Published : 14 Apr 2018 10:56 AM
Last Updated : 14 Apr 2018 10:56 AM
அ
சோஸ்பைரில்லம் எனும் நுண்ணுயிர்கள் சுருள் வடிவத்திலும் வளைவாகவும் காணப்படும். 1 மி.மீ. விட்டமும், 2.1-3.8 மி.மீ. நீளமும் கொண்டவை. கிரேக்க மொழியில் ‘அசோ’ என்றால் தழை ஊட்டம் என்றும் ‘ஸ்பைரில்லம்’ என்றால் சுருள் என்றும் பொருள். தவசப் பயிர்கள், புல்லினப் பயிர்கள், கிழங்குப் பயிர்கள் ஆகியவற்றின் வேர்களோடு இணைந்து வாழக்கூடியவை. அசோஸ்பைரில்லம் அக்கர் மண்ணில் தனியாகவும் வாழும்.
அசோஸ்பைரில்லம் லிபோபெரம், அசோஸ்பைரில்லம் பிராசிலன்ஸ் ஆகிய இரண்டு நுண்ணுயிர்கள் தென்னக மண்ணில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஒரு கிராம் மண்ணில் குறைந்தபட்சமாக ஒன்றுமில்லாமல் இருப்பதில் இருந்து அதிகபட்சமாக 106 செல்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அசோஸ்பைரில்லம் பிராசிலன்ஸ் மண்ணின் அமில- காரத் தன்மைக்கு ஏற்ப பாதிக்கப்படக்கூடிய நுண்ணுயிர். மண்ணில் அமில-காரத் தன்மை 6-க்குக் குறையும்போது இவை இருப்பதில்லை. அசோஸ்பைரில்லம் லிபோபெரம் அமிலத் தன்மையுள்ள மண்ணில், அதாவது 5.7 வரைக்கும் சற்றுத் தாக்குப்பிடிக்கிறது.
அசோஸ்பைரில்லம் அமசோயியே என்ற இனம் ஒரு எக்டேருக்கு 40 கிலோ அளவுக்கு நைட்ரஜனை நிலைப்படுத்தக்கூடியது. அசோஸ்பைரில்லம் எண்ணற்ற இயக்குநீர்களையும் வைட்டமின்களையும் சுரக்கிறது. இண்டோல்-3-பைருவேட் டிகார்பாக்சிலேஸ் என்ற இண்டோல் அசிட்டிக் அமிலத்தின் முதன்மையான நொதியை இது கொடுக்கிறது. மணல் தன்மைமிக்க மண்ணைத் தவிர, மற்ற எல்லா மண்ணுக்கும் அசோஸ்பைரில்லம் ஏற்றது. பூச்சி எதிர்ப்புத் திறனுக்கும் நோய் எதிர்ப்புத் திறனுக்கும் அசோஸ்பைரில்லம் பயன்படுகிறது.
கரும்புச் சாகுபடிக்கான நுண்ணுயிர்
தமிழக கரும்புச் சாகுபடியில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டின் பயன்பாடும் உள்ளது. இதன் மூலம் வேதி உப்புகளால் கொடுக்கப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் தேவை 20 சதவீதம் குறைக்கப்படுகிறது. அசிடோபாக்டர் டைஅஃசோ ட்ரோபிக்ஸ் என்ற நுண்ணுயிர் கரும்பின் தண்டு, இலை, மண் ஆகியவற்றில் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 300 கிலோ நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன் பெற்றது.
இது முதலில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்டது. வேதி உரங்கள் இல்லாமலேயே பாஸ்பரஸ், பொட்டாசியம், நுண்ணூட்டச் சத்துக்கள் மட்டும் கொடுத்து அந்நாட்டில் மூன்று தொடர் விளைச்சலை எடுக்க முடிந்துள்ளது. அவர்கள் ஓர் ஹெக்டேருக்கு 182 முதல் 244 டன் கரும்பு விளைச்சலைக் கண்டுள்ளனர். இதன் மூலம் மிகத் திறமையான நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்தனர்.
முத்துக்குமாரசாமி தந்த ‘முத்து’
பிரேசில், ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் அவை அசிட்டோபாக்டர் டைஅஃசோட்ரோபிக்ஸ், ஃகெர்பாஸ்பைரில்லம் செரோப்பிடிசியே, ஃகெர்பா ஸ்பைரில்லம் ருபிசுபல்பிகன்ஸ் என்று கண்டறிந்தனர். இவை இலைகள், தண்டுகள், வேர்கள் ஆகியவற்றில் அதிக அளவு காணப்பட்டன.
இந்த நுண்ணுயிர் இனம் 1994-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முத்துக்குமாரசாமி என்ற அறிவியலாளரால் பிரித்தெடுக்கப்பட்டது. அசிடோபாக்டர் இனங்களில் இது அதிகம் நைட்ரஜனை நிலைப்படுத்துவதாக உள்ளது. இது அமில-காரத் தன்மையில் 3 முதல் 6 அளவுவரை தாங்கும் திறன் கொண்டது. ஆய்வுக் கூடத்தில் 2.5 என்ற அளவில் அமில-காரத் தன்மை இருக்கும்போது ஹெக்டேருக்கு 300 கிலோ நைட்ரஜனை நிலைப்படுத்தும் இந்த நுண்ணுயிர், அமில-காரத் தன்மை 6 என்ற அளவுக்கு உயரும்போது 100 கிலோ என்ற அளவுக்குக் குறைந்துவிடுகிறது. இதன் மற்றொரு சிறப்பு, கனிம நைட்ரஜன் 200 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் இருந்தாலும் தாங்கும் திறன் கொண்டுள்ளது. இவை கரும்பில் சர்க்கரையின் அளவை, பயிரினங்களின் தன்மைக்கு ஏற்ப 2 முதல் 5 சதவீதம் அதிகப்படுத்திக் கொடுக்கின்றன.
(அடுத்த வாரம்:
கைகொடுக்கும் கந்தகம்!)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment