். குழம்புகளுக்கு எங்கள் நிலத்தில் என்ன பருப்பு விளைகிறதோ அதைத்தான் போடுவார்கள். தட்டப்பயிறு, அவரைப்பயிறு, மொச்சைக்கொட்டை, நரிப்பயிறு ஆகியவற்றைப் பயன்படுத்துவோம்.
எங்கள் பகுதியின் உணவு முறையின் கோட்பாடு ‘உள்ளதுகொண்டு உண்ணுதல்’ என்பதுதான். இன்றைக்கும் இந்த மரபின் எச்சம் தொடர்கிறது. கொங்குப் பகுதியில் நிறைய சின்னச் சின்ன சந்தைகள் உள்ளன. அவற்றில் அந்தப் பகுதியில் விளையும் உணவுக்கு தனியான இடம் இருப்பதைப் பார்க்கலாம்.” என்றார் பெருமாள் முருகன்.
அரிசிச் சோறுதான் அடிப்படை உணவு
“அரிசி, தேங்காய், வாழை - இவை மூன்றும்தான் நாஞ்சில் பகுதியின் முக்கியப் பயிர்கள்” என்று ஆரம்பித்தார் நாஞ்சில் நாடன். மேலும் பேசியவர் சிறு வயதில் வரகு, திணை, சாமை, கம்பு, சோளம் இவற்றையெல்லாம் பார்த்ததுகூட இல்லை. இன்றைய ‘இயற்கை மருத்துவர்கள்’ எல்லாம் அரிசிச் சோறுதான் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். எங்கள் மூதாதையர் மூவேளையும் சோறுதான் சாப்பிட்டார்கள்.
அவர்களுக்கு எந்த நோயும் வரவில்லை. எங்கள் ஊரில் சோறு என்றாலே நெல்லுச் சோறுதான். நெல் எங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. எங்கள் மாவட்டத்தில் மட்டும் 66 வகையான நெல்வகைகள் பயிரிடப்பட்டதாக நாட்டார் வழக்காற்றியிலாளர் அ.கா.பெருமாள் பதிவுசெய்திருக்கிறார். இந்தியா முழுவதும் 6,000 நெல்வகைகள் இருந்தன. ஆகவே எங்களுக்குச் சோறு அடிப்படையான உணவு. இட்லி. தோசை சமாச்சாரங்கள் எல்லாம் விரத நாட்களில்தான்” என்றார்.
மேலும், “நாஞ்சில் உணவுப் பழக்கத்தில் இரண்டாவது முக்கிய இடம் பிடிப்பது தேங்காய். “தேங்காய் சட்னியைத் தொட்டுவிடாதே கொலஸ்ட்ரால் ஏறிடும் என்று மருத்துவர்கள் இன்று சொல்கிறார்கள். என் அம்மாவுக்கு தேங்காய் இல்லாமல் சமையல் செய்ய வராது. அவர் 91 வயதுவரை வாழ்ந்தார். நாங்கள் தோசையில்கூடத் தேங்காய் தோசைதான் சாப்பிடுவோம். ரசம் உள்ளிட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களில் மட்டுமே தேங்காய் சேர்க்க மாட்டோம். எதை உற்பத்தி செய்தோமோ அதைச் சாப்பிட்டோம்” என்று நாஞ்சில் நாடன் கூறினார்.
மறுபுறம் கொங்கு பகுதியில் தேங்காய் மிக அரிதான உணவு என்றார் பெருமாள் முருகன். அவருடைய ‘கூளமாதாரி’ நாவலில் தேங்காய் திருடியவனை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவதை உதாரணம் காட்டி, கொங்குப் பகுதியில் தேங்காய் எவ்வளவு அரிதான விஷயம் என்பதை அவர் சொன்னார். “எங்காவது ஒன்றிரண்டு தென்னை மரம் தென்படுவதே அரிது.
இப்போதுகூட எங்கள் பகுதிகளில் தேங்காய்ச் சட்னியில் உடைத்த கடலைதான் அதிகமாக இருக்கும், இறைச்சிக்குத் தேங்காயைப் பயன்படுத்தவே மாட்டோம். வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அளவைக் கூட்டுவதற்காகத் தேங்காயைத் துண்டாக்கிப் போடுவார்கள்” என்றார் பெருமாள் முருகன்.
ரக்கிரி ஆன நற்கீரை
கொங்கு பகுதியில் ’ரக்கிரி பறிக்கிறது’ என்ற சொல்லாடல் உண்டு. கீரை பறிப்பதைத்தான் அப்படிச் சொல்வார்கள் என்றார் பெருமாள்முருகன். “நற்கீரை என்பது நக்கீரை ஆகி பேச்சுவழக்கில் நக்கிரி அல்லது ரக்கிரி ஆகியிருக்கும்” என்று குறிப்பிட்ட அவர், கொங்குப் பகுதியின் தனித்துவமான கீரைகள் குறித்து மேலும் கூறினார், “கீரையை தனியாகப் பறிக்க மாட்டார்கள். வேலைக்குப் போகும்போதோ வேலை செய்துகொண்டிருக்கும்போதோ வேலையோடு வேலையாக ரக்கிரி பறித்துவருவார்கள். நவீன விவசாயம் வந்த பிறகு நிறைய செடிகொடிகளைக் களைகள் என்று வகைப்படுத்துகிறார்கள்.
ஆனால் விவசாயிகளைப் பொறுத்தவரை எந்தச் செடி-கொடியும் வீணானது கிடையாது. கீரை என்பது தனியாக விளைவதே கிடையாது. கடலை, சோளம் போடும்போது அதற்குள் முளைத்துவரும் செடிதான் கீரை. எங்கள் பகுதியில் முக்கியமான, மற்ற பகுதிகளுக்குத் தெரியாத மூன்று கீரைகளைச் சொல்ல முடியும். பன்னைக் கீரையை கடைந்துதான் சாப்பிட முடியும், பொரியல் செய்ய முடியாது. ராகிக் களிக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். கடைகளில் கிடைப்பதில்லை.
எங்கள் பகுதியில் சில உழவர் சந்தைகளில் கிடைக்கிறது. அதேபோல் தொய்யக் கீரையைப் பொரியலும் செய்யலாம் கடையவும் செய்யலாம். இன்னொன்று குமிட்டிக் கீரை. இது கொஞ்சம் நீளமாக இருக்கும். இதன் இலை வாடாமல்லி இலை போலவே இருக்கும். இதில் கல்குமிட்டி என்ற வகை கொஞ்சம் சிறியதாக இருக்கும்”
நல்ல பசி நல்ல ருசி
கடற்கரைப் பகுதிகள் நிறைந்திருப்பதால் நாஞ்சில் பகுதியில் மீன் முக்கிய உணவாக உள்ளது. பிரசித்திபெற்ற அந்த மீன் உணவு குறித்து நாஞ்சில் நாடன் பகிர்ந்து கொண்டார்,
“மீன் எங்களுக்கு அடிப்படையான உணவு. வெள்ளி, செவ்வாய், கார்த்திகை உள்ளிட்ட முக்கிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் மீன் சாப்பிடாதவர்களைப் பார்க்க முடியாது. மீன்கள் பற்றிய சரியான புரிதல் நமக்கு இல்லை. கன்னியகுமாரி மாவட்டத்தில் உள்ள 64 மீனவ கிராமங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் அங்குள்ள கடற்கரையில் மட்டும் 965 மீன்வகைகள் இருப்பதாகச் சொல்கிறார். அதில் நான்கு மாத்திரம் உண்ணத்தகாதவை. எங்கள் ஊரில் இருந்து 15 மைல் தொலைவில் கடற்கரை. காலை ஆறு மணிக்கு மீன் வந்து இறங்கிவிடும். நான் கோயம்புத்தூரில் கடந்த 30 ஆண்டுகளாக இருக்கிறேன்.
அங்கு சந்தைகளில் நெய்மீன் (வஞ்சிரம்) கேட்பார்கள், கடைக்காரர் கூசாமல் நெய்மீனுக்கான விலையைப் பெற்றுக்கொண்டு மலிவான பாறை மீனைக் கொடுத்துவிடுவார். வாங்குகிறவர்களுக்கு இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாது. சந்தைக்குப் போனால் என்னால் ஐம்பது மீன்களைப் பேர் சொல்லிக் கேட்க முடியும். ஒவ்வொரு மீனையும் சமைப்பதற்கான இலக்கணம் உண்டு. பத்து வருடங்களாக நாஞ்சில் நாட்டு உணவு பற்றிய நூலை எழுதிவருகிறேன். 600 பக்க நூலில் 90 பக்கங்களை மீன்களுக்காக ஒதுக்கியிருக்கிறேன். பல நோய்களைக் குணமாக்கும் சக்தி மீன்களுக்கு உண்டு”.
“உணவில் மேல், கீழ் கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதைத் தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்.” என்ற நாஞ்சில் நாடனின் செய்தியை உள்வாங்கிக்கொண்டு பார்வையளர்கள் உண்ட திருப்தியுடன் அரங்கைவிட்டு வெளியேறினார்கள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT