Published : 12 Aug 2014 12:00 AM
Last Updated : 12 Aug 2014 12:00 AM
உலகம் முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகளின் ஆதர்ச நாயகன் ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா.
நவீன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளுக்கு மாற்றாக, பலன் தரும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் இயற்கை வேளாண்மை திகழும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஃபுகோகா. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேதி உரங்கள், தொழில்நுட்பக் கருவிகள் சார்ந்த நவீன வேளாண்மை லட்சக்கணக்கான மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்னவோ உண்மைதான்.
ஆனால், ஊட்டச்சத்து குறைவு, உணவு சார்ந்த பல்வேறு நோய்கள், உடல்நலப் பாதிப்புகள் என்று அதன் மோசமான விளைவுகளைச் சமீபகாலமாக நாம் அனுபவித்துவருகிறோம். அதற்கான மாற்றைப் பிரபலப்படுத்தியவர்தான் ஃபுகோகா. ஃபுகோகாவின் அடிப்படை கொள்கை இயற்கையைச் சீர்திருத்திப் பலன்களைச் சுரண்டுவது அல்ல, இயற்கைக்கு இசைவாகச் செயல்பட்டு அதிகப் பலன்களைப் பெறுவதுதான்.
சுயமான ஆராய்ச்சி
யோகஹாமா சுங்கத் துறையில் தாவரக் கண்காணிப்பாளராகச் செயல் பட்டுவந்த ஃபுகோகா, சுயமாக அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டுவந்தார். ஒரு கட்டத்தில் ‘இயற்கையைப் புரிந்துகொள்வது மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டது' என்ற முடிவுக்கு வந்தார்.
இளமையின் உச்சமான 25 வயதில் புதிய பார்வையைப் பெற்று, வேலையைத் துறந்தார். ஜப்பானின் ஷிகோகு தீவிலுள்ள அயோ என்ற ஊரில் இருந்த அவருடைய தந்தையின் ஆரஞ்சு தோட்டத்துக்குப் போனார். அடுத்த 70 ஆண்டுகளுக்கு, அதுதான் அவருடைய பரிசோதனைக் களமாக இருந்தது. அந்தக் காலம் முழுவதும் பயிர்களை வளர்க்க அவர் எந்த வகையிலும் மெனக்கெடாமல் இருந்தது தான், அவர் நிகழ்த்திக்காட்டிய மிகப் பெரிய மாற்றம்.
அவர் தனது வயல்களை உழுததில்லை, களை பிடுங்கியதில்லை, களைக் கொல்லி அடித்ததும் இல்லை. வரிசையாக விதைகளை நடவில்லை, விதைகளை நிலத்தில் அங்கங்கே தூவினார். இயந்திரங்கள், பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் அல்லது கலப்பு உரம் என எதையும் வயலில் அவர் இடவில்லை.
இயற்கையின் வழியில்
“சுயமாகச் சமநிலைபடுத்திக் கொள்ளும் நடைமுறைகள் இயற்கையிடம் உண்டு. நவீன வேளாண்மை மூலம் அவற்றைத் தொந்தரவு செய்வதால் பலவீனமான, வேதிப்பொருட்களை நம்பும் பயிர்களையே உருவாக்க முடியும். இது நிலம், நீர், காற்று உட்பட அனைத்து இயற்கை வளங்களையும் மாசுபடுத்தும்.'' என்று ஃபுகோகா எச்சரித்தார்.
ஃபுகோகாவின் வயல்கள் ஒரே பயிரைக் கொண்ட பச்சைப் பாலைவனமாக இல்லை. அவரது பழத் தோட்டங்களில் ஆரஞ்சு மரங்களின் கீழே புற்கள், மூலிகைகள், காய்கறிகள் போன்றவை கூட்டாகவும் இயற்கையாகவும் வளர்ந்தன. ஒரு காட்டில் தாவரங்கள் ஒருங்கிணைந்து செழித்து வளருவதைப் போல, ஃபுகோகாவின் வயல்களில் அனைத்து வகைத் தாவரங்களும் செழித்தோங்கின.
ஃபுகோகா வலியுறுத்திய ‘எதையும் செய்யாமல் இருக்கும்' வேளாண்மை, நவீன வேளாண் தொழில் நுணுக்கங்களுக்கு நேரெதிராக இருந்தது. அறிவியல்பூர்வமான நிரூபணம் என்று வலியுறுத்தப்பட்ட விஷயங்களுக்கு எதிராக அவருடைய வயல்களில் பயிர்களும் பழங்களும் செழித்து வளர்ந்தன, சத்தாகவும் இருந்தன.
ஃபுகோகாவின் முறை மூலம் விவசாயிகளுக்கு ஓய்வு கிடைக்கும், மூலப்பொருள்கள், முதலீடு அதிகம் தேவையில்லை, சுற்றுச்சூழலை அது மாசுபடுத்துவதும் இல்லை. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் தனது வேளாண் முறை பற்றி ஃபுகோகா பயிற்சியளித்துள்ளார். 1988-ம் ஆண்டு சமூக சேவைக்கான ராமன் மகசேசே விருதை அவர் பெற்றார்.
நவீனமயம் உருவாக்கிய வேதி எச்சங்கள் கலந்த உணவு, அவற்றால் எழுந்த ஆரோக்கியச் சிக்கல்களுக்கு ஃபுகோகாவின் இயற்கை வேளாண் தொழில்நுட்பத்திடம் விடை இருக்கிறது.
வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா நினைவு நாள் - ஆகஸ்ட் 16
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT