Published : 12 Aug 2014 12:00 AM
Last Updated : 12 Aug 2014 12:00 AM
டால்பின்கள், வவ்வால்களைப் போல யானைகளும் நமது காதுகளுக்குப் புலப்படாத அகவொலிகளை பயன்படுத்தித் தொடர்புகொள்கின்றன. இது பற்றி உலகப் புகழ்பெற்ற யானை ஆராய்ச்சியாளர் கேத்தரின் பெய்ன், தி நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கமான வடிவம், ச.முகமது அலி - க. யோகானந்த் எழுதிய “அழியும் பேருயிர்: யானைகள்" என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதி:
மவுனமே பாஷையாய்
அணிவகுத்துச் செல்லும் ஒரு யானைக்கூட்டம் மிகவும் அமைதியாகச் செல்வதாகத்தான் மனிதர்களுக்குப் புலப்படுகிறது. ஆனால் அங்கே உலவும் காற்றில், அவை ஒன்று மற்றொன்றோடு பேசும் பேச்சுக் குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. மனிதர்களின் செவிக்குப் புலனாகாத அக ஒலி (Infrasonic) அலைகளைப் பரப்பி ஒன்றுக்கொன்று அவை பேசிக்கொண்டிருக்கின்றன. கென்யா, நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடந்த இது தொடர்பான ஆய்வுகள், அந்த யானைகள் புதியதொரு அக மொழியில் பேசுகின்றன என்பதை வெளிப்படுத்தின.
ஆங்காங்கே சிதறிய வண்ணம் மேயும் மந்தையிலுள்ள யானைகள் எல்லாமே ஒரே நேரத்தில் தங்கள் காதுகளால் உன்னிப்பாகக் கவனித்துச் சில விநாடிகளுக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாகத் தங்கள் வழியைப் பின்பற்றிச் செல்வது, எந்தப் புற நிர்பந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டாத தொலைவுக்கு ஓட்டமெடுப்பது போன்ற சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடந்தன! அதற்கான விளக்கங்கள், இன்னும் நம் சிந்தனைக்கு எட்டவில்லை.
விழிப்புணர்வு
1984 மே மாதம் அமெரிக்காவிலுள்ள ஒரிகான் மாகாணத்திலுள்ள போர்ட்லாண்டில் இருக்கும் வாஷிங்டன் பார்க் என்ற விலங்கு காட்சி சாலைக்குப் போயிருந்தபோது, இந்த மர்மமான சங்கதி பற்றி நான் ஊகித்தேன். அங்கே மூன்று ஆசியப் பெண் யானைகளையும், அவற்றின் குட்டிகளையும் கவனித்தபோது, மீண்டும் மீண்டும் தொலைவிலிருந்து வந்த ஒருவகை நுண் அதிர்வுகளை உணர்ந்தேன். ஒரு வேளை இந்த யானைகள் மனிதர்களின் செவிக்குப் புலனாகாத அகவொலி முறையில் ஒன்று மற்றொன்றுடன் பேசிக்கொண்டிருக்கிறதோ என்று சந்தேகித்தேன்.
கடமுடா ஒலி
அதற்குப் பிறகு எனது ஆய்வுகளைத் தொடங்கினேன். யானைகள் குரைத்தல், முணுமுணுத்தல், ஊதுதல், எக்காளமிடுதல், இருமுதல், கீச்சிடுதல் ஆகிய ஒலிகளுடன் கமுக்கமான இடி இடிப்பது போன்ற கடமுடா சத்தங்களையும் எழுப்புகின்றன. இங்கே நம் ஆய்வுக்கு அடிப்படையான கடமுடா ஒலியை யானைகளால் மட்டுமே கேட்க முடியும். மனிதர்களால் கேட்க முடியாது.
அதிர்வெண் மிகமிக குறைந்த இந்தக் கடமுடா ஓசையை, அகவொலி என்று கருதலாம். இடி சத்தத்தின் அதிர்வலைகளைப் போன்ற அகவொலிகளை யானைகள் விநாடிக்கு 14 முதல் 35 ஹெர்ட்ஸ் (Hertz) குறைவான அதிர்வு கொண்ட ஓசையாக வெளிப்படுத்துகின்றன. அவை காற்றில் கலந்து புல், புதர், மரக் கூட்டங்களைக் கடந்து தொலைவில் இருக்கும் மற்ற யானைகளைச் சிதையாமல் சென்றடைந்து, தகவல் தொடர்பை ஏற்படுத்த வல்லதாய் இருப்பதாக நினைக்கிறேன்! ஆனால், இது எப்படி நடக்கிறது?
கள ஆராய்ச்சி
கண்ணுக்கெட்டாத தொலைவுக்குப் பரந்து கிடக்கும் வறண்ட புதர்க் காடுகளான நமீபியாவின் இடோஷா தேசியப் பூங்காவை எங்களுடைய ஆய்வுக்குத் தேர்வு செய்தோம். மழையற்ற காலங்களில் இங்குக் கடும் வறட்சி நிலவும். நிற்காது ஓடிக்கொண்டிருக்கும் ஓடைகளின் நீரெல்லாம் சிறுசிறு பள்ளங்களில் அசையாது நிற்கும். பசுமை, தேடினாலும் கிடைக்காது. ஆயிரக்கணக்காக இங்கே திரிந்து கொண்டிருந்த காட்டெருது, இரலைகள் (Antelope), வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளைக் காண்பதே அரிதாகிவிடும்.
இருந்தாலும் யானைகள் மட்டும் பிழைப்பதற்கான வழியைப் புரிந்துகொண்டு அங்கே நடமாடின. கடும் வறட்சியில் புதிய நீரூற்றுகளைக் கண்டறிதல், தோண்டுதல், நீரைப் பருகுதல், அதனால் கிடைக்கும் திருப்தியைக்கூட அகவொலி மூலம் தொலைவிலுள்ள யானைகளுடன் ஒரு யானை பகிர்ந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.
தொலைதூரத் தொடர்பு
சில வேளைகளில் யானைகள் எல்லாமே தனித்தனியாகப் பிரிந்துவிடும். பிறகு திடீரென ஒன்றாகக் கலக்கும். தனித்தனியாகத் திரிந்த இருநூறு யானைகள் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துப் போகும். ‘எவ்வளவு தூரம்வரை சுற்றித் திரிய வேண்டும்?', ‘ஒரு குடும்பக் கூட்டம் ஒன்றன்பின் ஒன்றாக எப்படி வழியைப் பின்பற்ற வேண்டும்' என்பது போன்ற சங்கதிகளை அகவொலி மூலமாகவே அவை கடத்துகின்றன. தொலைதூரச் சமிக்ஞைகளை அகவொலி மூலமே அனுப்புகின்றன.
சில நேரம் 5 கி.மீ. அல்லது அதற்கும் அப்பாற்பட்ட தொலைவில் உள்ள கூட்டங்கள், தண்ணீர் கிடைக்குமிடத்தை நோக்கி மிகவும் விரைவாக
வந்து கூடுகின்றன. யானைகள் அபார மோப்பச் சக்தி கொண்டவை என்றாலும், மோப்பத்தை உணர்ந்துகொள்ள முடியாதபடி எதிர்க்காற்று வீசும் நேரத்தில்கூட, எங்கோ தனித்துத் திரியும் யானைகள், வியக்கத்தக்க முறையில் ஒரே நேரத்தில் தங்களுடைய போக்கை ஒன்றுபடுத்திக் கொள்கின்றன.
இப்படி, அகவொலித் தொடர்பு போன்ற அபூர்வச் செயல்பாடுகளால் இயற்கைத் தெரிவில் (Natural Selection) தேர்ச்சி பெற்ற உயிரினங்களாக யானைகள் வாழ்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
நன்றி:
‘அழியும் பேருயிர்: யானைகள்',
ச. முகமது அலி, க.யோகானந்த், இயற்கை வரலாறு அறக்கட்டளை,
தொடர்புக்கு: 98941 40750
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT