Last Updated : 02 Mar, 2024 06:03 AM

 

Published : 02 Mar 2024 06:03 AM
Last Updated : 02 Mar 2024 06:03 AM

இயற்கையின் பேழையிலிருந்து! 25: அறிவைப் பொதுமை செய்வோம்

நீங்கள் ஓர் இயற்கை ஆர்வலர். உங்கள் ஊர் குளத்தில் பல வகைப் பறவைகள் உள்ளன. அங்குள்ள மரங்களில் அவை கூடமைத்துள்ளன. குளக்கரையில் பல மூலிகைச் செடிகள் இயல்பாக வளர்ந்து, மக்கள் அவற்றை சேகரித்துக்கொள்கின்றனர். அந்தக் குளத்தின் நீரை ஊர் மக்களும் சாகுபடிக்குப் பயன்படுத்துகிறார்கள். அவ்வப்போது மீனையும் பிடித்துக்கொள்கிறார்கள். நீர் வற்றிப் போகும் காலத்தில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்படுகிறது அந்தக் குளம்.

இந்த வேளையில் அக்குளத்தில் ‘வளர்ச்சிப் பணிகள்’ எனும் பெயரில் மரங்களை வெட்டி, குளக்கரையைச் சுற்றிலும் சிமெண்ட் நடைபாதை அமைத்து, குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் நிரப்பி சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சவாரி விட ஏற்பாடு நடக்கிறது.

இவற்றையெல்லாம் நீங்களும் ஊராரும் வேண்டாம் என்று சொல்லும்போது, ‘வளர்ச்சிப் பணியால்’ஆதாயமடைவோர் ‘இந்தக் குளம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?’ என்று கேள்வி எழுப்புகின்றனர். நீங்கள் அதற்கான ஆவணங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அக்குளத்தின் பல்லுயிர் வளம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும் என்பது குறித்தும் உங்களுக்குத் தெரியவில்லை.

அதே ஊரின் அருகில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அக்குளத்தில் உள்ள பறவைகள், மரங்கள், மற்ற உயிரினங்கள் யாவற்றையும் ஆவணப்படுத்தி ஆய்வறிக்கையைப் பதிப்பித்துள்ளார்.

அந்தக் குளம் பல வகையான உயிரினங்களுக்குப் புகலிடமாகவும், சில அரிய பறவைகளின் முக்கிய வாழிடமாகவும், ஊர் மக்களுக்குப் பலவகையில் பயனுள்ளதாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்தக் குளம் குறித்த ஆய்வுக் கட்டுரையை ஒரு பன்னாட்டு ஆய்விதழில் அவர் வெளியிட்டுள்ளார்.

என்ன செய்யலாம்? - அந்த வாழிடத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சியாக அந்த ஊர் மக்கள் என்ன செய்திருக்கலாம்? அவ்வூரில் ஒரு பல்லுயிர் மேலாண்மைக் குழுவை (Biodiversity Management Committee) ஏற்படுத்தி அவ்வூர் மக்களின் துணையுடன் அங்குள்ள மரங்கள், மூலிகைத் தாவரங்கள், அவை குறித்த மரபுசார் அறிவு, மீன்கள், பறவை வகைகள், மற்ற உயிரினங்கள் தொடர்பான தகவல் அனைத்தையும் மக்கள் பல்லுயிர்ப் பதிவேட்டில் (People’s Biodiversity Register) ஆவணப்படுத்தலாம்.

அதே வேளையில் சேகரித்த தரவுகளை eBird, iNaturalist, India Biodiversity Portal போன்ற மக்கள் அறிவியல் (Citizen Science) திட்டங்களிலும், செய்தித்தாள்களிலும் பதிவுசெய்யலாம். இத்தகவல்களின் அடிப்படையில் அந்த இடத்தைப் பாதுகாக்க முற்படலாம்.

அந்த ஆராய்ச்சியாளர் என்ன செய்திருக்க வேண்டும்? ஆய்வின் முடிவுகளை அனைவருக்கும், குறிப்பாக அந்த ஊர் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தெரிவித்திருக்க வேண்டியது அவரது கடமை. மேலும் அவர் சேகரித்த தரவுகளைப் பொதுவெளியில் பதிவுசெய்திருக்க வேண்டும்.

அவரது ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் இடத்தைப் பாதுகாக்க உதவும், ஆனால், அத்தகவல்கள் அந்த ஊர் மக்களைச் சென்றடையவில்லை. இது ஒரு கற்பனையான நிலைமை என்றாலும், இங்கு நான் சொல்ல வருவது நமக்குத் தேவையான தகவல்கள் ஒரு பொதுத் தளத்தில் இருக்க வேண்டும் என்பதைத்தான். அறிவியல், வரலாறு போன்ற துறைகளின் தகவல்களை அனைவருக்குமானதாக ஆக்குவது மிகவும் அவசியம்.

அனைவருக்குமான அறிவியல்: யுனெஸ்கோவின் பரிந்துரையின்படி அனைவருக்குமான அறிவியல் (Open Science) என்பது, எல்லாத் துறைகளிலும் உள்ள அறிவியல் ஆய்வு முடிவுகள், படைப்புகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும்,அறிவியலாளர்களுக்கும், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையிலும் இருக்க வேண்டும் எனும் கொள்கையும் நடைமுறையும் ஆகும்.

இப்பரிந்துரைகள் அறிவியல் அறிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்தைக் கொண்டதாகவும், அதே வேளையில் அந்த அறிவின் ஆக்கங்கள் யாவும், அனைவரும் புரிந்துகொள்ளும்படியும், சமநிலை அடிப்படையிலும் (equitable), நெறிமுறை தவறாத இயல்புடையதாகவும், நீடித்து நிலைக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

அனைவருக்குமான அறிவியல் என்பது எந்த ஓர் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சித் தரவுகள், உயர்மட்டத் தரவுகள் (metadata), கல்வி வளங்கள், மென்பொருள்கள் (software), மென்பொருள் மூலம் (Source Code), வன்பொருள் (Hardware) அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் (Open Access) ஒரு பொதுத் தளத்தில் (Public domain) இருக்க வேண்டும்.

அப்படிப் பொதுத்தளத்தில் இல்லாவிட்டாலும், மேற்சொன்னவை அனைத்தும் அனைவருக்கும் கிடைக்குமாறும், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் மறுபயன் பாட்டிற்கும் (reuse), அந்த முறைகளைத் தழுவி வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், அவற்றின் தரவுகளையும், முடிவுகளையும் பரப்பும் விதமான பொது உரிமத்தைக் (Open Licence) கொண்டதாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து வெளிவரும் Current Science, Journal of Threatened Taxa, Indian Birds போன்ற ஆய்விதழ்களை அனைவரும் வாசிக்க முடியும்.

இணைய வளங்கள்: இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அறிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையம் தகவல்களை வாரி வழங்குகிறது. இயற்கை அறிவியல் சார்ந்த வளங்கள் கிடைக்கும் சில இணையதளங்கள்.

விக்கிபீடியா (Wikipedia) - ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கட்டற்ற இந்தக் கலைக்களஞ்சியத்துக்குப் பங்களிக்கலாம். இயற்கை, காட்டுயிர் சார்ந்த பல கட்டுரைகள் உள்ளன. எனினும், இவை அனைத்துமே துறைசார் வல்லுநர்களால் எழுதப்பட்டவையல்ல.

ஒரு தகவல் இதில் கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதைப் படிப்பவர் பகுத்தறிந்து தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரம் பல தமிழ்ப் பக்கங்களில் தூய தமிழ், அறிமுகம் இல்லாத புதிய பதங்கள், அப்பட்டமான மொழிபெயர்ப்பு போன்றவை நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.

விக்கிமீடியா பொதுவகம் (Wikimedia Commons) https://commons.wikimedia.org - இது ஒரு விக்கிமீடியா நிறுவனத் திட்டம். இத்தளத்தில் காப்புரிமை இல்லாத அல்லது சில கட்டுப்பாடுகளுடன் பொது உரிமம் கொண்ட படங்கள், காணொளிகள் கிடைக்கும். விக்கிபீடியா கட்டுரைகளுக்கான படங்கள் இத்தளத்திலிருந்துதான் எடுக்கப்படுகின்றன.

நமக்கு விருப்பமான துறை சார்ந்த ஒளிப்படங்கள், நிலப்படங்கள், ஓவியங்களை ஒரே இடத்தில் சேகரித்துவைக்க சிறந்த தளம் இது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள இயற்கை பாதுகாப்பு சார்ந்த ஒளிப்படங்களை இந்தப் பகுப்பில் காணலாம் WikiProject Nature and conservation in India

விக்கிபீடியா நூலகம் (The Wikipedia Library)- https://wikipedialibrary.wmflabs.org/ சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பெறக்கூடிய ஆராய்ச்சி கட்டுரைகளை, விக்கிபீடியா திட்டங்களுக்குக்கணிசமாகப் பங்களிப்பவர்கள் மட்டும் விக்கிபீடியா நூலகத்தின் மூலம்இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப் படுகிறது.

இன்டர்நெட் ஆர்கைவ் (Internet Archive) - https://archive.org/- காப்புரிமை இல்லாத அல்லது காலாவதியான லட்சக்கணக்கான அரிய நூல்கள், ஆவணங்கள், காணொளிகள், ஒலிக்கோப்புகள், ஒளிப்படங்கள் ஆகியவை இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, இந்தியப் பறவையியல் பற்றிய பெரும்பாலான பழைய நூல்கள் அனைத்தும் கொண்ட இலவச மின்னூலகம் இது.

பயோடைவர்சிட்டி ஹெரிடேஜ் லைப்ரரி (Biodiversity Heritage Library) - https://www.biodiversitylibrary.org/ - இந்தப் பல்லுயிர் மரபுரிமை நூலகம் உலகில் உள்ள பல்லுயிர் சார்ந்த பல அறிவியல் ஆய்விதழ்கள், ஆராய்ச்சியாளர்களின் களக் குறிப்புகள், ஒவியங்கள் போன்ற மதிப்புமிக்க ஆவணங்களை எண்ணிமப்படுத்தி (digitize) இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளது.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள பழைமையான அரசு சாரா காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனமான பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் சார்பில் 1886இல் வெளியான முதல் ஆராய்ச்சி இதழ் தொடங்கி 2012 வரை வெளிவந்த அனைத்து இதழ்களையும் இந்தத்தளத்தில் காணலாம்.

புராஜெக்ட் கூட்டன்பர்க் Project Gutenberg - https://www.gutenberg.org/ - இந்தப் பழமையான மின்னூலகத் திட்டம் 1971இல் தொடங்கப்பட்டது. இந்த மின்னூலகத்தில் 70,000 மின்னூல்கள் (eBook) உள்ளன. பல இயற்கை அறிவியல் நூல்களும் கிடைக்கின்றன.

சை-ஹப் - Sci-hub - இந்த இணையதளம் நிழல் மின்னூலகமாகக் கருதப்படுகிறது. கசகிஸ்தானைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா எல்பக்யான் மாணவியாக இருந்தபோது ஆராய்ச்சிக்குத் தேவையான நூல்களின் விலைஅதிகமாகவும், ஆய்விதழ்களில் இருந்து கட்டுரைகளைச் சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்கும் நிலையைக் கண்டு, அந்த இணையதளங்களைத் தகர்த்து (Hacking) அறிவியல் ஆதார வளங்களைப் பெற்றிருக்கிறார்.

மென்பொருள் தகர்ப் பாளரான (hacker) அவர் 2011இல் Sci-hub இணையதளத்தை உருவாக்கினார். உலகில் 95% ஆய்விதழ்களில் வெளியாகும் கட்டுரைகளை இத்தளத்தில் பெறலாம்.

லைப்ரரி ஜெனிசிஸ் Library Genesis - https://www.libgen.is/ - இதுவும் ஒரு நிழல் மின்னூலகம். இந்தத் தளம் பெரும்பாலும் நூல்களுக்கானது. வசதியில்லாத ஆராய்ச்சி யாளர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விலையுயர்ந்த பல நூல்களை இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் அனைவருக்குமான அணுகுதல்(Open Access)

தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virual Academy) தமிழிணையம் - மின்னூலகம் https://www.tamildigitallibrary.in/ - தமிழில் உள்ள அரிய நூல்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், ஆய்விதழ்கள், ஓலைச்சுவடிகள், பழமையான அரசு ஆவணங்களைக் கொண்டது இந்த மின்னூலகம்.

ஷோத்கங்கா Shodhganga https://shodhganga.inflibnet.ac.in/ - இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வேடுகளை (Thesis) இந்த இணைய தளத்தில் வாசிக்கலாம்.

(நிறைந்தது)

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x