Published : 05 Aug 2014 12:00 AM
Last Updated : 05 Aug 2014 12:00 AM
இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்?
இந்த ஹைகூவுக்கு விடையாகப் பிரான்ஸ் நாட்டில் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த யூஜின் மாஸல் (Eugne Mazel) என்ற மனிதரை, ஒரு மனிதப் புல்லாங்குழல் என்று நிச்சயம் சொல்லலாம். காற்றின் பிரார்த்தனையைக் கண்களுக்கு விருந்தாக்கும் அவர் அமைத்த தோட்டத்தின் பெயர் ‘பாம்பூசரீ தி பிரஃபிரான்ஸ்’.
மனிதச் சமூகம் என்பது ஒரு மூங்கில் காடு. யாருக்கும் பயன்படாமல், மடியும் மூங்கில்களாக வாழ்ந்துவிட்டுச் செல்வோர் பலருண்டு. அதேநேரம் சக மனிதர்களும் சமூகமும் வண்டுகளாகத் துளைத்த துளைகளின் வழியே அன்பெனும் காற்றை அனுமதித்து, ‘மானுட நேசம்’ எனும் இசையாக வெளிப்படுத்தும் புல்லாங்குழலாக வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்கள் எத்தனை பேர் ?
காற்றின் பிரார்த்தனை
தெற்கு பிரான்ஸில் ஒரு வெற்றிகரமான வணிகராக வாழ்ந்துவந்த யூஜின் மாஸல் மரங்கள், செடிகளோடு மணி கணக்கில் செலவிடும் ஒரு தோட்டக்கலைப் பிரியர். ஏலம், கிராம்பு, லவங்கம், பட்டை போன்ற மசாலாப் பொருட்களைக் கொள்முதல் செய்ய ஆசிய நாடுகளுக்கு அவர் வந்தபோதெல்லாம், அவரை அதிகம் கவர்ந்தது பச்சையும் மஞ்சளுமாக வசீகரித்த மூங்கில்கள்தான்.
காலைக் கதிரொளி, மயக்கும் மாலை வெயில் இரண்டிலுமே டாலடிக்கும் மூங்கில் இலைகள் மெல்லிய தென்றலுக்குச் சிலுசிலுப்பதை ‘காற்றின் பிரார்த்தனை’ என்று வர்ணித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காற்று பிரார்த்தனை செய்வதைத் தனது ஊரிலும் கண்டுகளித்தால், அதுவே ஒரு தியானம் என்று நினைத்த மாஸலுக்கு ஒர் உண்மை உரைத்தது.
ஆசியாவில் செழித்து வளரும் மூங்கில்கள் ஐரோப்பாவில் அதுவரை வளர்க்கப்படவே இல்லை. காரணம், தட்பவெட்பம். பெரும்பாலான மூங்கில் வகைகள் 24 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான தட்பவெட்பத்தில் தாக்குப்பிடித்து வளரும். 20 ஆயிரம் அடி உயரமென்றாலும் அங்கேயும் வளர்ந்து மேகங்களை வெள்ளையடிக்க முயற்சி செய்யும்.
அதேநேரம் கன்றுகளாக ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்துக்கு எடுத்து வருவதற்குள் குருத்துகள் காய்ந்து, வேர்கள் உலர்ந்து போய்விடும். இதனால் பிரான்ஸ் தேசத்தில் மூங்கில்களை வளர்க்க வேண்டும் என்ற அவரது கனவு, முதல் படியில்கூட அடி எடுத்து வைக்கவில்லை. அதற்காக, தனது கனவைக் கைவிட அவர் தயாராக இல்லை.
கைகொடுத்த கப்பல்கள்
விமானம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. ஆசியாவிலிருந்து மூங்கில் கன்றுகளை இறக்குமதி செய்யக் கப்பல்களையே நம்பியிருந்தார் யூஜின் மாஸல். ஆனால், நாவாய்க் கப்பல்கள் ஆடியசைந்து பிரான்ஸ் வந்து சேர்ந்ததால் பலன் கிடைக்கவில்லை. பிறகு ஆங்கிலேயர்கள் வணிகம் பெருக்கவும், நாடுகளைப் பிடிக்கவும் கண்டுபிடித்த அதிவேக ஸ்டீம் இன்ஜின் கப்பல்கள் வரமாக அமைந்தன.
1827-ல் மூங்கில் கன்றுகள் பிரான்ஸுக்கு வந்து இறங்கின. தன் கனவு கருகிவிடுமோ என்று எண்ணிக்கொண்டிருந்த மாஸலின் ஆர்வம் துளிர்க்கத் தொடங்கியது.
பசுமை காதலன்
கப்பல்களில் வந்து சேர்ந்த விதவிதமான மூங்கில்களை எத்தனை நாட்கள்தான் பூந்தொட்டிகளில் வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பது? ஒரு மாபெரும் மூங்கில் தோப்பை உருவாக்க விரும்பிய மாஸல், அதற்குப் பொருத்தமான தட்பவெட்பமும், மண்வளமும் கொண்ட இடத்தைப் பிரான்சில் தேட ஆரம்பித்தார். அவர் தேடியதைப் போலவே கிடைத்த 84 ஏக்கர் பண்ணைத் தோட்டம் ஒன்றை, தெற்கு பிரான்ஸில் உள்ள ஆந்தூஸ் நகரம் அருகில் 1855-ல் வாங்கினார்.
அவர் கண்ட கனவு, பத்தே ஆண்டுகளில் மாபெரும் மூங்கில் தோப்பாகக் கிளை பரப்பியது. 20-வது ஆண்டின் முடிவில் மாஸலின் மூங்கில் தோப்பின் புகழ் தலைநகர் பாரிஸ் வரை பரவியது. அவரைப் பசுமை காதலன் என்று கௌரவித்தது ஆந்தூஸ் நகரியம்.
ஆனால், யூஜின் மாஸல் எதை நேசித்து உருவாக்கினாரோ அது கைவிட்டுப் போய்விடும் என்ற நிலை. வணிகத்தில் கடும் நஷ்டத்தைச் சந்தித்த மாஸல், திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். யூஜினின் மூங்கில்கள் சோக கீதம் இசைத்தன.
நிபந்தனையுடன் விற்பனை
தனது கனவை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட யூஜின், மூங்கில் தோப்பை அழித்துவிடாமல், அதைப் பேணி பாதுகாக்க உறுதி தருபவர்களுக்கு விற்கத் தயார் என்று ஆந்தூஸ் டவுன் ஹாலில் விளம்பரம் செய்தார். அதற்குப் பலன் இருந்தது.
கஸ்டன் நெக்ரெ (Gaston Ngre) என்ற செல்வந்தர் 1890-ம் ஆண்டு நிபந்தனையுடன் தோட்டத்தை வாங்கிக்கொண்டார். இன்றுவரை அவரது வம்சாவளியினரின் பராமரிப்பில் இருக்கும் மாஸலின் மூங்கில் தோட்டம், இன்றைக்கு 200 ஏக்கராக விரிந்து 200 வகை மூங்கில்களோடு ஆண்டுதோறும் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT