Published : 30 Sep 2023 06:03 AM
Last Updated : 30 Sep 2023 06:03 AM
இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்துவரும் நாட்டின் 718 மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தீவிரமான வறட்சியில் உள்ளன. மேலும் இந்தியாவின் 53% மாவட்டங்கள் மிதமான வறட்சி நிலையைக் கொண்டுள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் செப்டம்பர் 25, 2023 வரை, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மழைப் பொழிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. 20 மாநிலங்களில் மழைப்பொழிவு சராசரியைவிடக் குறைவாக இருந்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ராஜீவன் கூறுகையில், “நிச்சயம் இது நல்ல சூழல் இல்லை. இவை பயிர் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை நாம் விவசாயத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். இதற்கிடையில் 2023இல் குறைவாக மழைப்பொழிந்ததுதான் பயிர் உற்பத்தி குறைவுக்குக் காரணம் என்று நிபுணர்களும் கூறியுள்ளனர்.
காலநிலை மாற்றம்: விலங்குகள் இடப்பெயர்வு - தென் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் காலநிலை மாற்றத்தினால் நிலவும் கடும் வறட்சியினால் நீர், இரைத் தேடி யானைகள் பெரும் எண்ணிக்கையில் இடப்பெயர்வில் ஈடுபட்டுள்ளன. யானைகள் மட்டுமல்ல எருமைகள், காட்டெருமைகள், வரிக் குதிரைகள் போன்ற விலங்குகள் பலவும் அங்குள்ள தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அண்டை நாடான போட்ஸ்வானாவுக்குச் செல்வதாக அந்நாட்டின் வனவிலங்கு ஆணைய செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
வறட்சி காலத்தில் இடப்பெயர்வுகள் பொதுவானவை என்றாலும், முந்தைய மழைக்காலங்களில் ஏற்பட்ட மோசமான வறட்சியினால் இந்த ஆண்டு விலங்குகளின் இடப்பெயர்வு முன்னதாகவே நடைபெற்றுவருவதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT