Published : 30 Dec 2023 06:00 AM
Last Updated : 30 Dec 2023 06:00 AM
எலிசபத் க்வெலிம் 1801இல் இங்கிலாந்திலிருந்து கப்பல் பயணம் மூலம் மதராசப்பட்டினத்திற்கு அவரது கணவருடனும், தன் தங்கையுடனும் வந்தடைந்தார். 1807இல் மறையும்வரை இயற்கை சார்ந்த, குறிப்பாகப் பறவைகளை மிகத் துல்லியமான ஓவியங்களாகத் தீட்டினார். இது மட்டுமல்லாது அவர் தீட்டிய 12 தாவரப் பூக்களின் ஓவியங்கள் மூலமும், அவரது சகோதரிக்கு எழுதிய கடிதப் பரிமாற்றங்களின் மூலமும் தாவரவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
எலிசபத்தின் தங்கை மேரி சைமண்ட்ஸ் அவரது தாயாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் வீட்டில் நடந்த ஒரு காட்சியை இப்படி விவரிக்கிறார். அந்தக் கடிதத்தின் சாரம்: "எலிசபத் க்வெலிமைச் சுற்றி சுமார் இருபது உள்ளூர் வாசிகள் (தாவரங்களைச் சேகரித்துக் கொடுப்பவர்கள்) நின்றுகொண்டிருக் கிறார்கள்; அருகில் ஒரு மேசையில் தாவரங்களை அடையாளம் காண உதவும் நூல்கள் நிறைந்திருக்கின்றன; தரையெங்கும் விதைகளைக் கொண்ட மரக் கொப்புகள் கூடைகூடையாகக் கிடக்கின்றன; இவற்றுக்கு நடுவே, எலிசபத் நின்றுகொண்டு களைத்துப் போகும்வரை, அந்தத் தாவரங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள்.
விதைகளும் தாவரங்களும், அருகிலுள்ள மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் ஏழை மக்களால் சேகரித்து வரப்பட்டவை. இங்குள்ள நாட்டு மருத்துவர்களிடமும், சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களிடமும், அத்தாவரங்களின் உள்ளூர்ப்பெயர்களையும் சம்ஸ்கிருதப் பெயர்களையும் கேட்டுக் கொண்டி ருக்கிறாள். இவற்றை எல்லாம் வைத்து ஓவியம் தீட்டுவதும், அத்தாவரங்களையும் விதைகளையும் எங்கள் தோட்டத்தில் நட்டு வைத்து வளர்த்துக்கொண்டும் இருக்கிறோம்...”.
உள்ளூர் மொழி கற்றல்: எலிசபத் க்வெலிம் வாழ்ந்த காலத்தில் மதராசப்பட்டினத்தில் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, உருது, சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகள் பேசப்பட்டன. எலிசபத், உள்ளூர் மக்களிடம் பேச ஏதுவாக தெலுங்கு மொழியைக் கற்று வந்திருக்கிறார். தாவரங்களைப் பற்றிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு எப்படி வந்திருக்கும் என்பதை, எலிசபத் இங்கிலாந்தில் வசிக்கும் அவரது சகோதரி ஹெஸ்டருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது. அந்த கடிதத்தின் சாரம்:
“...இந்திய மொழிகளைப் படிக்க வேண்டுமானால் தாவரங்களைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இவர்கள் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகளில் தாவரங்கள் முக்கிய அங்கமாக உள்ளன. அவர்கள் சொல்வது எந்தத் தாவரம் என்பதை அறியாமல், அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது கடினம்.
இதற்குத் தாவரவியலைப் படிப்பது அவசியமாகிறது. கொஞ்சம் படிக்க ஆரம்பித்ததும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது...” கடிதத்தில் சொன்னபடியே தாவரவியலை முறையாகக் கற்கவும் தொடங்கியிருக்கிறார். அவரது ஆசான் ஜெர்மானிய நாட்டிலிருந்து தரங்கம்பாடிக்கு வந்த மத போதகரும் தாவரவியலாளருமான முனைவர் யோஹான் பீட்டர் ராட்லர்.
இவர் தமிழில் புலமைபெற்று தமிழ்-ஆங்கிலம் அகராதியைத் (மூன்று தொகுதிகள்) தொகுத்தவர். இவர், 1803இல் தரங்கம்பாடியிலிருந்து வேப்பேரிக்கு மாற்றலாகியிருந்தார். இவ்வேளையில் எலிசபத் க்வெலிம் அவரை அணுகி வாரத்திற்கு இரண்டு முறை தாவரவியல் பாடங்களை அவரிடம் படித்திருக்கிறார்.
இவ்வேளையில் படாவியாவில் (தற்போதைய ஜகார்த்தா) இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தாவரத்தை வளர்த்து அதைத் துல்லியமாக வரைந்துள்ளார். இதைக் கண்ட ராட்லர் அது ஒரு புதிய வகைத் தாவரமாக இருக்கக்கூடும் எனக் கருதி அதற்கு க்வெலிமியா இண்டிகா (Gwillimia Indica) என தனது மாணவியின் பெயரை வைத்து வகைப்படுத்தியுள்ளார்.
இதன் உலர்தாவரத்தையும் இவரது ஓவியத்தையும் இங்கிலாந்திற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்குள்ளதாவரவியலாளர்கள் இது சீனாவைப் பூர்விகமாகக் கொண்ட Magnolia coco (ஒரு வகை செண்பக மரம்) எனும் தாவரம் என்றும் இது பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுவிட்டது என்பதையும் உணர்த்தினர். எனினும், இது குறித்த கட்டுரைகளில் எலிசபத் க்வெலிமின் ஆர்வத்தையும், துல்லியமான ஓவியத்தையும் வெகுவாகப் பாராட்டி யுள்ளனர்.
அறிவியல் ஆராய்ச்சி: மதராசப்பட்டினத்தின் இயற்கைவரலாற்றை, குறிப்பாக, பறவைகளையும் தாவரங்களையும் ஆராய்வதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தாலும், குடும்பத்தைப் பராமரிப்பது, விருந்தினர்களை உபசரிப்பது எனப் பல வேலைகளில் ஈடுபட வேண்டி யிருந்ததால் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே இந்த வேலைக்காகத் தன்னால் ஒதுக்க முடிகிறது என்று ஒரு கடிதத்தில் க்வெலிம் குறிப்பிட்டிருக்கிறார்.
எலிசபத் க்வெலிம் வரைந்த பறவை ஓவியங்களைப் பார்த்தால் அவர் எவ்வளவு நுட்பமாக, கூர்ந்து நோக்கி விவரங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் என்பதை அறியலாம். பறவைகளையும் தாவரங்களையும் பொழுது போக்கிற்காக ஓவியம் தீட்டாமல் தான் தீட்டப்போகும் விஷயத்தை ஓர் அறிவியலாளரைப் போலவே அவர் படித்திருக்கிறார்.
தாவரங்களையும் விதைகளையும் சேகரித்து, வரைந்து, அவரது தோட்டத்தில் வளர்த்து, உள்ளூர் வாசிகளிடம் அவற்றின் பெயர், மருத்துவக் குணம் முதலியவற்றை கேட்டுப்பெற்று ஆவணப்படுத்தி யுள்ளார். மேலும் அவ்வப்போது சேகரித்த தாவரங்களின் விவரங்களை இங்கிலாந்தில் உள்ளதாவரவியலாளர்களிடமும், நண்பர் களிடமும் கடிதங்கள் மூலம் பகிர்ந் திருக்கிறார்.
அங்கிருந்து அவரது நண்பர்கள் மூலம் தாவரங்கள் குறித்த நூல்களைக் கேட்டுப்பெற்று இத்துறையின் புதிய நிகழ்வுகளை அவ்வப்போது படித்துத் தெரிந்துகொண்டுவந்துள்ளார்.
இங்கிலாந்து சென்ற புடலங்காய்: இங்கிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்வழியே அவர்களுக்கு விதைகள், நாற்றுகளை அனுப்பியும் உள்ளார். அப்படி அனுப்பப்பட்ட ஒன்றுதான் புடலங்காயின் விதை. இவர் அனுப்பிய விதையை அவரது நண்பர் அங்கு பயிரிட்டு புடலங்காய்க் கொடியை வளர்த்துள்ளார்.
புடலங்காயை இங்கிலாந்து மக்கள் முதன்முதலில் அறிந்துகொண்டது எலிசபத் க்வெலிம் மூலமாகத்தான்! இங்கிலாந்திலிருந்து வெளிவந்த தாவரங்கள் குறித்த ஓர் இதழில் எலிசபத் க்வெலிமின் இந்தப் பங்களிப்புக் குறித்த செய்தியையும், அவரது தாவர ஓவியங்களின் துல்லியம் பற்றிப் பாராட்டி அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபத் க்வெலிம் வாழ்ந்த காலகட்டத்தில் ஒருசில பெண்களுக்கே தாவரவியலை தீவிரமாகக் கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் அறிவை மேம்படுத்துவதற்கான அமைப்பான ராயல் சொசைட்டியில் (Royal Society) பெண்கள் உறுப்பினர்களாகச்சேர ஆரம்பித்ததே 1945இல்தான். எனவே, அதற்கு முன் வாழ்ந்த எலிசபத் போன்றவர்களின் அறிவியல் பங்களிப்புகள் முறையாகக் கண்டுகொள்ளப்படாமலேயே போயின.
எனினும் காலனியாதிக்க இந்தியாவில் இருந்த ஆண் அறிவியலாளர்களுக்கு இணையாக, ஏன் அவர்களுக்கும் மேலாக மிக முக்கியமான அறிவியல் பணிகளை மேற்கொண்டதால் எலிசபத் க்வெலிமின் பங்களிப்பு தனிச்சிறப்பு வாய்ந்ததாகிறது.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT