Published : 27 Oct 2018 10:42 AM
Last Updated : 27 Oct 2018 10:42 AM
பிட்டு பிட்டு வைப்பதால் இச்சிறிய கருப்பட்டிகளுக்குப் புட்டுக் கருப்பட்டி எனப் பெயர் வந்திருக்கலாம். பிட்டு என்பது புழங்கு மொழியில் புட்டு என விளிக்கப்படுகிறது. கருப்பட்டி காய்ச்சுதலே பெரிய கலை. பருவம் மாறினால் கருப்பட்டியை ஊற்ற இயலாது. கருப்பட்டிக் காய்ச்சுதலில் கடைசி நிமிடங்கள் மிகவும் பரபரப்பானவை. உலகமே இடிந்தாலும் கருப்பட்டி பதத்தைத் தவற விடமாட்டார்கள் பனங்கருப்பட்டி காய்ச்சுபவர்கள்.
இவர்களுக்கு விஞ்சி நிற்பவர்கள்தான் புட்டுக் கருப்பட்டி செய்பவர்கள். பதனீரைத் தெரிவு செய்வதிலிருந்தே இவர்களின் பணி தொடங்குகிறது. பதனீர் புளிக்காமல் இருப்பதற்காக அதில் சுண்ணாம்பு இடுவார்கள். ஆனால் சுண்ணாம்பு சுமார் 4 மணி நேரம் வரைதான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்பு சுண்ணாம்பு சலித்துப் போய்விடும்.
இந்தப் பருவம் பருகுவதற்கு பதனீர் போல சுவையாகவோ கள்ளைப்போல புளித்தோ இருக்காது. நுறைத்துப் பொங்கி எழும். இந்தப் பக்குவத்தில் அடுப்பில் வைத்துப் பதனீரை ஊற்றவேண்டும். சுண்ணாம்போ மண்டியோ சேரக் கூடாது. தெளியவைத்து ஊற்ற வேண்டும்.
பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
இவ்விதமாக எடுக்கப்படும் புட்டுக் கருப்பட்டிகள் கறுப்பாக இல்லாமல் சற்றே மங்கிய நிறத்தில் இருக்கும். சுவையும் பதமும் பிரமாதமாக இருக்கும். சிவ பெருமான் புட்டுக்கு மண் சுமத்த கதையில் எந்தப் புட்டு என்று கேட்டால் இந்தப் புட்டுக் கருப்பட்டிக்காகத்தான் எனத் தாராளமாகச் சொல்லிவிடலாம்.
புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.
காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT