Last Updated : 17 Feb, 2018 10:57 AM

 

Published : 17 Feb 2018 10:57 AM
Last Updated : 17 Feb 2018 10:57 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 70: மண் நலமும் உயிர் வளமும்

 

துவரை நாம் பார்த்த அனைத்துக் கூறுகளும் பண்ணையின் வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், வேளாண்மைக்கு அடிப்படையாக விளங்குவது மண்ணின் தன்மைதான். நல்ல மண் இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நல்ல நீரும் நல்ல மண்ணும் அமைந்துவிட்டால், நமது பண்ணையம் மிக எளிதாகிவிடும்.

ஆனாலும் மண் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதைச் சரிசெய்யும் நுட்பங்களும் இன்று இயற்கை முறையில் வளர்ந்துவருகின்றன. இயற்கை முறையில் எப்படி எல்லாம் மண்ணை வளப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

உயிரினங்களின் தொட்டில்

கடும் பாறை முதல் வளமான வண்டல் நிலம்வரை மண் அமைப்புக் காணப்படுகிறது. மண் வளம், நிலத்தின் அடிப்படையில் அமைகிறது. மலை, பள்ளத்தாக்கு என்று பல்வேறு வடிவங்களில் நிலம் காணப்படுகிறது. உயிரினங்களின் தொட்டில் இந்த நிலம் என்னும் தாய்தான். நிலத்தின் மேலடுக்கு மண் எனப் பெயர் பெறுகிறது. இந்தப் பூவுலகத்தை ஓர் ஆப்பிள் பழம்போல கற்பனை செய்துகொண்டால் அதன் மேல்தோல் அளவே மண் ஆகும். இதில்தான் உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்கள் வாழ்கின்றன.

மண்ணின் ஆழம், தன்மை ஆகியவை இடத்துக்கு இடம் மாறுகிறது. ஒரு செ.மீ. நல்ல மேல் மண் உருவாகப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். இதில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கான ஊட்டங்கள் அனைத்தும் உள்ளன. மணல் என்பது வளமற்ற மண்.

நிறம் காட்டும் தன்மை

முதலில், மண்ணைப் பற்றிய புரிதல் உழவர்களுக்கு ஏற்பட்டபோது சில அடிப்படையான அடையாளங்களையும் நடைமுறைகளையும் வைத்துப் பகுத்தும் தொகுத்தும் வைத்தார்கள். மண்ணின் நிறம், சுவை, நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் திறன், மண்ணில் இருக்கும் மணல் தன்மை (மண் வேறு, மணல் வேறு), மண்ணின் பன்னல் அதாவது பிசுபிசுப்புத் தன்மை, மண்ணில் நீர் வடியும் தன்மை, மண்ணில் காணப்படும் தாவர வகைகள், மண்ணில் காணப்படும் கரையான் போன்ற சிறுஉயிர்கள், மண்ணின் நிலச்சரிவு - இப்படியாக மண்ணைக் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப வகைப்படுத்தி வைத்தார்கள். ஆனால், நவீன அறிவியல் வளர்ந்த பின்னர் மண்ணைப் பகுப்பாய்வு செய்யும் முறை மிகவும் நுட்பமாக மாறிவிட்டது.

மண்ணின் நிறத்தை வைத்து மண்ணின் மட்குத்தன்மையை அறிந்துகொள்ளலாம். மண்ணின் சுவையை வைத்து அதன் அமில, காரத் தன்மையைக் கண்டறியலாம். மண்ணில் காணப்படும் தாவரங்களின் தன்மையை வைத்து மண்ணின் நலனைக் கண்டறியலாம். மண்ணின் வளமும் மண்ணின் நலமும் மிகவும் அடிப்படையான தேவைகள். மண்ணின் நலனைப் பொருத்தே மண் வளம் அமையும்.

நவீன அறிவியல், மண்ணில் உள்ள தாதுக்களையும் மட்குகளையும் வகைப்படுத்தும். அதாவது மட்காதப் பொருட்கள், மட்கும் பொருட்கள் என்று பிரிக்கலாம். மண்ணில் காணப்படும் துகள்களின் அடிப்படையில் மண்ணின் அமைப்பு தீர்மானிக்கப்படுகிறது. 0.002 மி.மீ. குறைவாக உள்ள துகள்களைக் கொண்ட மண் களிமண் என்றும், 0.05 மி.மீ. அதிகமாக உள்ள மண்ணை வண்டல் மணல் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால், மணல் என்பதில் அதிக அளவு மட்குப் பொருள் இருக்காது. உயிர்களும் இருக்காது.

(அடுத்த வாரம்: நில வகைகள்)
கட்டுரையாளர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x