Published : 03 Nov 2018 12:00 PM
Last Updated : 03 Nov 2018 12:00 PM
ஆங்கிலத்தில் ‘ஸ்பாட்டட் டீர்’. தமிழில் ‘புள்ளி மான்’. இந்தியில் ‘சீத்தல்’. பெயரைச் சொன்னாலே உங்கள் மனக் கண் முன்பு, புள்ளி மான் கூட்டம் துள்ளித் துள்ளி ஓடுகின்றனவா? ஆம்… மான் இனத்திலேயே மிகவும் பரவலாகப் பார்க்கப்பட்ட, படமெடுக்கப்பட்ட, வேட்டையாடப்பட்ட, விபத்துக்குள்ளான மான், அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்!
இந்த மான், நெடுங்காலத்துக்கு முன்பு இந்தியாவில்தான் தோன்றியது. காலம் செல்லச் செல்ல நேபாளம், பூட்டான், இலங்கை உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளுக்குப் பரவியது. பிறகு இந்த நாடுகளிலிருந்து, புள்ளி மான்களைத் தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்குக் கொண்டுசென்று வளர்க்கத் தொடங்கினார்கள்.
புல்வெளி நிலங்களும் நீர்நிலைகளும் நிறைந்திருக்கிற காடுகளில் புள்ளி மான்கள் அதிக அளவில் இருக்கும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, மத்தியப் பிரதேச மாநிலம் கன்ஹா தேசியப் பூங்கா, தமிழகத்தில் சென்னை கிண்டி தேசியப் பூங்கா ஆகியவற்றில் புள்ளி மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
மனிதர்களை நெருங்கும் மான்கள்
புள்ளி மான்கள் எப்போதும் தனித்திருப்பது இல்லை. கூட்டமாகவே சுற்றித் திரியும். இதனால், இவற்றுக்குச் ‘சமூக விலங்குகள்’ என்ற பெயர்கூட இருக்கிறது. மனிதர்களைக் கண்டால் கூச்சத்தால் இவை ஓடி மறைந்து கொள்ளும். ஆனால், சென்னையில் கிண்டி தேசியப் பூங்கா, ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டி. போன்ற இடங்களில் தென்படும் புள்ளி மான்கள் மட்டும், இந்தக் கூச்சத்தன்மையை இழந்துவிட்டிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.
காரணம், அங்கு மனிதர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், குடியிருப்புப் பகுதிகள் அதிகரித்து வருவதாலும் அவை மனித நடமாட்டத்துக்குப் பழகிவிட்டன. இதன் காரணமாக, இவை இந்தப் பகுதிகளில் அதிக அளவில் சாலை விபத்துக்கும் உள்ளாகின்றன.
புலி, சிங்கம் போன்றவற்றின் முக்கிய உணவாக இவை இருப்பதால், இவற்றின் ஓட்டம் என்பது இரையைத் தேடுவதைவிடவும், பல நேரம் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இருக்கும். அதனால் இவை எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். இரைகொல்லிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், தான் மட்டுமல்லாது, தன் கூட்டத்தையும் சேர்த்துக் காப்பாற்றுவதற்காக, எச்சரிக்கைக் குரலை எழுப்பிவிட்டு இவை ஓடும். மணிக்குச் சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை இவை!
மான்களுக்கு உதவும் பறவைகள்
இரை தேடிவிட்டு, மரநிழலின் கீழ் வந்தமர்ந்து ஆசுவாசமாக அசைபோட்டுக்கொண்டிருக்கும் இன்பத்தில், மான்கள் தங்களை மறந்திருக்கும். அப்போது, இரைகொல்லிகளின் நடமாட்டம் தெரிந்தால், உடனே அந்த மான்களுக்கு, அந்த மரங்களின் மேலே இருக்கும் மந்திகள் இவற்றை எச்சரிக்கும். எனவே, மந்திகளை ‘புள்ளி மான்களின் நண்பர்கள்’ என்று சொல்லலாம்.
புள்ளி மான்களின் உயிரைக் காக்க மந்திகள் உதவுகின்றன என்றால், மான்களின் உடலைப் பராமரிக்க வால் காக்கைகளும் (ரூஃபஸ் ட்ரீபை) மைனாக்களும் உதவுகின்றன. இவை இரண்டும், புள்ளி மான்களின் உடலில் தொற்றியிருக்கும் சிறுசிறு பூச்சிகளை எடுத்து உண்டு, புள்ளி மான்களின் அசவுகரியத்தைப் போக்குகின்றன.
இந்த மான் இனத்தில் ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கும். அந்தக் கொம்புகள் மூன்று படிநிலைகளாகச் சுற்றிச் சுழன்றிருக்கும். பிற மான் இனங்களில் தென்படும் ‘கொம்பு முட்டி’ சண்டை நிகழ்வுகள் புள்ளி மான்களிடையேயும் உண்டு.
இங்கு நீங்கள் பார்ப்பது, வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புள்ளி மான்களின் படங்கள்!
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT