Last Updated : 06 Jan, 2018 11:40 AM

 

Published : 06 Jan 2018 11:40 AM
Last Updated : 06 Jan 2018 11:40 AM

பருவநிலை... ஃபுக்குஷிமா... ஹைட்ரோகார்பன்!

2017-ல் சுற்றுச்சூழல் சார்ந்து தமிழில்

வெளியான முக்கியமான புத்தகங்கள்...

பனை மரமே பனை மரமே

ஆ.சிவசுப்பிரமணியன்

தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக்கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி- வாய்மொழி இலக்கியம்- நவீன இலக்கியம்வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.

காலச்சுவடு பதிப்பகம்,

கே.பி. சாலை, நாகர்கோவில்- 629001

4652-278525, விலை - ரூ.425/-

பறவையியல்

வ.கோகுலா & சி.காந்தி

தமிழ்ச் சூழலில் அறிவியல் சார்ந்த படைப்புகள் கணிசமாக இருந்தாலும் பறவையியல் குறித்த படைப்புகள் பெருவாரியாக இல்லை என்பதே உண்மை. சமீபகாலமாகத்தான் பறவைகள் தொடர்பான புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் சேர்ந்துள்ளது. பறவைகளின் உடற்கூறு பற்றி சற்று விரிவாகப் பேசுகிறது இது.

ஜாஸிம் பதிப்பகம், 1,

தபால் நிலையம் தெரு, காஜமலை, திருச்சி-23 9443587233

விலை - ரூ.300/-

பூச்சிகள் ஓர் அறிமுகம்

ஏ.சண்முகானந்தம்

இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். அதில் மிக முக்கியமானவை பூச்சிகள். பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அருவருப்பாகத் தோன்றும். ஆனால், அவை அருவருக்கத்தக்கவை அல்ல என்பதை அழகிய படங்களுடனும் அறிவியல் தகவல்களுடனும் சிறப்பாக அறிமுகம் செய்கிறது இந்த நூல்.

வானம் பதிப்பகம், M 22, 6-வது அவென்யு,

அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை- 89

விலை - ரூ.60/-

மூதாய் மரம்

வறீதையா கான்ஸ்தந்தின்

கடல் பழங்குடி வாழ்வின் அடிப்பதைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னை தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய்க் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சுவரை கடலின் மாணவனாக வாழ்கிறான். விழிப்புநிலை தவறவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடுகிறது.

தடாகம் வெளியீடு,

112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை - 41

044-43100442, விலை - ரூ.80/-

பருவநிலை மாற்றம்

என்.ராமதுரை

உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல், எளிமையாக விளக்குகிறது.

க்ரியா பதிப்பகம், புது எண். 2, பழைய எண். 25,

17-வது கிழக்கு தெரு, காமராஜர் தெரு,

திருவான்மியூர், சென்னை

044-4202 0283, விலை - ரூ. 130/-

உயிரி வளமும்

காலநிலை மாற்றமும்

கு.வி.கிருஷ்ணமூர்த்தி

பல்லுயிர் வாழும் பூமியில், இயற்கையின் கொடையைத் தற்காத்துக் கொள்வதே உத்தமம். பல மாற்றங்களுக்கும், சீற்றங்களுக்கும் புவி வெப்பமடைதலே மையக் காரணமாக உள்ளது. புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்பாடுகளே முதன்மைக் காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்படும் தாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.

உலகத் தமிழ் பண்பாட்டு மையம்,

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர்- 641 048

விலை - ரூ.200/-

ஹைட்ரோகார்பன் அபாயம்

கா.அய்யநாதன்

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கும் இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல்பூர்வமாகவும் ஆதாரப்பூரவமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல்.

கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், ஆம்பல் கட்டிடம்,

லாய்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14

044-42009603, விலை - ரூ.225/-

இனயம் துறைமுகம்

கிறிஸ்டோபர் ஆன்றணி

நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம்.

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி

04259 226 012, விலை - ரூ.120/-

ஃபுக்குஷிமா - ஒரு பேரழிவின் கதை

மிக்காயேல் ஃபெரியே

தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர்

நிலநடுக்கம், சுனாமி, ஃபுக்குஷிமா அணுஉலை விபத்து என மூன்று விபத்துகளை 2011-ம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான ஆசிரியர் தன் அனுபவங்களையும் அங்கு திரட்டிய தரவுகளையும் இந்தப் புத்தகத்தில் முற்றிலும் புதிய முறையில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தடாகம் வெளியீடு,

112, திருவள்ளுவர் சாலை,திருவான்மியூர், சென்னை - 41

044-43100442, விலை - ரூ.200/-

கையா, உலகே ஒரு உயிர்

ஜேம்ஸ் லவ்லாக்

தமிழில்: சா.சுரேஷ்

இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது.

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை, சென்னை -18

044 2433 2924,விலை - ரூ.160/-

தொகுப்பு: ச.ச. சிவசங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x