Published : 03 Feb 2018 10:30 AM
Last Updated : 03 Feb 2018 10:30 AM
சர்வதேச நீர்நிலை நாள்: பிப்ரவரி 2
நீர்நிலைகள்… பூமியின் உயிர்நாடிகள். இவை வறட்சிக் காலத்துக்குத் தேவையான நிலத்தடி நீரைச் சேமித்து வைத்துத் தருகின்றன, வெள்ளத்தின்போது அதிகப்படி தண்ணீரை உள்வாங்கிக்கொண்டு மக்களைக் காக்கின்றன. ஊட்டச்சத்துகளை மறுசுழற்சி செய்கின்றன, குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏற்ற நீரை இயற்கையாக வடிகட்டித் தருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நீர்நிலைகள் பூவுலகுக்கு உயிர் தருகின்றன.
பிப்ரவரி 2-ம் தேதி உலக நீர்நிலைகள் நாளாகக் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த நாளில்தான் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான ‘ராம்சர் சர்வதேச சாசனம்’ கையெழுத்தானது. நீர்நிலைகளின் சூழலியல் செயல்பாடுகளை மனதில் கொண்டு நீர்நிலைகளை வளம்குன்றாத வகையில் பயன்படுத்துவது, பாதுகாப்பதை வலியுறுத்தும் சாசனம் இது.
குளம், குட்டை, ஏரி, சதுப்புநிலம், வெள்ளநீர் வடிகால், நீர்நிலைகள், உப்பங்கழிகள் என நீர் நிறைந்த எந்த ஒரு பகுதியையும் நீர்நிலை என்கிற பொதுவான வரையறைக்குள் அடக்கலாம். இவை மிகவும் சிக்கலான சூழலியல் தொகுதிகள்.
மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் பல்வேறு உயிரினங்களுக்கும் நீர்நிலைகள் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான பறவை சரணாலயங்கள் நீர்நிலைகளிலேயே அமைந்துள்ளன.
உலகில் சூழலியல் பன்மைத்தன்மை மிகுந்த நிலப்பகுதிகளில் ஒன்று இந்தியா. ஆனால், இயற்கையின் அளப்பரிய கொடைகளான சூழலியல் பொக்கிஷங்கள் கண்மூடித்தனமாக அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. இப்படி அழிக்கப்படும் சூழலியல் தொகுதிகளில் முதன்மையானவை நீர்நிலைகள்.
தட்பவெப்ப மண்டலத்தைச் சேர்ந்த நம் நாடெங்கும் கடந்த நூற்றாண்டுவரை நீர்நிலைகள் நிறைந்திருந்தன. இன்றைக்கு நாட்டில் மூன்றில் ஒரு நீர்நிலை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது அல்லது சீரழிந்து கிடக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆக்கிரமிப்பும் இயற்கை வாழிட அழிப்பும். குப்பை கொட்டுவது முதல் புதிய கட்டிடம் கட்டுவதுவரை மனிதர்கள் கைவைக்கும் முதல் இடம் நீர்நிலைகளாகவே உள்ளன.
நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உயிர்நாடியாகத் திகழும் நீர்நிலைகளை, குறுகிய பொருளாதார நலன்களுக்காக பலி கொடுப்படுவதைத் தடுக்க வேண்டும். ஒரு பகுதியின் சூழலியலை உத்தரவாதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் நீர்நிலைகள் அழிக்கப்படுவது இனிமேலாவது நிறுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் முக்கியத்துவத்தையும், உயிரினங்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் வெளிப்படுத்துகின்றன கோவையைச் சேர்ந்த மூத்த ஒளிப்படக் கலைஞர் கே. ஜெயராம் எடுத்த ஒளிப்படங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT