Published : 04 Aug 2018 11:08 AM
Last Updated : 04 Aug 2018 11:08 AM
மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated bulbul), தென் இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய பறவை. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, செஞ்சி மலை, வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் பார்க்க முடியும்.
‘இங்கெல்லாம் சென்றால், பார்க்க முடிகிற பறவையா மஞ்சள் தொண்டை சின்னான்?’ என்றால், சிறிது சிரமமே! காரணம் மலை அடிவாரத்தில் பறவையைப் பார்க்க முடிவதில்லை. மலைகளின் மேல் காணப்படக்கூடிய பறவை என்பதால், மலை மேல் சென்று அமைதியாக அமர்ந்துகொண்டால், சிறிது நேரத்தில் பார்க்க முடிகிறது. செஞ்சியில் இதுபோலவே செய்தோம்.
மலையின் கீழ் நிறையப் பறவைகளைப் பார்க்க முடிந்தாலும், இரண்டு பறவைகளைப் பார்க்க மலை மேல்தான் ஏற வேண்டும் என்பதால், மேல் நோக்கி நடந்தோம். என்னுடன் வந்த நண்பர் கலைமணி, செஞ்சி மலையில் குடியிருப்பவர். இவர் வீடு திருவண்ணாமலையில் இருந்தாலும் மஞ்சள் தொண்டை சின்னானைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருவதால் பெரும்பாலும் இவர் இந்த மலைகளில், தன் வாழ்க்கையை நடத்தும் அளவுக்குச் செஞ்சி மலையைக் கரைத்துக் குடித்திருக்கிறார். செஞ்சியைச் சுற்றி மொத்தம் நாற்பது மலைகள் உள்ளன. மஞ்சள் தொண்டை சின்னானைப் பார்ப்பதற்கு இந்த நாற்பது மலைகளிலும் அவர் ஏறி இறங்கியிருக்கிறார்.
அவர் சொன்ன இடத்தில் அமர்ந்துகொண்டு பறவையின் வருகைக்காகக் காத்திருந்தோம். அப்போது ஒரு மஞ்சள் தொண்டை சின்னான் வந்து எங்களையும் பார்த்துவிட்டுப் போனது. பாறை இடுக்கில் கூடு கட்டி, வருடத்துக்கு இரண்டு முட்டைகள் இடுகிறது. இவற்றின் உணவு, அத்திப் பழங்கள்.
‘இரைகொல்லிப் பறவைகள் அருகில், மஞ்சள் தொண்டை சின்னான் வாழ்வது ஆச்சரியம். ஆனால், இந்தப் பறவையை இரைகொல்லிப் பறவைகள் கொன்று சாப்பிடுவதை இதுவரை பார்த்ததில்லை. மற்ற சின்னான் வகைப் பறவைகளைச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். வருடம் ஒருமுறை இடும் இரண்டு முட்டைகளையும் சரியாகப் பராமரித்து, இரண்டு குஞ்சுகள் அதிலிருந்து வருவதைப் பார்த்திருக்கிறேன். இதுவரை இதன் எதிரி என்று எதையும் பார்த்ததில்லை என்ற தகவல்களை கலைமணி தந்தார்.
மஞ்சள் தொண்டை சின்னான் குறைந்து வருவதற்கு முக்கியக் காரணம், இவற்றின் வாழிடம் அழிக்கப்படுவதே! இவை வாழும் பாறைகள் வெட்டி எடுக்கப்படுவது, மலைகளை வெடி வைத்துத் தகர்ப்பது, சுரங்கம் தோண்டுவது போன்ற நடவடிக்கைகளால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பலரைப் பார்க்க முடிந்தது. இந்தியர்களுக்கு 15 ரூபாய், வெளிநாட்டவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. கேமராவுக்கு டிக்கெட் இல்லை. ஆனால், வீடியோ கேமரா கொண்டு சென்றால் டிக்கெட் வாங்க வேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் மலை ஏற அனுமதியில்லை.
பறவை நோக்கர்கள், அந்த இடத்தைப் பற்றி நன்கு தெரிந்த நபருடன் சென்று, ஓரிடத்தில் அமர்ந்துகொண்டால் மஞ்சள் தொண்டை சின்னான், பொறி வல்லூறு போன்ற அரிய பறவைகளைப் பார்க்க முடியும்.
கட்டுரையாளர், இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: lapwing2010@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT