Last Updated : 03 Nov, 2018 12:00 PM

 

Published : 03 Nov 2018 12:00 PM
Last Updated : 03 Nov 2018 12:00 PM

தோடர் அல்ல, தொதவர்

தமிழகப் பழங்குடியினர் பற்றிய ஆய்வில், மலை மாவட்டமான நீலகிரி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பகுதியைத் ‘திராவிட மொழிகளின் நுண்ணுலகம்’ என்கிறார் பிரபல மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி. இந்தப் பகுதியில்தான், தமிழகத்தில் வாழும் தொல்குடிகளில், பெரும்பான்மையான மானுடவியலாளர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்த தொதவர் (தோடர்) இனத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 2013-ம் ஆண்டுவரை இந்தப் பகுதியில் சுமார் 650 ஆய்வுகள் நடைபெற்றிருப்பதே இதற்குச் சான்று.

‘தோடா’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவர்களது மொழி ‘தொதவம்’. இவர்களைத் தோடா, துடா என்று பலவாறாக அழைத்தாலும், மொழியின் அடிப்படையில் ‘தொதவர்’ என்று அழைப்பதே சரி என்கிறார் ‘திராவிட மொழியியலின் தந்தை’ ராபர்ட் கால்டுவெல்.

‘எருமையின் குழந்தைகள்’ என்று அறியப்படும் இவர்கள், தங்களது மதச்சடங்குகளில் எருமைகளைப் பலிகொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிப் பலிகொடுத்தாலும், இவர்கள் ‘சைவ ஆயர்கள்’ என்று குறிப்பிடும் அளவுக்குச் சைவ உணவை மட்டுமே உண்ணுகிறார்கள். இனக் கலப்பற்ற, நீளமான கொம்புகளை உடைய எருமைகளை வளர்க்கும் இவர்கள், மேய்ச்சல் குடிகளின் வாழ்க்கையைக் கொண்டவர்கள்.

தாங்கள் வணங்கும் தெய்வமான ‘கம்பட்ராயன்’ சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியவர்கள் என்று இவர்கள் நம்புகின்றனர். நாவல் மரத்தை, புனிதமான மரமாக மதிக்கின்றனர். தாங்கள் வாழும் குடியிருப்பை ‘மந்து’ என்று அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் இவர்கள் ‘ஒத்தைக் கல் மந்து’ என்ற பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதையொட்டியே ஆங்கிலேயர்கள் ‘ஒட்டகமண்ட்’ என்று அழைத்தனர். அது பின்னர் மருவி, உதகமண்டலம் ஆகி, பிறகு ‘ஊட்டி’யும் ஆனது. இந்தக் குடியிருப்பின் சிறப்பே, இவர்களது பாரம்பரிய குடில்கள்தாம். எனினும், கால மாற்றத்தால் தற்போது  தொதவர்கள் நவீன வீடுகளைக் கட்டி வாழ்கின்றனர்.

இந்த இனத்தில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பல கணவர் மண முறையும் பெண் சிசுக் கொலையும் இருந்து வந்தன. ஆனால், தற்போது அந்த வழக்கங்களைக் கைவிட்டுவிட்டனர். விவசாயத்துடன், கைவேலைப்பாடு மிக்க ‘பூத்துக்குளி’ எனும் துணிகளை நெய்து, விற்பனையும் செய்து வருகின்றனர்.

இது அவர்கள் அணியும் பாரம்பரிய உடை. அந்த உடைக்கு 2018-ல் புவிசார் குறியீடு கிடைத்தது. இந்த இனத்தவரை, ‘இஸ்ரேலிலிருந்து வந்தவர்கள்’ என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுவதாக இணையத்தில் சில பதிவுகள் காணக் கிடைக்கின்றன. ஜான் ஆக்டர்லோனி எனும் அளவையரால் 1840-களில் வைக்கப்பட்ட இந்த வாதம், மிகவும் தவறானது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த மானுடவியலாளர் ஆண்டனி வாக்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x