Published : 21 Apr 2018 10:21 AM
Last Updated : 21 Apr 2018 10:21 AM

கான்கிரீட் காட்டில் 30: பொன் வண்டா, பூச்சியா?

 

டத்தில் இடம்பெற்றிருக்கும் பூச்சியை சின்ன வயதில் நீங்களும் பிடித்து விளையாடி இருக்கலாம். என்னைப் போன்ற சிலர், விலங்கியல் செய்முறைத் தேர்வுக்காக இதுபோன்ற பூச்சிகளைப் பிடித்திருப்பார்கள்.

இந்தப் பூச்சியை பொன் வண்டு (Jewel Beetle) என்று தவறாக நினைத்திருப்போம். இது பொன் வண்டு அல்ல. இது பொன் பச்சைப் பூச்சி (Jewel Bug - Chrysocoris stolli). இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. பெயர் குழப்பம், அடையாளக் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பது மட்டுமே இதுபோன்ற குழப்பங்களை சிறிய அளவிலாவது களையும்.

கைபேசி படங்கள்

இந்தத் தொடரில் நான் கவனப்படுத்திய பூச்சிகள் அனைத்தும் கடந்த 4 ஆண்டுகளில் கண்ணில் படும்போதெல்லாம் என்னுடைய கைபேசி கேமராவில் பதிவு செய்தவை. இந்தப் படங்கள் எதுவும் விலை உயர்ந்த கேமராவில் படமெடுக்கப்பட்டவை அல்ல. பொறுமையாகவும், தொந்தரவு செய்யாமலும் இருந்தால், எந்த உயிரினத்தையும் படமெடுக்கலாம்.

நான் எடுத்த படங்களில் அடையாளம் காண முடியாத காரணத்தால் பாதிக்கு மேற்பட்ட பூச்சிகளைப் பற்றி இந்தத் தொடரில் எழுத முடியவில்லை. சில பூச்சிகளுக்கு சரியான தமிழ்ப் பெயரைக் கண்டறிவதிலும் சிக்கல்கள் இருந்தன. ஒரே பூச்சிக்கு தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர் கொடுக்கப்படும் வழக்கம் இருக்கிறது. இந்தத் தொடரில் ரயில்பூச்சி பற்றி குறிப்பிடும்போது, மரவட்டை என்பதற்கு பதிலாக அட்டை என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு.

பெருநகரப் பூச்சிகள்

'கான்கிரீட் காட்டில்' தொடரில் பேசப்பட்ட பூச்சிகளில் 75 சதவீதம் பெருநகரின் நெருக்கடிகள் மிகுந்த சென்னை மந்தைவெளியில் எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள மிகக் குறைந்த பரப்பில் பதிவு செய்யப்பட்டவை. பொதுவாக பூச்சிகள் பெரிதாக கவனத்தை ஈர்ப்பதில்லை. இந்தத் தொடரில் பேசப்பட்டது போன்ற பூச்சிகள் உங்கள் வீடு, அலுவலகத்தைச் சுற்றிலும் நிச்சயமாக வசிக்கும். தாங்கள் வாழும் சூழலில் அவை முக்கிய தாக்கத்தைச் செலுத்தும்.

ஆனால், நாம் அவற்றை கவனிக்கிறோமா? பறவைகளை நோக்குவது தற்போது அதிகரித்துவருகிறது. அதேபோல பூச்சிகளைப் பற்றிய விழிப்புணர்வும் பூச்சிகளைப் பற்றிய பதிவுகளும் அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் பூச்சிகளைப் பற்றிய புரிதலும் அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேம்படும். நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியுள்ள பூச்சிகளை பதிவுசெய்யவும் அடையாளம் காணவும் முயற்சிக்கலாம், விழிப்புணர்வையும் பரவலாக்கலாம்.

21CHVAN_Butterfly.jpgஉதவியவர்கள்

இந்தத் தொடர் எழுதப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதனும் காட்டுயிர் எழுத்தாளர் ஏ. சண்முகானந்தமும். பல பூச்சிகளை அடையாளம் காண இருவரும் உதவினார்கள். பூச்சிகளைப் பற்றிய அறிவியல்பூர்வ தகவல்களை அறிவதற்கும் விரிவாக எழுதுவதற்கும் கீழ்க்கண்ட வழிகாட்டிப் புத்தகங்கள் உதவின. பூச்சிகள், உயிரினங்களைப் பற்றி அறிய விரும்புபவர்கள் இதுபோன்ற வழிகாட்டிகளை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆர் பானுமதி, க்ரியா வெளியீடு, தொடர்புக்கு: 7299905950

வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு, ஆர். பானுமதி, க்ரியா வெளியீடு

பூச்சிகள்: ஓர் அறிமுகம், ஏ. சண்முகானந்தம், வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

Urban Fauna of India, Preston Ahimaz, Madras Naturalists' Society, தொடர்புக்கு: 9840090875

Nature Ramble, Mohan V. Chunkath

150 Animals of IIT - Madras, Indian Institute of Technology, Chennai

Spiders: An Introduction, K. Vijayalakshmi, Preston Ahimaz, Cre-A

Butterflies, Sri Venkateswara college of Engineering, Sriperumbudur

(நிறைந்தது)

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x