Last Updated : 19 Aug, 2014 12:00 AM

 

Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

அந்த ராயப்பேட்டை எங்கே?

எழுத்து நடைக்காகத் தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் திரு.வி.க.என்று அறியப்பட்ட திரு.வி.கலியாணசுந்தரனார். சிறு வயதிலேயே சென்னை ராயப்பேட்டையில் அவருடைய குடும்பம் குடியேறியது.

நீண்டகாலமாக அப்பகுதியில் வசித்த அவர், தனது வாழ்க்கைக் குறிப்பில் ராயப்பேட்டையின் பழமையை மட்டுமல்லாமல், பசுமையையும் சுவைபட விவரித்துள்ளார். இதில் அவரது எழுத்து வன்மையைவிட, ஒரு எழுத்தாளராக இயற்கையை எவ்வளவு நுணுக்கமாக அவர் கவனித்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதிலிருந்து:

இராயப்பேட்டை, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் முதலிய ஊர்கள், ஒரு சிறு கோட்டமெனத் திகழ்ந்தன. இவைகளின் பேரூர் மயிலாப்பூர். இவ்வூர்களின் ஒருமைப்பாட்டுக்கு உயிர்நாடியாய் இருந்தது ஒரு சிற்றேரி. அதன் இடம் தேனாம்பேட்டை. ஆனால், அது மயிலாப்பூர் ஏரி என்றே வழங்கப்பட்டது. அவ்வேரி மயிலைக் கோட்டத்தை ஓம்பியது. பின்னே அது மறைந்தது, மயிலைக் கோட்டத்தின் கட்டுங் குலைந்தது.

இயற்கை வரவேற்பு

அந்நாளில் இராயப்பேட்டையினின்றும் மயிலாப்பூர் செல்வோர் வெயிலின் தாக்குதல் இன்றியே போய்ச் சேர்தல் கூடும். செல்வோர்க்கு வழி நெடுக வரவேற்பு நிகழும். எத்தகைய வரவேற்பு? இயற்கை வரவேற்பு.

இயற்கை அன்னை பலபட பசுமைக்கோலம் பூண்டு வரவேற்பு அளித்த வண்ணம் இருப்பாள். வழிப்போக்கரை கொடிகளிற் குலவும் வெற்றிலைத் தாள்கள் வாழ்த்தும், வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும், மாமரங்கள் காய்கனிகளை ஏந்தி இறைஞ்சும்.

தென்னைகள் காய்களைச் சுமந்து, 'இளநீர் பருக வாரும் வாரும்' என்று தலையாட்டும், கரும்புகள் 'அருந்துக அருந்துக' என்று சாறு பொழியும், ஆலும் அரசும் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் (நெல் வகை) சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும். ஏற்றமும் மூங்கிலும் வண்டும் பறவையும் செவிக்கு அமுதம் ஊட்டும். இவ்வரவேற்புகள் இப்பொழுது உண்டோ?

தாவரப் பெருக்கம்

அட்லன் தோட்டம் என்ற சிறுவனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம் இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை, கிச்சிலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு (புங்கம்), முண் (தாழை), முருக்கு (முள்முருங்கை), கொன்றை, மகிழம், அசோகு, புன்னை, நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும்; பெருங்களா (கரம்பை), காரை, நொச்சி, ஆமணக்கு, எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும்; சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி (குண்டுமணி), மருட்டி, படர்காரை முதலிய தூறுகள் செடிகளைப் பார்த்து நகைக்கும்; தாளி, கோவை, பாலை, பிரண்டை முதலியன மரங்களையும் செடிகளையும் தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம் (நீர்முள்ளி), கண்டகம், முள்ளி, முளரி, ஆடாதோடை, ஆடுதின்னாப்பாலை, செருப்படை, தூதுவளை, தும்பை, துழாய், கண்டை, நாயுருவி, நாக்கடு, ஊமத்தை, கற்றாழை, கொடி, வேலி கண்டங்கத்திரி, அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.

பறவைகளும் உயிரினங்களும்

ஆங்காங்கே குளம், கேணி, ஓடை முதலிய நீர்நிலைகள் தண்மை வழங்கும்; அவைகளின் உள்ளிலும் புறத்திலும் கொட்டி, ஆம்பல், தாமரை, நீலோற்பவம் முதலிய பூக்களும்; அறுகு, தருப்பை, நாணல் முதலிய புல்லினங்களும்; பொன்னாங்கண்ணி, கையாந்தகரை, வள்ளை, வல்லாரை முதலிய கீரை வகைகளும் பொலிந்து இன்பமூட்டும்; அங்கும் இங்கும் பழங்கள் தாமே கனிந்து கனிந்து வீழும்; பாம்பு, கீரி, உடும்பு, முயல், காட்டுப்பூனை, காட்டுக்கோழி முதலியன இரிந்தோடும்; கொக்கு, உள்ளான், நாரை, கள்ளிக்காக்கை, கிளி, பூவை (மைனா), சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, வர்ணக்குருவி முதலிய பறவைகள் பறந்தும் இருந்தும் பாடியும் மகிழும்; கால்நடைகள் உலவும், மேயும், நீர் அருந்தும், படுக்கும், உறங்கும்; மக்கள் விளையாடலும் நிகழும். அட்லன் தோட்டம் ஊருக்கு விறகு, பழம், கீரை, எருமுட்டை (வரட்டி) முதலியன தந்து உதவும். அதை இராயப்பேட்டை வனதேவதை என்று கூறலாம்.

இராயப்பேட்டை தோட்டங்களுக்குப் பேர் பெற்றது. இத்தோட்டப் பரப்பை என்னென்று சொல்வேன்? பசுங்கடல் ஒன்று பொங்கிப் பரவிய ஒரு பெருந் தேக்கம் என்று சொல்லலாம். இராயப்பேட்டையின் மலையும் ஆறும் காடும் கடலும் எங்கே? அவை எங்கே போயின? அவை மறைந்தன. அவ்விடங்களில் பலவிதப் புரங்கள் தோன்றியுள்ளன. மயிலாப்பூர் ஏரி, தியாகராய நகராக மாறினமையால், இராயப்பேட்டை தன் பழங்காலக் காட்சியை எப்படி வழங்குவதாகும்? பழைய இராயப்பேட்டை வேனிலிலும் மக்களை வதைப்பதில்லை. ஓய்வு நல்வழியில் செலவாகும்.

தகவல் உதவி: சு.சந்திரசேகரன், சத்தியமங்கலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x