Published : 16 Jun 2018 11:58 AM
Last Updated : 16 Jun 2018 11:58 AM
வி
வசாயிகள் பலரும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நெல் சாகுபடி செய்துவருகின்றனர். அதுவும் தற்போது தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தால் மழை எப்போது பெய்யும், வெயில் எப்போது அடிக்கும் எனத் தெரியாமல் பலரும் வேளாண்மையில் ஈடுபட யோசித்து வருகின்றனர். சிலர் வேளாண்மையைத் துறந்து மாற்றுத் தொழிலுக்கும், சிலர் வேளாண் நிலங்களில் யூகலிப்டஸ், சவுக்கு உள்ளிட்ட பணப் பயிர்களுக்கும் மாறிவிட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை போன்ற பகுதிகளில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பல விவசாயிகளும் ஆண்டுக்கு ஒரு முறை முந்திரிக் கொட்டை அறுவடை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், ஆண்டுக்கு 3 முறை முந்திரி அறுவடை எடுத்து அசத்தி வருகிறார் செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை உழவர் வீரமணி.
விதையே வெற்றிக்கு வழி
அந்த ரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றதும் “ரகசியம் எதுவும் இல்லை. லாபகரமான முந்திரி சாகுபடிக்குத் தரமான விதையைத் தேர்ந்தெடுப்பதே முதல் படி” என்று சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“நான் வைத்திருக்கும் முந்திரிக் கன்றுகள் அனைத்தும் ஒரு வருடத்தில் காய்ப்புக்கு வந்துள்ளன. முறையான பராமரிப்பு இல்லை என்றால் காய்ப்புக்கு வர மூன்று வருடங்கள் பிடிக்கும். முந்திரி மரக்கன்றுகள் நட ஆடி மாதமே சிறந்தது.
நன்கு விளைந்த விதைகளை 15 நாட்கள் வெயிலில் காயவைத்து, பின்பு ஆறு மாதம் இருட்டறையில் வைக்க வேண்டும். முந்திரியைப் பொறுத்தவரை விதை உறக்கம் என்பது முக்கியம். பின்னர், விதைகளை மாட்டு சாணப்பாலில் போட்டு ஒருநாள் முழுவதும் ஊற வைத்து, அதில் மிதக்கும் விதைகளை எடுத்துவிட வேண்டும். மிதக்கும் விதைகள் முளைக்கும் திறனற்றவை.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை நஞ்சில்லா மண் கொண்ட பாக்கெட்டில் தலைகீழாக நட்டு, தேவையான அளவு தண்ணீர் தெளித்து வரும் பட்சத்தில் ஏழு நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். பின்னர், அந்தக் கன்றுகளை மூன்று மாதம் வளர்க்க வேண்டும்” என்றவர், முந்திரி மரக்கன்றுகளை நடுவதற்கு எப்படிக் குழியைத் தயார் செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.
கன்றைக் காக்கும் குழி
“முந்திரிக் கன்று நட, அதற்கேற்ற குழியைத் தயார் செய்வது மிகவும் முக்கியம். இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் குழியை வெட்டி, அதில் மாட்டு எருவைக் கொட்டி, மண்ணைக் கலக்க வேண்டும். பின்னர் 2 நாட்களுக்கு ஒருமுறை அந்தக் குழியில் உள்ள மண்ணையும் எருவையும் கலந்துகொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து வாரங்கள் இந்த வேலையைச் செய்து முடித்தால், முந்திரிக் கன்று நடும் பட்சத்தில் எரு கலந்த மண், அந்தக் கன்றை ஏற்றுக்கொண்டு உயிர் கொடுக்கத் தயாராகும்.
மேலும், கன்று நடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு குழி ஒன்றுக்கு 100 கிராம் வேப்பம்புண்ணாக்குப் போடுவது, வேரில் பூச்சி வராமல் இருக்க உதவும். மேலும், கன்று வைக்கும்போது பெருங்காயக் கரைசலைத் தெளித்தால், எந்தப் பூச்சியும் கன்று அருகே நாடாமல் பார்த்துக்கொள்ளும்.
முந்திரிக்கன்று நடும்போது கன்றை நட்டு சுற்றிலும் காற்றுப் புகாத வகையில் நன்கு தடுப்பு அமைக்க வேண்டும். பின்னர், மண்ணின் தரத்தைப் பொறுத்து நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து பராமரித்து வந்தால், ஒரே வருடத்தில் காய்க்கும் பக்குவத்தை முந்திரிக் கன்று பெற்றுவிடும்” என்றார்.
வண்டுகளுக்கு ஆமணக்கு
இவரது வயலில், முந்திரி மரக்கன்று மட்டுமல்ல கடலை, உளுந்து, ராகி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்களுக்குக் கொடுக்கப்படும் எரு, முந்திரிக் கன்றுகளுக்கும் சென்றடைவதால் முந்திரி காய்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
“தவிர பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் மரக்கன்றுகள் எப்போதும் செழிப்பாகவே இருக்கும். மேலும், மரங்களில் சில கிளைகள் காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்படும். அதை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மரங்களை அவை பாதிக்கும்” என்றார்.
முந்திரிகளுக்கு என சில வண்டுகள் உள்ளன. இவை மரங்களின் பட்டையில் தங்கி முட்டையிட்டு, மரங்களைத் துளையிட்டு வாழும் வகையைச் சார்ந்தவை. மரங்கள் துளையிடப்படுவதால் காய்ந்து சாகும் நிலை ஏற்படும். அதைக் கட்டுபடுத்த சில ஆலோசனைகளைத் தருகிறார் வீரமணி.
“ஆமணக்குக் கொட்டைகளை மிக்ஸியில் நன்கு அரைத்து, வயலில் அதைச் சிறுசிறு பானைகளில் போட்டு ஆங்காங்கே வைக்க வேண்டும். அப்போது அதிலிருந்து வீசும் வாசனையால் ஈர்க்கப்பட்டு, வண்டுகள் அதைச் சாப்பிட வரும்போது, பானைகளில் சிக்கி இறந்துவிடும். இதன் மூலம் வண்டுகளின் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்” என்றார் அவர்.
இடைவெளி இருக்கட்டும்
முந்திரி மரக்கன்றுகளுக்கு, இடைவெளி மிக முக்கியம். ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்கும் அதிகபட்சமாக 20 அடி இருந்தால் மட்டுமே கன்றுகள் சிறப்பாக வளரவும் காய்ப்பு அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
“ஏக்கர் ஒன்றுக்கு அடர் நடவு எனில் 180 மரக்கன்றுகள் நடலாம். கொஞ்சம் இடைவெளி விடும்போது 100 முதல் 120 வரை நடலாம். இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால், மரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 120 கிலோ வரை முந்திரக்கொட்டை எடுக்க முடியும். சாதாரணமாகப் பராமரிப்பு இல்லாத மரம் 20 கிலோ மட்டுமே காய்க்கும்” என்றார் வீரமணி.
முந்தியிருக்கச் செய்யும் முந்திரி!
வீரமணி தொடர்புக்கு: 89403 62614
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT