Published : 03 Feb 2018 10:30 AM
Last Updated : 03 Feb 2018 10:30 AM
த
மிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் மாடு என்று கருதப்படுகிறது. இதிலிருந்தே மற்ற உள்நாட்டு மாட்டினங்கள் பரிணமித்ததாகக் கருதப்படுகிறது. தென் இந்தியாவின் அடையாள சின்னமாக இந்தக் காளைகள் போற்றப்படுகின்றன.
‘சங்க காலக் கொங்கு நாணயங்கள்’ என்ற நூலில் கொங்கு மாடுகளைப் போன்ற உருவம் பொறித்த சேரர் கால நாணயங்கள், கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் கண்டெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
திருப்பூர் மாவட்டம் பழையகோட்டை பட்டகாரர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் முயற்சியால் இந்த இனம் பாதுகாக்கப்பட்டதாக தகவல் உண்டு. காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, பவானி ஆகிய ஊர்கள், ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இம்மாடுகள் அதிகம்.
கம்பீரத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இன காளைகளும் மாடுகளும் ஜல்லிக்கட்டுகளில் அவிழ்த்து விடப்படுவதற்குப் பெயர் பெற்றிருந்தாலும் ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இனப் பசுக்கள் பால் உற்பத்தி காலத்தில் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2 லிட்டர்வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டவை.
பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதங்கள் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறம். திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். தவிர மயிலை (வெள்ளி), பிள்ளை (வெண்மை), செவலை (சிவப்பு), காரி (கறுப்பு) ஆகிய நிறங்களிலும் இருக்கலாம்.
கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கு விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் உள்ளன. பிரேசில் நாட்டில் காங்கேயம் மாடுகள் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT