Published : 14 Jul 2018 10:02 AM
Last Updated : 14 Jul 2018 10:02 AM

கற்பக தரு 14: அன்னமிடும் அரிவட்டி

 பனை ஓலைப் பெட்டிகள் நிறைந்திருந்த குமரி மாவட்டத்தில் ‘ப’னாவை ‘வ’னாவாக, அழைக்கும் வழக்கம் உண்டு. ஆகையால்தான் நீர் வார்க்கும் பெட்டி ‘இறை வட்டி’ என அழைக்கப்பெற்று பின் மருவி றாவட்டியாகி வட்டியெனச் சுருங்கிப்போனது. அவ்விதமாகவே அரிசி வடிக்கும் பெட்டியை ‘அரிவட்டி’ என அழைக்கலாயினர்.

அரிவட்டியை முடையும் முறை மிகவும் வித்தியாசமானது. மூன்று அடுக்குகளாகச் செல்லும் வரிசைகளைக் கொண்டது. அடிப்படையில் சுளகின் பின்னல்களை ஒத்திருக்கும் இது, மேலெழுந்து வரும்போது மிகவும் சிக்கலான பின்னல்களாக மாறிவிடும். முக்கு மடக்குவது தனித்திறமை. ஆகவே, சிலர் அடித்தட்டு மட்டும் செய்துவிட்டு, அனுபவசாலிகளிடம் மீதி வேலையை ஒப்படைத்துவிடுவார்கள். இந்தப் பின்னல்களில் ஆங்கில ‘V’ வடிவம் அமைந்திருப்பதைக் காணலாம். இவை, பழங்குடியினரிடம் காணப்படும் பின்னல்களை ஒத்திருப்பது அதிசயம் அல்ல. பனை சார்ந்தவர்கள், தொல்குடியினர்தானே?

பெட்டிக்கு மிஞ்சி பாய்

அரிவட்டியின் தனித்துவம், அது குமரி மாவட்டத்தில் மட்டும் செய்யப்படும் ஒரு பெட்டி வகை. பெரும்பாலும் குருத்தோலைகளிலிருந்து பெறப்படும் ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்பட்டாலும், இன்று குருத்தோலைகள் கிடைப்பது அரிதானபடியால் சாரோலை ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்படுவது, இன்றைய வழக்கமாக இருக்கிறது.

இதற்கான ஈர்க்கில் எடுப்பது என்பது சற்றே கடினமான வேலை. ஈர்க்கிலோடு சிறிது ஓலையும் இருக்கும்படியாய் முதலில் வார்ந்து எடுத்துவிடுவார்கள். மீதமிருக்கும் ஓலைகள் வீணாய்ப் போய்விடாமல் இருக்க அதில்தான் பாய் முடைவார்கள். வகிர்ந்தெடுத்த ஈர்க்கிலை இரண்டாகக் கிழித்தே அரிவட்டி செய்வார்கள்.

ஒருவகையில் குமரி மாவட்டத்தில் அரிவட்டி முடைவோர் அனைவருமே பாய் முடையத் தெரிந்தவர்களாக இருப்பது ஏன் என்பதற்கு விடை இதன்மூலம் கிடைத்துவிடுகிறது. ஓலையின் ஒரு பகுதியையும் வீணடிக்காமல் சிக்கனமாக மட்டுமல்ல பயனுள்ள வகையிலும் பெட்டிகளைப் பின்னியிருக்கின்றனர், நம் முன்னோர்கள்.

மண வீடுகளில் ‘மண’ப்பெட்டி

அரிவட்டியின் மேல் பகுதியில் ஒரு கிரீடம் போன்ற அமைப்பு பின்னலின் எதிர்த்திசையில் சீராகச் செல்லும். அதற்குக் காரணம், பின்னல் விடுபடாமல் இருக்க ஏற்படுத்தப்பட்ட பயன் முறைமைதான்.

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுவையான காலை உணவு புட்டுதான் (பிட்டு). புட்டு செய்ய அரிசியைத் தண்ணீரில் ஊறப்போட்டுப் பின்னர் உரலில் இட்டுக் குத்தி மாவைச் சலித்தெடுப்பார்கள். ஊறப்போட்ட அரிசியை வடித்து உலர்த்தி எடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் அரிவட்டி தவறாது இடம்பெற்றிருக்கும்.

இதுவும் திருமண வீடுகளின் சந்தைப் பொருட்களின் பட்டியலில் தவறாது இடம்பெறும். அரிசியைக் கழுவி நீர் வடித்து உலையில் போட அரிவட்டிகள்தான் ஏற்ற கருவி.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, அரிவட்டியில்தான் திருமண வீடுகளில் சோற்றை எடுத்து வந்தார்கள். ஓலையைத் தாண்டி பிடித்திருப்பவரை சுடு சோறு உறுத்தாது. அதைக் குவித்து சோற்றை இலையில் போடும்போது எழும் மணம், பசியைத் தூண்டும்.

50 ரூபாய்க்கு…

புட்டு அவித்து வைக்க, காய்கறிகள் இட்டு வைக்க எனப் பல பரிணாமங்கள் கொண்டது என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சில அரிவட்டிகள் கண்டிப்பாக இருக்கும்.

மிகப் பெரிய அரிவட்டிக்குப் பெரிய ஓலைகளில் 10 அடுக்கும் சிறிய பெட்டிகளுக்குச் சிறிய ஓலைகளில் ஏழு அடுக்குமாக முடைந்து கடைகளுக்குக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பெட்டியின் விலையும் தோராயமாக 50 ரூபாய்க்குக் கிடைப்பது, சாமானியனும் வாங்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்புவரை சலிப்பில்லாமல் வீடுகளில் புழங்கிவந்த இதை முடைவோர், தற்போது அரிதாகி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த உத்தரங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் மேரி (94424 78407), 40 வருடங்களுக்கும் மேலாக இவற்றை முடைந்து வருகிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x