Published : 09 Jun 2018 11:19 AM
Last Updated : 09 Jun 2018 11:19 AM
1973
-ம் ஆண்டு. சேப்பாக்கம் அரசு விடுதியில் தங்கியிருந்த சாலிம் அலியை நானும் நண்பர் சித்தார்த்தும் சந்தித்துப் பேசினோம்.
‘நீங்கள் எழுதிய பறவைகள் கையேடு பலருடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றி விட்டதென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று சித்தார்த் அவரிடம் உற்சாகத்துடன் கூறினார். 1941-ல் வெளிவந்த ‘இந்தியப் பறவைகள்’ (The Book of Indian Birds) காட்டுயிர் பற்றிய ஒரு விழிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பறவைகளை அவதானிக்கத் தொடங்கிய பலருடைய வாழ்க்கையைச் செறிவூட்டியதைப் பற்றித்தான் நண்பர் அவ்வாறு குறிப்பிட்டார்.
ஏனென்றால் யாரொருவர் பறவைகளைக் கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அவருக்கு புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்படும். அத்தகைய பிரக்ஞை இயற்கை சார்ந்த பல தளங்களுக்கு அவரை இட்டுச்செல்லும். மரம், ஒரு தாவரமாக மட்டுமல்லாமல் ஒரு வாழிடமாகத் தெரியும்.
பறவைகளை அவதானித்தல், நம்மூரில் ஒரு அக்கறையாக வளர வெகுகாலம் பிடித்தது. இது மேற்கத்தியப் பழக்கங்களில் ஒன்றாக, கோல்ப் விளையாடுவதுபோல, உயர்தட்டு மக்களின் பொழுதுபோக்காக அறியப்பட்டது. ஆங்கிலம் பேசும் சில நகர்ப்புற மக்கள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டினார்கள். அன்றைக்குத் தமிழில் பறவைகளைப் பற்றியோ காட்டுயிர் பற்றியோ யாரும் எழுதாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலத்திலும் ஓரிரு களக் கையேடுகள் தான் இருந்தன,
படிமப் புரட்சி
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாகப் பறவைகளைக் கவனிப்பதில் மக்களிடையே ஆர்வம் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. கடுமையான உழைப்புக்குப் பின் புலவர் க. ரத்னம் எழுதிய ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ ஒரு முன்னோடி நூல். அதில் 328 புள்ளினங்களைப் படங்களுடன் பட்டியலிட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ப. ஜெகநாதன் - ஆசை எழுதி, துல்லியமான ஒளிப்படங்களுடன், க்ரியா வெளியிட்ட ‘பறவைகள்: அறிமுகக் கையேடு’ போன்ற பயனுள்ள நூல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தொடர்ச்சியாகக் காட்டுயிர் ஆர்வமும் பரவ, பல ஊர்களில் இன்று பறவைகளை அவதானிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காடு, நதி என்று பறவைகளைத் தேடிச் சுற்றுகிறார்கள். இருநோக்கிகள் (பைனாகுலர்) எளிதாகக் கிடைக்கின்றன. காட்டுயிர் சார்ந்த தரமான சில இதழ்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. மின்னஞ்சல், இணையதளம், முகநூல் போன்றவை இந்த அக்கறை பரவ பல வசதிகளை அளித்துள்ளன. பன்னாட்டளவில் தொடர்புகொள்ள இணையம் உதவுகிறது. தமிழ்நாட்டிலுள்ள ஒரு பறவை ஆர்வலர், ‘ஈபேர்ட்’ (eBird) என்ற அமைப்பின் மூலம் உலகெங்கும் உள்ள ஆர்வலர்களுடன் தொடர்பு வைத்திருக்க முடியும்.
டிஜிட்டல் ஒளிப்படக்கலை தோன்றியது, இந்தப் புது உத்வேகத்துக்கு ஒரு காரணம். படச்சுருள் செலவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஒளி குறைவாக இருந்தாலும் படமெடுக்க முடியும். அதிவேகமான ஷட்டர் இருப்பதால், பறக்கும் பறவைகளைக்கூட எளிதாகப் படமெடுக்க முடிகிறது. இது பெரிய படிமப் புரட்சிதான். பறவைகளைப் படமெடுக்கும் ரவீந்திரன் நடராஜன் போன்றோர் முகநூலில் படங்களை வெளியிட்டு, இந்தத் துறை பற்றிய சொல்லாடலை உருவாக்குகின்றனர்.
பெயர்க் குழப்பங்கள்
தமிழ்நாட்டில் பறவை ஆர்வலர்கள் Tamil Birders Meet என்ற அமைப்பை உருவாக்கி, வருடத்துக்கு ஒரு முறை இரண்டு நாள் கூடுகை நடத்துகிறார்கள். இந்த ஆண்டு ஏலகிரியில் நடந்த இந்த அமைப்பின் நான்காவது நிகழ்ச்சியில் ‘தமிழகப் பறவைகள்’ என்ற ஒரு குறுங்கையேடு வெளியிடப்பட்டது. அருமையாக வடிவமைக்கப்பட்டு, சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும், மடிப்பிதழ் வடிவிலான இக்குறுங்கையேட்டின் விலை 25 ருபாய்தான். மொத்தமாக வாங்கினால் விலை இன்னும் குறையும். (தொடர்புக்கு: https://www.instamojo.com /NCF/early-bird-pocket-guides/).
நீர்ப்பறவைகள், தரைவாழ் பறவைகள், இரைக்கொல்லிகள், மரம் வாழ் பறவைகள், வான்வெளிப் பறவைகள் என தமிழ்நாட்டில் எளிதாகக் காணக்கூடிய 138 புள்ளினங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பெயர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. வலசை வரும் புள்ளினங்கள், ஒரே பறவையினத்தில் ஆணும் பெண்ணும் தோற்றத்தில் வேறுபடுதல், இனப்பெருக்கக் கால உருமாற்றம் போன்றவற்றைச் சிறு குறியீடுகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களுக்கும் பறவை அவதானித்தலில் ஈடுபடத் தொடங்குபவர்களுக்கும் மிகவும் பயனுள்ள வழிகாட்டி இது.
தமிழில் பறவை களஏடு உருவாக்குவதில் ஒரு சிக்கலான பிரச்சினை பெயர்கள் சார்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில் தங்களுக்குப் புரியும் வகையில் நம் ஊர்ப் பறவைகளுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டிவிட்டார்கள். செம்பூத்தை Crow- pheasant என்றதுபோல. பலர் இந்தப் பொருத்தமற்ற ஆங்கிலப் பெயர்களை மொழிபெயர்த்து பயன்படுத்துகிறார்கள். இது மேலும் குழப்பமூட்டுவது மட்டுமல்ல, மொழியின் வளத்தைச் சிதைக்கவும் செய்கிறது.
எடுத்துக்காட்டு: பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பல பறவைகளை ‘flycatcher’ என்பார்கள். இதை நம் ஊர் ஆட்கள், ஈப்பிடிப்பான் என்று குறிப்பிடுகிறார்கள். இப்பறவை பறந்து பூச்சியைப் பிடிப்பதால் அதற்கு flycatcher என்ற பெயர் வந்தது என்கிறார் பறவையிலாளர் சாந்தாராம். காட்டில் வாழும் அப்புள்ளினங்களுக்கும் ஈக்கும் சம்பந்தமே இல்லை. இதையெல்லாம் மாற்றியாக வேண்டும். நாமெல்லாம் சேர்ந்துதான் பாரம்பரியப் பெயர்களை மீட்டெடுக்க வேண்டும்.
(அடுத்த கட்டுரை.... ஜூன் 23 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT