Published : 10 Feb 2018 11:46 AM
Last Updated : 10 Feb 2018 11:46 AM
இ
ந்தியக் கோழி இனங்களில் கிளிமூக்குச் சேவல், தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாகக் கருதப்படுகிறது. என்றாலும், இது அசீல் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தக் கலப்பினச் சேவல்கள் அதிகளவில் தமிழகத்தில் வளர்க்கப்படுவதால், இது தமிழகத்தின் சேவல் இனம் என்று சொல்பவர்களும் உண்டு.
இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் கருதப்படுகின்றன. 'சேவல்கட்டு' என்று சொல்லப்படும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படும் இவை, சண்டைச் சேவல்களில் 'ஃபேன்சி' வகைச் சேவல்களாகக் கருதப்படுகின்றன.
இந்தக் கோழிக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் இதை 'விசிறிவால் சேவல்' என்று அழைக்கின்றனர். இதனுடைய மூக்கு கிளிக்கு இருப்பதைப்போல கொஞ்சம் வளைந்திருப்பதால், இதை 'கிளிமூக்குச் சேவல்' என்றும், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்' என்றும் அழைக்கின்றனர். கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகை சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
இதர சேவல் இனங்கள், கோழிகளுடனான இனப்பெருக்கத்தின்போது, தான் இணைசேர நினைக்கிற கோழியைத் துரத்தி உறவுகொள்ளும். ஆனால் கிளிமூக்குச் சேவல் கோழியைத் துரத்தி உறவு கொள்ளாது என்று கருதப்படுகிறது. மேலும் கோழியே, சேவலிடம் சென்றால் மட்டுமே கிளிமூக்குச் சேவல் இணைசேரும் தன்மை கொண்டது என்று சேவல் வளர்ப்போர் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை சுமார் 10 கிலோ. இதன் சராசரி உயரம் 2 அடி. இந்த வகைச் சேவல்களின் சராசரி வாழ்நாள் 5 முதல் 7 ஆண்டுகள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை.
நிறத்தை அடிப்படையாகக்கொண்டு கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என கிளிமூக்குச் சேவல்களுக்குப் பெயரிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT