Published : 06 Jul 2018 07:09 PM
Last Updated : 06 Jul 2018 07:09 PM
ப
னை மரங்கள் தமிழ் இலக்கியம் முழுவதும் விரவியிருந்தாலும் பனை சார்ந்த பொருட்கள் வெகு அரிதாகவே இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் அசையும் காட்சிகளுடன் பதிவு செய்யப்பட்டவற்றுள் முதன்மையானது, முறம் கொண்டு புலியை விரட்டிய தமிழ் மறப்பெண் குறித்த பதிவு.
இரு வகையில் இதைப் பொருள் கொள்ள இயலும். ஒன்று, பெண்ணின் வீரம் என்பதாக இதுவரை நிலவிய பொருள். மற்றொன்று, முறத்தின் உறுதி. இவ்விரண்டையும் சேர்த்து நாம் நோக்கும்போது முற்காலங்களில் நெல் அறுவடையின்போது, பதரை (சாவி) அகற்ற வட்ட வடிவில் நின்றுகொண்டு முறத்தையே வீசுவார்கள். கடின உழைப்பில் மெறுகேறிய ஒரு பெண்ணால்தான் இது சாத்தியம் என்பது புலனாகும்.
தமிழகத்தின் தனித்துவ வடிவம்
பனை மரத்தின் ஓலை, ஈர்க்கில், மட்டைகளைக் கொண்டு முறத்தை முடைவார்கள். ஈர்க்கில் கொண்டு செய்யப்பட்ட ஒரு தட்டை முதலில் செய்து வைத்துக்கொண்டு, மட்டைகளில் ஓலையைக்கொண்டு இணைப்பதுதான் முறம்.
பல்வேறு வகையான முறங்கள் இருந்தாலும், புடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறத்தையே இங்கு நாம் காணவிருக்கிறோம். முறத்தின் வடிவம் கொம்பில்லாத மாட்டின் முகத்தை ஒத்திருக்கும். இந்த வடிவம் அதிசயமானது. உலகில் பல்வேறு வடிவங்களில் முறம் பயன்பாட்டில் இருந்தாலும், வேறு எங்கும் இல்லாத தனித்துவமான வடிவமே நமக்கு வாய்த்திருக்கிறது. இதை ‘சுளவு’, ‘சுளகு’ என்றும் தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்.
வழக்கொழிந்து போன கலை
தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் அடுக்களையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பயன்பாட்டுப் பொருள் முறம். சோளம், காணம், கேழ்வரகு போன்றவற்றைப் புடைக்க, காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது முறம். அரிசியில் உமி, கல் நீக்குவதற்கு இதைவிட வேறு சிறந்த கருவி கிடையாது.
முறத்தைப் பயன்படுத்துவது வழக்கொழிந்து போன ஒரு கலை. புடைக்க வேண்டியவற்றை முறத்தில் இட்டு வானத்தை நோக்கி எம்பவிட்டு, பின்னர் அவை சிதறாமல் முறத்தைக் கொண்டு லாகவமாகப் பிடிப்பது சிறந்த பயிற்சியால் மட்டுமே சாத்தியம். இவ்விதம் தூக்கிப்போட்டுப் பிடிக்கும்போது பதர்கள் பறந்துவிடும், கற்கள் அடியில் சேர்ந்துவிடும், குருணைகள் முன்பாகக் குவிந்துவிடும்.
தொன்மையான ஓலைத் தொடர்பு
அறுவடை நேரத்தில் ஒரு சேர 7 முறங்களை வாங்கி விசிறுவது வழக்கம். இல்லாவிட்டால் அருகிலுள்ள வீட்டினரிடம் இரவல் வாங்கிப் பயன்படுத்துவதும் உண்டு. திருமணத்தின்போது சீர்வரிசையில் பெண்களுக்குக் கண்டிப்பாக முறம் ஒன்றையும் கொடுத்து அனுப்புவார்கள். இன்றைய சூழலில் நியாய விலைக் கடையில் அரிசி வாங்குபவர்கள் அனைவருக்கும் முறம் ஒரு இன்றியமையாத கருவி. பல்வேறு நாட்டார் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் சாமிக்குப் படைக்கும் பூஜைப் பொருட்கள் முறத்தில் வைத்தே படைக்கப்படுகின்றன. தொன்மையான ஓலைத் தொடர்பு மனிதனுக்கு இன்றும் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று.
பல்வேறு மசாலா பொருட்களை வெயிலில் காய வைக்க இன்றும் முறம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. முறம் நமது பாரம்பரியத்தின் அடையாளம். இன்று இதை இழப்பது என்பது, இது சார்ந்த அருகிவரும் தொழிலாளர்களையும் சேர்ந்து இழப்பதுவே.
பணக்குடியிலுள்ள ராமகிருஷ்ணன் (86808 80385) கடந்த 40 வருடங்களாக முறத்தை மட்டுமே முடைவதில் தேர்ச்சி பெற்றவராக இயங்கிவருகிறார். சிறந்த முறம் ஒன்றைச் செய்ய 300 ரூபாய்வரை ஆகும் என்கிறார். சிறந்த முறம் பேணப்பட்டால் 15 வருடங்கள்வரை பயன்படுத்த இயலும். ஒரு 300 ரூபாய் ஒதுக்கி, இவர்களது வாழ்வை உயர்வடையச் செய்யலாமே?
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT