Published : 14 Apr 2018 11:07 AM
Last Updated : 14 Apr 2018 11:07 AM
பே
ரிடர்கள், வறட்சி, பெரும் பஞ்சம், போர், வன்முறை, கலவரம் முதலிய பெருநெருக்கடிகள் எல்லாத் தரப்பினரையும் ஒன்றுபோல் பாதிப்பதில்லை. சாதி, மதம், மொழி, பொருளாதார நிலைகள், திணை எல்லாவற்றையும் கடந்து பெண்ணை அவை மிகையாகத் தாக்குகின்றன. அந்தத் தாக்கங்கள் நீண்டகாலம் நீடிக்கவும் செய்கின்றன. சுனாமிக்குப் பிறகான என் கடற்கரைப் பயணங்கள்தான், என் கண்களைத் திறந்தன.
சுனாமி மரணங்களில் பெண்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாக இருந்தது? சுனாமி மறுகட்டுமானத்தை முன்னிட்டு மீனவக் குடியிருப்புகள் தொலைதூரம் நகர்த்தப்பட்டபோது, ஏன் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்? சுனாமி நிவாரண காலத்தில் ஆண்களுக்குக் கிடைத்த வடிகால்கள், ஏன் பெண்களுக்குக் கிடைக்கவில்லை? மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்துகொண்டபோது, கணவனை இழந்த பெண்கள் மட்டும் ஏன் இன்றுவரை விதவையராக நீடிக்கின்றனர்? ஒக்கிப் பேரிடரில் சிக்கி, பல நூறு மீனவர்கள் கரை திரும்பாமல் போனபோது அவர்களின் துணைவிகள், அன்னையர், தங்கைகளின் அபயக் குரல் ஏன் அரசுகளை எட்டவில்லை?
பேரிடர்களையும் சமூக நெருக்கடிகளையும் பெண்ணின் கண்களின் வழியாக நாம் இன்னும் பார்க்கத் தொடங்கவில்லை.
ஒவ்வொரு நாளும் பேரிடர்
சுனாமியில் வீழ்ந்த நெய்தல் பொருளாதாரம் நிமிர்ந்து உட்கார நீண்டகாலம் தேவைப்பட்டது. ஆதியில் பழங்குடிப் பொருளாதாரம் பெண்ணின் கையில் இருந்தது. இன்று நெய்தல் பெண்களின் நேரடிப் பொருளாதாரப் பங்களிப்பு ஏறத்தாழ சூன்யமாகிவிட்டது. அதனால் சுனாமிப் பேரிடரில் வாழ்வாதார முதலீட்டின் இழப்பைவிட பொருளீட்டும் ஆணின் சாவுதான் பெரும் சிக்கலாக உருவெடுத்தது. ஒக்கிப் பேரிடரோ, நடுக்கடலில் பொருளீட்டும் ஆண்களைத் தேர்ந்து கொன்றுவிட்டது. விதவைகள், அபலைகள் எல்லோருக்கும் நேர்ந்துபோன பெருந்துயர், அவர்களின் ஒரே வாழ்வாதார நம்பிக்கையை இழந்து நிற்பதுதான்.
பொதுவாக, பேரிடர்கள் எப்போதேனும் நேர்பவை. ஆனால், கடல் வாழ்க்கையோ ஒவ்வொரு நாளும் இடர் நிறைந்தது. இடர் நிமித்தமான ஒவ்வொரு கடல் சாவும் ஒரு குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிடுகிறது.
நெய்தல் பெண் துயர்… பெருந்துயர்!
கடல் அபலைகளின் கண்ணீர்க் கதைகளைக் கவனப்படுத்தும் தருணமாக அமைந்தது 2017 ஒக்கிப் பேரிடர். அண்மையில் திரைப்படக் கலைஞர் வினோத் உடன் இணைந்து கடல் அபலைகளை நேர்காணல் செய்ய கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடிக் கடற்கரைகளுக்குப் பயணித்தேன். எழுபதுக்கும் மேற்பட்ட அபலைகளைச் சந்தித்துத் திரும்பியபோது, வெகுமக்கள் புரிதலுக்கும் கள நிலைமைகளுக்கும் இடையில் எத்தனை பெரிய இடைவெளி நிலவுகிறது என வியந்துகொண்டேன்.
தூத்துக்குடி ஜாக்குலின் (42), 25 ஆண்டு இடைவெளியில் அப்பா, கணவர், மகன் மூவரையும் கடலில் பறிகொடுத்தவர். கன்னியாகுமரி சின்னத்துறை செல்வராணியின் (48) கதை மனதைப் பிழிகிறது. 2017 அக்டோபரில் கப்பல் மோதிக் கவிழ்ந்த படகில் மூழ்கி இறந்த நான்கு பேரில் இவர் கணவரும் மருமகனும் அடக்கம். நவம்பரில் நேர்ந்த ஒக்கிப் புயல் இவரது மகனையும் மூத்த மருமகனையும் விழுங்கிவிட்டது. வருவாய் ஈட்ட யாருமில்லாத வீட்டில் மூன்று விதவைகள், ஒரு முதிர் கன்னி!
நெய்தல் பெண் துயர், பெருந்துயர். அரசு நலத்திட்டங்கள் இந்தக் கடல் அபலைகளை வந்தடையவில்லை. அவர்களின் அழுகுரல்கள் நம்மை எட்டாதவாறு ஆர்ப்பரிக்கும் பேரலைகள் விழுங்கிவிட்டனவா?
(அடுத்த வாரம்: கடலைப் பாடுதல்!)
கட்டுரையாளர்,
பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல்
– வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT