Published : 21 Apr 2018 10:22 AM
Last Updated : 21 Apr 2018 10:22 AM

கற்பகத் தரு 02: கிரீடமான பனை நார்

லகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பனை வகைகள் இருக்கின்றன. நாம் அறிந்த தென்னை, பேரீச்சை, ஈச்ச மரம் போன்ற மரங்கள் பனை (அரிகேசியே) என்ற வகைப்பாட்டில்தான் வரும். அரிகேசியே குடும்பத்தில் கொடிகள், புதர்கள் போன்றவையும் காணப்படும். ‘பொராஸஸ்’ எனும் தாவரப் பேரினத்தில் பொராஸஸ் எத்தியோபம், பொராஸஸ் அகியாசி, பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர், பொராஸஸ் ஹீனியானஸ், பொராஸஸ் மடகாஸ்காரியென்ஸிஸ் என ஐந்து வகையான மரங்கள் காணப்படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் 18 வகை பனை மரங்கள் காணப்படுகின்றன.

நம்மூர் பனை (பொராஸஸ் ஃபிளாபெல்லிஃபர்), தமிழக மாநில மரம்! இது 100 அடிவரை உயர்ந்து வளரும் தன்மையுடையது. இதன் தண்டுப் பகுதி மிக உறுதியான புறப்பகுதியை உடையது. இதன் உட்புறம் மிகவும் மென்மையாகக் காணப்படுகிறது. இதன் வெளிப்புறப் பகுதியை எடுத்து, கூரை வேயவும் பல்வேறு மரம் சார்ந்த பணிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இதன் உச்சியில் சுமார் 24 மட்டைகளும் அத்தோடு இணைந்த ஓலைகளும் காணப்படும். இவை சுமார் இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளம்வரை வளரும் தன்மை கொண்டவை.

ஆண் பனை, பெண் பனை

பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என இரு வகைகள் உண்டு. விரல்கள் போன்று நீளமாகப் பாளைகள் வந்தால் அதை ‘அலகு பனை’ (ஆண் பனை) என்றும் பனம்பழமாக மாறும் குரும்பைகள் உள்ள மரங்களை ‘பருவப் பனை’ (பெண் பனை) என்றும் அழைப்பார்கள்.

பனை மட்டையை மூன்றாகப் பிரித்து நமது முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர். மட்டையின் இருபுறமும் உள்ள கருக்கை அரிவாளால் சற்றே தேய்த்துவிட்டு, அதைச் சிப்பம் கட்டும் பணிக்குப் பயன்படுத்தினர். மட்டையின் உள்புறம் இருக்கும் நாரை ‘அகணி’ என்றும் வெளிப்புறம் இருக்கும் பகுதியை ‘புறணி’ என்றும் பகுத்துப் பயன்படுத்தினர். அகணி நார் மிகவும் வலிமை வாய்ந்தது.

ஆகவே, ‘ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனையின் பலம்’ என்ற சொலவடை வழக்கில் உண்டு. நாம் வேகமாக இழந்துவரும் பனை பயன்பாட்டுப் பொருட்களில் இதுவும் ஒன்று. நமது பண்பாட்டில், பனை நாருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நார் முடி சேரல்’ என்பது தமிழ் மன்னனுக்குக் கிடைத்த பட்டம். அதாவது பனை நாரைத் தனது கிரீடமாக அணிந்தவன் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

ஆபத்தில் ‘ஈர்க்கில்’

பனை ஓலைகளையும் மூன்றாகப் பிரிப்பது தமிழக வழக்கம். உட்புறமிருந்து துளிர்த்துவரும் இளம் ஓலைகளை ‘குருத்தோலை’ என்பார்கள். தந்த நிறத்தில் காணப்படும் குருத்தோலைகள் ஒரு பனை மரத்தில் ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும். பசுமையாகக் காணப்படும் ஓலைகளை ‘சாரோலை’ என்பார்கள். இவை பெருமளவில் பனை மரத்தில் காணப்படும். சுத்திகரிக்கப்படாத பனை மரத்தில் 24 முதல் 40 சாரோலைகள்வரை இருக்கும். காய்ந்துபோன ஓலைகளை ‘காவோலை’ என்பார்கள். இவை பனை மரத்தோடு சேர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

பனை ஓலையின் நடுப் பகுதியில் தடித்த நரம்பு இருக்கும். அதை ‘ஈர்க்கில்’ என்பார்கள். ஈர்க்கில், பனை மரத்தின் ஒரு முக்கிய பாகம். நமது முன்னோர்கள் ஈர்கிலின் தன்மைகளை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள். இன்று அந்த பாரம்பரிய அறிவு நம்மை விட்டு அகன்றுவிடும் ஆபத்தில் உள்ளது.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்

தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x