Published : 17 Feb 2018 10:49 AM
Last Updated : 17 Feb 2018 10:49 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 41: முத்துக் குளித்துறை

 

ட்டுப் பத்து குளியாளிகளும் துணையாட்களும் அதிகாலைப்பொழுதில் சங்கு குளிப் படகில் புறப்படுகிறார்கள். படகின் பொறுப்பாளர் சம்மாட்டி. அவரே குளியாளிகளின் உயிருக்குப் பொறுப்பு. பிற்பகல் கடல் நீர் தெளிவானதாகவும் பகல் வெளிச்சம் போதுமானதாகவும் இருந்தால்தான் சங்கு குளிக்க முடியும். எப்படியிருந்தாலும் பிற்பகல் மூன்று மணிக்குக் கரை திரும்பியாகவும் வேண்டும்.

சங்கு, முத்துப் படுகைகள் இருக்குமிடங்களை அடையாளம் கண்டு அழைத்துப் போகிற புலமையாளர்கள் இருப்பார்கள். பரமந்தாடி என்பது இவர்களின் பெயர் (பார்: பாறை; மன்னாடி: ஒரு சாதிப் பட்டப் பெயர்). குளியாளிகள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை படகில் ஏறி சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வார்கள். திறமை மிகுந்த குளியாளி ஒரு பயணத்தில் அதிகபட்சம் 40 முறை மூழ்குவார்.

சங்கு குளிப்பது ஒழிய, வலைகளில் சங்கு இயல்பாகக் கிடைப்பதுண்டு. சங்கு அறுவடைக்காக நண்டு வலை,வெள்ளை வலை, தூரி வலை, சங்கு மடி போன்ற உபகரணங்களையும் பயன்படுத்துகிறார்கள். இயந்திர இழுவை மடிகளிலும் சங்குகள் கிடைக்கின்றன.

இலங்கையிலும் இந்தியரே

முத்துக் குளித்துறை, தனுஷ்கோடி முதல் குமரி முனை வரையிலான தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியது. இப்பகுதியுடன் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரை உட்பட தமிழகத்தின் பல்வேறு கரைக்கடல் பகுதிகளில் சங்கெடுத்தல் நடைபெறுகிறது. சங்கு சலாபத்துக்கு நீண்ட வரலாறு உண்டு.

இலங்கைப் பகுதிகளில் இலங்கை விடுதலை பெறும் காலம்வரை இந்தியர்களே அங்கு சங்கு குளித்துள்ளனர். இலங்கையிலிருந்து சங்கு ஏற்றுமதி பற்றிய குறிப்பு கி.பி. 851-ல் கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழகக் கடற்கரையில் பத்தாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் முத்துச்சலாபத்தை வென்றதாய் ஒரு குறிப்பு உண்டு. முத்துக் குளித்துறையில் பரதவர்கள் கி.பி. 1523 முதல் போர்த்துக்கேயர் ஆதரவுடன் சங்கு குளித்தனர்.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் சங்கு சலாபம், முத்து சலாபத்துடன் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவாப் மன்னர்களிடமிருந்து அது ஆங்கிலேயர் கைக்கு மாறியது. நாடு விடுதலை அடைந்ததோடு சங்கு, முத்து சலாபம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. தொடக்கக் காலத்திலிருந்தே இந்தியாவில் அறுவடையாவதில் பெரும்பகுதி சங்குகள் பிரம்மபுத்திரா, மேக்னா நதிகள் வழியாக வங்காளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவை அசாமுக்கும் அனுப்பப்பட்டன.

கடலுயிர்ச் செல்வம்

‘முத்துக் குளித்துறை ஒரு நிலவியல் விபத்து’ என்று சூசன் பெய்லி என்னும் ஆய்வாளர் குறிப்பிடுவார். மன்னார், பாக் நீரிணைக் கடற்பகுதிகளில் நிலவும் தனித்தன்மை வாய்ந்த பருவநிலையும் சூழலியலும் பல்லுயிர் வளத்துக்குச் சாதகமாக அமைந்திருக்கின்றன.

உலகிலேயே கடலுயிர்ச் செறிவு மிகுந்த இடங்களின் பட்டியலில் மன்னார் கடல்பகுதி ஐந்தாவது இடத்திலுள்ளது. பவளத்திட்டுகளும் கடற்கோரைகளும் பாலூட்டி இனங்களும் இங்கே மிகுந்துள்ளன. அதுபோலவே, சங்குகளும் முத்துச்சிப்பி இனங்களும் அமைந்துபட்டன. முடியரசுகளும் காலனியரும் மிஷனரிகளும் முத்துக் குளித்துறையைக் கைப்பற்றப் போட்டியிட்டது முத்து, சங்கு, சலாபத்தை முன்னிட்டுத்தான்.

இன்று சங்குப் படுகை தூத்துக்குடிப் பகுதியில் அருகிவிட்டது. சங்கு குளிக்கும் ஓரிரு இனக்குழுக்கள் தொல்லியல் காலப் படுகைகளிலிருந்து புதையுண்ட சங்குகளைச் சேகரித்துவருகின்றனர். சிலர் உயிர்வளி உருளையுடன் சங்கு குளிக்கின்றனர்.

அலுப்புத் தீர்த்த போதை

கடலில் முக்குளிப்பது ஆபத்து நிறைந்த தொழில். கரை திரும்பும் குளியாளிகள் அலுப்புத் தீர்க்க மது அருந்தும் பழக்கத்தை வைத்துக்கொண்டனர். டச்சுக்காரர்கள் பரதவர்களின் மதுப் பழக்கத்தைப் பயன்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டியதாக ஜேம்ஸ் ஹார்னெல் 1914-ல் எழுதியுள்ளார்.

வணிகப் போட்டியை முன்னிட்டு, பார்ட்டர் தனக்குச் சங்குகளை விற்கும் குளியாளிகளுக்காக இரண்டு ரம் பேரல்களை குழாயடியுடன் வைத்திருந்தார். கரைக்கு வரும்போது ஒவ்வொரு குளியாளியும் அதிலிருந்து ஒரு சட்டி ரம் பிடித்துக் குடித்துக்கொள்ளலாம். பார்ட்டர் தனக்குச் சாதகமாக விலைவைத்து சங்கு கொள்முதல் செய்துகொள்ள ஓர் உபாயமாக ரம் அமைந்தது.

(அடுத்த வாரம்:நெத்திலி எஸ்டேட்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல்ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x