Published : 03 Feb 2018 10:27 AM
Last Updated : 03 Feb 2018 10:27 AM
2015
சென்னை வெள்ளத்தை எல்லோரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். எங்கள் குடும்பத்தினருக்கும் அதை மறக்க முடியாமல் செய்தது, வீட்டுக்குள் புகுந்த வெள்ளம். அந்த வெள்ளத்துக்குப் பிறகு இரண்டாவது மாடிக்கு குடிபெயர்ந்துவிட்டோம்.
எங்கள் கீழ் வீட்டின் முன்புறத்தில் இருந்த தொட்டிகளில் எலுமிச்சைச் செடி ஒன்றும் அடக்கம். குடிபெயர்ந்தபோது எலுமிச்சைச் செடியும் எங்களுடனே மாடி ஏறியது. அந்தச் செடியில் நன்கு பருத்த பச்சை கம்பளிப்புழு ஒன்று, ஒரு நாள் ஊர்ந்துகொண்டிருப்பதை பார்த்தேன். அது மிகவும் அழகாக இருந்தது.
பொதுவாகக் கம்பளிப்புழு பலருக்கும் பிடிப்பதில்லை. அரிப்பு ஏற்படுத்துவது, நொழுநொழுவென்று இருப்பது என பல்வேறு காரணங்களை பிடிக்காதவர்கள் அடுக்குவார்கள். எப்படியிருந்தாலும் அந்த வெறுப்புக்கு தர்க்கரீதியான காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.
குழந்தை எழுத்தாளர் எரிக் கார்லே எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம் ‘எ வெரி ஹங்க்ரி கேட்டர்பில்லர்’. அந்தக் கதை முன்வைக்கும் எளிய ஆச்சரியம், பொதுவாக வெறுக்கப்படும் கம்பளிப்பூச்சிகளில் இருந்து கற்பனை செய்ய முடியாத அற்புதமான வண்ணங்களில் வண்ணத்துப்பூச்சிகள் பிறக்கின்றன என்பதுதான். கதைப்படி பெரும்பசி கொண்ட கம்பளிப்புழுவும் கூட்டுப்புழுவாகி, பின்னர் வண்ணத்துப்பூச்சியாகிறது.
எங்கள் வீட்டில் ஊர்ந்துகொண்டிருந்த பச்சை கம்பளிப்புழு, எலுமிச்சை அழகி எனும் வண்ணத்துப்பூச்சியுடையது.
எலுமிச்சை அழகி என்கிற இந்த பெயரும், அதன் புழு கூடு வைக்கும், உண்ணும் செடிக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எலுமிச்சை அழகி வண்ணத்துப்பூச்சிகள் பொதுவாக எலுமிச்சை மரம், நாரத்தை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைத் தாவரங்களில் முட்டையிட்டு, இலைகளை உண்டு, கூடு வைப்பவை.
அதனால்தான் அவற்றுக்கு எலுமிச்சை அழகி என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் Lime Butterfly (Papilio demoleus). அதேநேரம், வேறு சில தாவரங்களையும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் பயன்படுத்தவே செய்கின்றன.
வெளிர்மஞ்சள் உடல், கறுப்புப் பட்டைகளைக் கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி வேகமாகப் பறக்கக்கூடியது. பின்னிறக்கையில் சிவப்பு, நீலத் திட்டுகளைக் கொண்டிருக்கும். இறக்கையின் அடிப்புறம் வெளிறி இருக்கும். இறக்கையை விரித்தால் 8 – 10 செ.மீ. அகலம் இருக்கும். இறக்கையை விரித்து வைத்து ஓய்வெடுக்கும்.
நாடெங்கும் சமவெளிகளில் தென்படும் இதை, ஆண்டு முழுவதும் காணலாம். பூந்தேன் உண்ணும். ஈரப்பதமான இடங்களில் கூட்டமாக நீரை உறிஞ்சும். வலசை செல்லும் தன்மை கொண்டது. சரி, கதையின் முடிவுக்கு வருவோம். எங்கள் வீட்டு பச்சைக் கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக உருமாற்றம் அடைந்ததா? இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT