Last Updated : 02 Sep, 2014 10:00 AM

1  

Published : 02 Sep 2014 10:00 AM
Last Updated : 02 Sep 2014 10:00 AM

கழுகுகளைக் காக்க ஒரு பயணம்

“சின்ன வயதில் எங்கள் ஊரில் பார்த்த சின்னஞ்சிறிய வண்ணப் பறவை முதல் பெரிய பிணந்தின்னிக் கழுகுவரை பல பறவைகளை இப்போது பார்க்க முடியவில்லையே", "வானில் பறவைகள் மீண்டும் வட்டமிட நான் என்ன செய்ய வேண்டும்?"... ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் யார் இப்படிப் பேசியிருப்பார்கள்? பறவை ஆராய்ச்சியாளர்களாக இருக்கும் என்றுதானே நினைக்கி றோம்.

இல்லை, இப்படிப் பேசியது முழுக்கக் முழுக்க கணினி பொறியாளர்களும் விற்பனை பிரதிநிதிகளும் - பிணந்தின்னிக் கழுகுகளை பாதுகாப்பது பற்றிய ஒரு தன்னார்வலர் கூட்டத்தில். இறந்த உயிரினங்களைத் தின்று நம் சுற்றுப்புறத்தைப் பாதுகாத்துவந்த பிணந்தின்னிக் கழுகுகளைத் தற்போது பார்க்கவே முடியவில்லை.

உலகில் மிகக் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்தமாக அற்றுப்போன பறவைகளில் டோடோவுக்கு அடுத்தபடியாகப் பாறு எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள்தான் முதலிடத்தில் உள்ளன என்றார் எழுத்தளார் சுப்ரபாரதிமணியன்.

ஆபத்தான மருந்து

இந்தப் பேரழிவுக்குப் பின் இருப்பது டைகுளோபினாக் (Diclofenac) எனும் கால்நடை மருந்து. இந்த மருந்து 2006-ம்

ஆண்டிலேயே தடை செய்யப்பட்டு விட்டாலும் நம் நாட்டில் இன்னமும் பரவலாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டினார் ஆசிரியர் இளங்கோவன்.

எஞ்சியிருக்கும் கொஞ்சம் கழுகுகளையாவது காப்பாற்ற வேண்டுமானால் முதுமலையைச் சுற்றிலும் 100 கி.மீ. சுற்றளவுக்குக் கால்நடைகளுக்கான டைகுளோபினாக் மருந்தை அறவே தடுக்க வேண்டும் என்ற கருத்தை அருளகம் அமைப்பு முன்வைத்தது.

இந்தப் பறவை இனத்தைப் பாதுகாக்க நாங்கள் எப்படித் தோள் கொடுக்க முடியும் என்று அந்தத் தன்னார்வலர்கள் கேட்டார்கள். மலைகளின் ஊடே பைக் பிரசாரப் பயணம் செல்வது சிறந்த வழி என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

பைக் பயணம்

மேலே குறிப்பிட்ட அந்த 100 கி.மீ. பகுதி தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களை உள்ளடக்கிச் சுமார் 500 கி.மீ. சுற்றுவட்டத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டே நாட்களில் சென்றுவரப் பைக் பயணம்தான் சரியாக இருக்கும். 48 பேர் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். திருப்பூரிலிருந்து புறப்பட முடிவு செய்தோம்.

திருப்பூரில் கொடிகாத்த குமரன் உயிர்நீத்த இடத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினோம். சுற்றுச்சூழலையும் கழுகு உள்ளிட்ட உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு மக்கள் தாங்களாக முன்வருவதை அடையாளப்படுத்தவே அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அன்று குமரன் கையில் தேசியக்கொடி, இன்று இளைஞர் கள் கையில் கழுகுகளைப் பாதுகாக்கும் வாசகங்கள் அடங்கிய கொடி. "இப்பகுதி மருந்துக் கடைக்காரர்களிடம் டைகுளோபினாக்கின் தீமை குறித்து எடுத்துச்சொல்லி, கால்நடைகளுக்கு அந்த மருந்து முறைகேடாக விற்கப்படுவதைத் தவிர்ப்போம். உங்கள் முயற்சிக்குத் தோள் கொடுப்போம்" என்று திருப்பூர் மருந்து வணிகச் சங்கச் செயலர் அசோகன் கூறினார்.

கண்களைத் திறந்தது

இந்தப் பயணம் மேட்டுப் பாளையம்- கோத்தகிரி- ஊட்டி- முதுமலை- கூடலூர்-முத்தங்கா- குண்டல்பேட்டை- ஆசனூர்-சத்தியமங்கலம் வழியாகச் சுமார் 500 கி.மீ. பாதையில் பிரசாரம் மேற்கொண்டது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது 20 பைக்குகள் சீராக அணிவகுத்துச் சென்றது மக்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் என்றாலே கூடிக் கும்மாளமிடுவதற்கு ஊட்டிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இந்த நிகழ்ச்சியில் தகர்ந்தது. நல்ல நோக்கத்துக்காக மழையையும் பொருட்படுத்தாது திருப்பூர் இளைஞர்கள் பேரணி செல்ல முன்வந்ததை மக்கள் பாராட்டினர்.

கர்நாடக எல்லைக்குள் நுழைந்தபோது குண்டல்பேட்டை யில் சிறு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயணம் மேற்கொண்டவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். "இந்தப் பயணத்தில் பங்கேற்க வந்தபோது ஜாலியாக ஊர் சுற்றப் போகிறோம் என்று நினைத்துத்தான் வந்தேன். ஆனால், இந்த இரண்டு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டையும் காட்டுயிர்களையும் நேசிக்க நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார் சக பயணி பழனிச்சாமி. இப்படிப் பட்ட ஆர்வம்தான் பாறுக் கழுகை மட்டுமல்ல, அனைத்து உயிரினங் களையும் காக்கும் ஆதார வேர்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆர்வலர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x