Published : 05 May 2018 10:50 AM
Last Updated : 05 May 2018 10:50 AM
கு
ச்சிலங்களுக்கு அடுத்தவை பூஞ்சாளங்கள். இவற்றைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள், அவற்றுக்கும் செடி, கொடி, மரங்களுக்குமான உறவை நன்கு விளக்குகின்றன. பூஞ்சாள இழைகள் செடிகளின் வேரோடு இணைந்து மைகோரைசா என்ற பூஞ்சாள-வேர்ப் பிணைப்பை உருவாக்குகின்றன. இதன் மூலம் பூஞ்சாளங்களும் பயிர்களும் பெரும் நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றன.
பூஞ்சாளங்கள் வாழ்வதற்கு உகந்த சூழலும், பூஞ்சாளங்களுக்குத் தேவையான உணவில் ஒரு பகுதியும் மரங்களின் மூலம் கிடைக்கிறது. அதுபோல மரங்களின் வேர் மண்டலத்தைத் தாண்டி பலமடங்குத் தொலைவு பூஞ்சாள இழைகள் பரவி இருப்பதால் இப்பூஞ்சாளங்கள் பல்வேறு மட்குப் பொருட்களைச் சிதைத்து நுண்ணூட்டங்களைக் கரைத்துப் பெரிய அளவில் பயிர்களுக்கும் கொடுக்கின்றன. காடுகளில் வாழும் மிகப் பெரிய உறுதியான மரங்களின் வேர்கள்கூட மென்மையான பூசன இழைகளின் கூட்டுறவுடனேயே செயல்படுகின்றன.
நூற்புழுத் தாக்குதலுக்கு விடிவு
ஜப்பானில் 134 வகையான செடி, கொடி, மரங்களை ஆய்வுசெய்ததில் 82 சதவீத மரங்கள் பூஞ்சாள வேர் உறவைப் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. பூஞ்சாள வேர் உறவு கொண்ட ஒரு ஊசியிலை மரம், அவ்வித உறவு கொள்ளாத அதே வகை மண்ணில் வளரும் வேறொரு ஊசியிலை மரத்தைவிட 84 சதவீத அதிக தழையூட்டத்தையும், 75 சதவீத அதிக சாம்பல் ஊட்டத்தையும், 243 சதவீத அதிக மணி ஊட்டத்தையும் உட்கொள்ளுவதாகக் கண்டறியப்பட்டது. காரணம், அந்த மரங்களின் வேர்கள் உறிஞ்சும் பரப்பைவிட பூஞ்சாள இழைகள் ஊட்டங்களை உறிஞ்சும் பரப்பு மிக அதிகம் என்பதே.
மேலும் பூஞ்சாளங்களில் பல வகைகள் இன்டோல் அசிடிக் அமிலத்தை வெளியிடுவதால் புது வேர்கள் வளரத் தூண்டுகோலாக உள்ளது. இதைப்போலவே பூஞ்சாளங்கள் நிறைந்த மண்ணில் நூற்புழுத் தாக்குதல் மட்டுப்படுகிறது. ஏனெனில் ஆர்த்ரோபோட்ரிஸ் என்ற பூஞ்சாளம் நூற்புழுக்களை தங்களுடைய உணவுக்காக அழிக்கின்றன.
வேர்ப் பூஞ்சைகள்
தேவைக்கு ஏற்ற நிலையில் பயிர்களுக்கு மணிசத்து உடனடியாகக் கிடைத்தால்தான் விளைச்சல் அதிகமாகும். வேதி உரங்கள் கொடுக்கும் மணிச் சத்தானது அடிக்கடி கரையாத நிலைக்கு மாறிவிடுகிறது. ஏனென்றால், இவை மண் தாதுக்களால் உறிஞ்சப்பட்டு கரையாத நிலையை எட்டுகின்றன. அத்துடன் வீழ்படிவாக மாறிவிடுகின்றன. வேர்ப் பூஞ்சைகள் இந்த வகையான மணிச்சத்துக்களை ஓரிடத்துக்குத் திரட்டுகின்றன.
மண்ணில் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா பூஞ்சாளங்கள் பெரும்பாலும் உள்ளன. இந்த உள்ளூர் இனங்கள் விளைச்சலைப் பெருக்குவதற்கு மட்டுமல்லாது வேளாண் திணை அமைவை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. அது மட்டுமல்லாது வெளியிலிருந்து ஆர்பஸ்குலார் பூஞ்சாளங்கள் தேவைப்படுவதும் இல்லை.
(அடுத்த வாரம்: வேர்களையும் கவனிப்போம்!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT