Published : 12 Aug 2014 12:00 AM
Last Updated : 12 Aug 2014 12:00 AM

ஐ.டி. இளைஞர்களின் விவசாயப் புரட்சி

ஐ.டி. வேலை என்றால் கை நிறைய சம்பளம், வெளிநாட்டில் ஆன் ஸ்பாட் வேலை, சொகுசு வாழ்க்கை... இப்படித்தான் நம்மில் பலரும் கற்பனை செய்துகொள்கிறோம்.

ஆனால், கலப்பை பிடித்து ஏர் உழும் ஐ.டி. இளைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இருக்கிறார்கள். அதிலும் வேதி விவசாய அலையில் அடித்துச் செல்லப்படாமல், இயற்கை விவசாயம் என்ற சவாலைத் தைரியமாக எதிர்கொண்டு மேலேறி வரும் இவர்களது முயற்சிகள், நிச்சயம் வழக்கமானவை அல்ல.

விண்மீன் கூட்டத்தில் தனியாகத் தெரியும் துருவ நட்சத்திரம் போல அப்படி சிலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கமலக்கண்ணன்,

திரு.நம்மாழ்வார் இயற்கை அங்காடி, ஊரப்பாக்கம்:

“ஆரோக்கியக் குறைபாடு, மருந்துகளுக்குச் செய்த செலவு, சாப்பாட்டில் சுவையின்மை... இப்படிப் பல விஷயங்கள் எப்படி ஏற்பட்டுச்சுன்னு தேட ஆரம்பிச்சேன். அப்போ இயற்கை, செயற்கை விவசாயம் பற்றி தெரியவந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வேளாண் பொருட்களைப் பயன்படுத்திய போது மாற்றத்தை உணர முடிந்தது. என் மனைவியும் குடும்பத்தினரும் இதைப் ஒப்புக்கொள்ள ஆரம்பிச்சாங்க. மத்தவங்களுக்கும் இதை பரப்பணும்னு அதிகப் பொருட்களை வாங்கி சிறிய கடையா ஆரம்பிச்சேன்.

எனக்கு உத்வேகமாக இருந்தது மறைந்த நம்மாழ்வார்தான். கரூரில் உள்ள அவருடைய ‘வானகம்’ அமைப்பில் பயிற்சி எடுத்துக்கிட்டேன். நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புறதைவிட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேணும்னு நினைப்பவர்களே, இந்தத் துறையில் வெற்றிபெற முடியும். நான் பகுதி நேரமாக இந்த வேலையைச் செய்தாலும், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

எளிமையான வாழ்க்கை வாழ்வதற்குப் பெற்றோர்களும் கல்விக்கூடங்களும் கற்றுத்தரும் போதுதான் முழுமையான மாற்றம் உருவாகும்."

ஸ்ரீராம் - கயல்,

www.vaerorganic.com உரிமையாளர்கள்:

“இயற்கையான முறையில் மக்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய, என் கணவருடைய கனவு. அது மனநிறைவு தரும் விஷயமாகவும் இருக்கணும்னு நினைச்சோம். அந்த நேரத்துல தென்காசில ஒரு இயற்கை விவசாயியைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. இருபது வருஷமா இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், நோய்களை எதிர்கொள்ள இயற்கை வேளாண் உணவு எப்படி உதவுச்சுன்னு சொன்னார். அதுல ஈர்க்கப்பட்டுத்தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஆன்லைனில் இந்தக் கடையை ஆரம்பிச்சோம்.

நாங்க அமெரிக்காவில் வேலை செய்தப்போ கிடைச்ச வருமானம் இதுல கிடைக்கலை, இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்கிறோம்ங்கிற மனநிறைவு, நிச்சயமா வருமானத்தைவிட பெருசுதான். இதுலதான் தன்னிறைவும் சந்தோஷமும் கிடைக்குது."

பார்த்தசாரதி,

இயற்கை விவசாயி:

"ஐ.டி. வேலை பார்த்தப்போ ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும், அது போதுமானதா இல்லை. என்னதான் படிச்சாலும், நல்ல சாப்பாடு கிடைக்கணுமே. இயற்கை வேளாண்மையின் பயனும், மகத்துவமும் ஐ.டி. துறைல இருந்தவரைக்கும் தெரியலை.

என்னோட தேவைக்காக இயற்கை விவசாயிகளிடம் உணவுப் பொருட்களை வாங்க ஆரம்பிச்சப்போ அதிக சுவையும், ஆரோக்கியமான வாழ்க்கையும் கிடைச்சுது. முன்னாடி இருந்த மருத்துவச் செலவும் அப்போ இல்லை.

முதல்ல பகுதி நேரமாகச் செய்தேன், இப்போ முழுசா இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். பி.இ., எம்.பி.ஏ. படிச்சுட்டு விவசாயம் பண்ணணுமான்னு வீட்ல வருத்தப்பட்டாங்க. ஆனா, காலப்போக்குல இயற்கை வேளாண் உணவு வகைகளைச் சாப்பிட்டபோது, திருப்தியா உணர்ந்தாங்க. இப்போ ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க.

என்னோட தேவைகள் இப்போ மாறிடுச்சு. ஒரு ஏக்கர் இருந்தா போதும், குடும்பத்தைக் காப்பாத்திடலாம். எனக்குத் தேவையான உணவு பொருட்களை நானே உற்பத்தி செய்கிறேன்.

இயற்கை விவசாயம் செய்வதால இயற்கைக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற மாதிரி உணர முடியுது."

கோபி, ஒருங்கிணைப்பாளர், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்:

"இயற்கை வேளாண் உணவு வகைகளைச் சாப்பிட்டப்போ அதோட வித்தியாசத்தை உணர்ந்தேன். சுறுசுறுப்பு அதிகரிச்சுது. இளைஞர்கள் சாப்பிடும் சாப்பாட்டுல என்ன சேர்க்கப்படுது, எப்படித் தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டாலே, இயற்கை வேளாண் உணவின் முக்கியத்துவம் புரிந்துவிடும். பத்தோடு பதினொண்ணா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான், இன்னைக்கு இயற்கை வேளாண் துறைல ஈடுபடுறதுல பெருமைப்படுறேன். ஐ.டி. துறைல சம்பளம் அதிகமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்ச வேலையைச் செய்றதுல மனநிறைவு கிடைக்குது."

இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி, அவர் செயல்படுத்திக்காட்டிய இயற்கை விவசாயத்தை மதிப்பதும், அதன் மூலம் விளைந்த பொருட்களை

வாங்கிப் பயன்படுத்துவதும்தூன். அதைக் களத்திலேயே செய்துகாட்டும் இந்த ஐ.டி. இளைஞர்கள், ஐ. போன் காலத்திலும் புதிய பாதையை வகுப்பவர்களாக இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x