Published : 30 Jun 2018 12:39 PM
Last Updated : 30 Jun 2018 12:39 PM
நா
ன் காட்டுயிர் ஒளிப்படத் துறைக்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் சிங்கங்களைப் படமெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தான்சானியா நாட்டின் செரங்கிட்டி பூங்காவில்தான் சிங்கக் கூட்டம் ஒன்றை முதன்முதலில் பார்த்தேன். தலையைச் சிலுப்பிக்கொண்டு அவை கம்பீரமாக நிற்பதைப் பார்த்ததும் மெய்மறந்து நின்றேன்.
அங்கே சென்ற இரண்டாவது நாள், காட்டுக்குள் ‘சஃபாரி’ சென்றோம். அங்கு மரம் ஒன்றில் பறவைகள் கூட்டம்போல ஏதோ தென்பட்டது. உடனே அதை நோக்கிச் சென்றேன். பக்கத்தில் செல்லச் செல்லத்தான் அவை பறவைகள் அல்ல, சிங்கங்கள் என்பது தெரியவந்தது. பத்துப் பதினைந்து சிங்கங்கள் அந்த மரத்தில் தூங்கிக்கொண்டிருந்தன. ஓநாய்கள் போன்ற விலங்குகள் சிங்கக் குட்டிகளை வேட்டையாடி சாப்பிடும் என்பதால் இந்த ஏற்பாடு.
அந்தச் சிங்கங்களுக்குக் காவலாக அந்தக் குடும்பத்தின் தலைவி, அதாவது சிங்கக் குட்டிகளின் தாய் மட்டும் தூங்காமல் கண்காணித்துக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் கண் விழித்துக் கிடந்ததாலோ என்னவோ, அதற்கும் தூக்கம் வந்துவிட்டதுபோல. இரண்டு நிமிடங்கள் அப்படியே தூங்கிவிட்டது. ‘கேட் நேப்’ (cat nap) என்பதை அப்போதுதான் நேரடியாகப் பார்த்தேன். அவை தூங்குவதுகூட அவ்வளவு அழகாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த, பல முறை பிரசுரமான என் ஒளிப்படங்களில் இதுவும் ஒன்று.
20 மணி நேர அசைபோடுதல்
சிங்கங்கள், பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. புலி, சிறுத்தை போன்று பூனைக் குடும்பத்தைச் சார்ந்த இதர விலங்குகளைப் போல் தனித் தனியாக அலைந்துகொண்டிருக்காமல், சிங்கங்கள் எப்போதும் குடும்பமாகவே திரியும். சிங்கங்கள் ஒருமுறை சாப்பிட்டால், 20 மணி நேரத்துக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருக்கும். இவற்றுக்குத் தண்ணீர் மிகவும் அவசியம் என்பதால், பெரும்பாலும் நீர்நிலைகளுக்குப் பக்கத்தில்தான் இவை இருக்கும். என்றாலும், சில நேரம் ஐந்து நாட்கள் வரைகூட, இவற்றால் நீர் அருந்தாமல் இருக்க முடியும்.
ஒரு ஆண் சிங்கத்தின் கர்ஜனை 5 கி.மீ. வரை கேட்கும். அதுவே, அதன் எல்லையை இதர விலங்குகளுக்குத் தெரியப்படுத்திவிடும். சிங்கத்தால் வேகமாக ஓட முடியாது. அதனால் தன் குடும்பத்தினருடன் சேர்ந்துகொண்டு, குறிப்பிட்ட விலங்கைக் குறிவைத்து வேட்டையாடும். ஆப்பிரிக்காவில் இன்னும் ‘ஆர்கனைஸ்டு கில்லிங்’ எனும் முறைப்படுத்தப்பட்ட வேட்டையாடுதல் பின்பற்றப்படுவதால், சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT