Last Updated : 30 Sep, 2023 06:00 AM

 

Published : 30 Sep 2023 06:00 AM
Last Updated : 30 Sep 2023 06:00 AM

இயற்கையின் பேழையிலிருந்து! - 3: செந்தலை வாத்து தமிழ்நாட்டில் இருந்ததா?

செந்தலை வாத்து ஓவியம்: ஹென்ரிக் கிரான்வோல்ட்

அழகிய வாத்து இனங்களில் ஒன்றான செந்தலை வாத்து (Pink-headed Duck), தற்போது முற்றிலும் அற்றுப்போனதாகக் கருதப்பட்டாலும், அவை இன்னும் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு எனச் சிலர் நம்புகின்றனர்.

ஆண் பறவை இளஞ்சிவப்பு நிறத்தில் (Pink) தலை, அலகு, கழுத்து ஆகியவற்றைக் கொண்டது. உடல் கறுப்பாகவும், றெக்கையில் வெள்ளைத்திட்டும் இருக்கும். பெண் பறவையின் தலை மங்கலான இளஞ்சிவப்பு நிறத்திலும், அலகு பழுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

இவை இந்தியாவின் வட பகுதியில், குறிப்பாக கங்கை நதிக்கு வடக்கிலும் பிரம்மபுத்திரா நதிக்கு மேற்கிலும் அதிகம் தென்பட்டதாகக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தப் பகுதி தற்போதைய பிஹார் மாநிலத்தில் உள்ள சில இடங்களில் அமைந்திருக்கின்றன.

தென்னிந்தியாவில்... ஒரு சில குறிப்புகளும், அருங்காட்சியகத்தில் பாடம்செய்து வைக்கப்பட்ட பறவைகளும், இவை தென்னிந்தியாவில் சில இடங்களில் அவ்வப்போது, ஆனால், அரிதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதையும் காட்டுகின்றன. இவற்றில் இரண்டு குறிப்புகள் தமிழ்நாட்டில் இவற்றைப் பதிவுசெய்திருப்பதை அறிய முடிகிறது.

இந்தியப் பறவையியலின் தந்தை எனப் போற்றப்படும் ஏ.ஓ.ஹியூம், ‘Stray feathers’ இதழிலும், சி.டி.எச்.மார்ஷலுடன் அவர் இணைந்து எழுதிய இந்தியா, மயன்மார், இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள உணவுக்காக வேட்டையாடக்கூடிய பறவைகளைப் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட நூலான, ‘The game-birds of India, Burma and Ceylon’ எனும் நூலிலும் (1879இல் வெளியானது) குறிப்பிடுகிறார்.

முதலாவதாக, பழவேற்காடு ஏரியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஓர் இளம் பறவை அவரிடம் உள்ளதாக ஹியூம் குறிப்பிடுகிறார். இந்தப் பாடம் செய்யப்பட்ட பறவை, உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்க ஒருவேளை வாய்ப்பு உண்டு. இரண்டாவது குறிப்பு, இந்தியப் பறவையியலின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான டி.சி.ஜெர்டான், மதராஸ் சந்தையில் செந்தலை வாத்தினை வாங்கியதாகச் சொல்கிறது. மேலதிகத் தகவல்கள் இல்லாவிட்டாலும், இந்தக் குறிப்புகளில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இப்பறவை இருந்திருக்கும் என நம்பலாம்.

அந்தக்கால ஆராய்ச்சி: செந்தலை வாத்து இயல்பாகவே அரிதானது என்பதைப் பல பழைய ஆராய்ச்சிக் குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. ஒளிப்படங்கள் இல்லாத காலத்தில், பறவைகளைப் பற்றிய தகவல்களையும் அவற்றின் பல்வேறு பண்புகளையும் அறிந்துகொள்ள அவற்றைப் பிடித்து அல்லது சுட்டுக் கொன்று பாடம்செய்து வைத்தனர். சுட்டுக்கொல்வது சாப்பிடுவதற்காகவே என்றாலும், அதற்கு முன் அவற்றின் வயிற்றில் உள்ள செரிக்காத உணவுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்து, அவை என்ன உட்கொள்கின்றன என்பதைக் குறிப்பெடுத்து பதிவுசெய்துள்ளனர்.

பாடம்செய்து வைத்து அவற்றின் உடலில் எந்தெந்த சிறகுகள் என்னென்ன நிறங்களில் உள்ளன என்பதையும் ஓவியமாக தீட்டிக்கொண்டு, அது போலவே உள்ள மற்ற பறவைகளிடமிருந்து இனம் பிரித்து அடையாளம் கண்டுகொண்டனர். இந்த விவரமான வரைபடங்களே பின்னாள்களில், ஏன் இன்றும்கூட, பறவைகளின் களக் கையேடுகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. சிலர் பறவைகளின் முட்டைகளையும் சேகரித்துப் பாதுகாத்துவந்தனர். இந்தப் பாடம்செய்யப்பட முட்டைகளும், பஞ்சடைக்கப்பட்ட பறவைகளின் உடல்களும் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல அருங்காட்சியகங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

செந்தலை வாத்து ஓவியம்: ஹென்ரிக் கிரான்வோல்ட்

சென்னை வந்த செந்தலை வாத்து: செந்தலை வாத்தின் பாடம் செய்யப்பட்ட வடிவம், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஹியூமின் பழைய குறிப்புகளின் மூலம், அவை இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல என்று தெரிகிறது. அப்படியென்றால், அவை எங்கிருந்து வந்திருக்க முடியும் எனத் தெரியாமலேயே இருந்தது. தமிழ்நாட்டுப் பறவைகளின் பட்டியல் தயாரிக்கும் பணியில் இருந்தபோது, இது குறிந்த விவரங்களை அறிய சென்னை அருங்காட்சியக குறிப்புகளைப் படிக்க வேண்டியிருந்தது.

அவ்வேளையில் இங்லிஸ் (Mrs. Inglis) என்பவரின் பெயரை அக்குறிப்புகளில் அடிக்கடி காண முடிந்தது. இந்தியப் பறவையியல் துறையில் இங்லிஸ் என்றால் அது சார்லஸ் மக்ஃபார்லேன் இங்லிஸாகவே (Charles McFarlane Inglis) இருக்க முடியும். ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து வாழ்ந்த இயற்கையியலார் அவர். இந்தியப் பறவைகள், தட்டான்கள், ஊசித்தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள் முதலியவற்றைச் சேகரித்து அருங்காட்சியகங்களுக்கு அளித்தவர் அவர். அவற்றை ஓவியமாகத் தீட்டியும், குறிப்புகளைச் சேகரித்து எழுதியும் வந்தவர்.

பெரும்பாலும் அசாம், பிஹார், டார்ஜிலிங்பகுதிகளில் வாழ்ந்தவர் அவர். பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் முக்கிய உறுப்பினர். அவர் டார்ஜிலிங்கில் இருந்தபோது அங்குள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைப் புனரமைத்து, மேலும் பல உயிரினங்களைப் பாடம்செய்து அங்கே சேகரித்து வைத்தவர். மேலும், டார்ஜிலிங் இயற்கை வரலாற்றுக் கழக இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்தவர்.

எனினும் ஒய்வுபெற்றவுடன் குடும்பத்துடன் அவர் ஊட்டிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு வந்தபோது அவரது சேகரிப்பில் இருந்த பாடம்செய்யப்பட்ட பறவைகள், முட்டைகளையும் எடுத்து வந்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவி சிபில் டோரத்தி ஹன்ட் (Sybil Dorothy Hunt) தங்களிடம் இருந்த சேகரிப்பை சென்னை அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்திருக்கிறார். பாடம்செய்யப்பட அந்த இரண்டு செந்தலை வாத்துகளும் அப்படி வந்தவைதான்.

சார்லஸ் இங்லிஸ் பிஹாரில் இருந்தபோது, 1903 முதல் 1935 வரை எட்டு செந்தலை வாத்துகளைச் சேகரித்திருக்கிறார். இவற்றில் ஐந்து, பக்ஹானி (Baghauni) எனுமிடத்திலிருந்து கிடைத்தவை. 14 செப்டம்பர் 1954இல், சென்னை அருங்காட்சியகத்துக்கு இரண்டுபாடம்செய்யப்பட்ட செந்தலை வாத்துகள் கொண்டுவரப்பட்டன. இவை இரண்டும் பக்ஹானி எனுமிடத்தில் இருந்து சேகரிக்கப் பட்டவை என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இரண்டு செந்தலை வாத்துகளும் அவர் சேகரித்த ஐந்தில் எவை எவை என்பதற்கான குறிப்புகள் இல்லை. அவரது குறிப்பின்படி கடைசியாகச் சேகரித்தது ஓர் ஆண் செந்தலை வாத்து 21 ஜூன் 1935இல். ஆனால், இது பாடம்செய்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் அது இருக்கும் இடம் தெரியவில்லை.

ஆனால், அதற்கு முன்பு 7 ஏப்ரல் 1923இல் சேகரிக்கப்பட்டு பாடம் செய்யப்பட்ட ஆண், பெண் செந்தலை வாத்துக்கள் அமெரிக்காவில் உள்ள யேல் பிபாடி அருங்காட்சியகத்தில் (Yale Peabody Museum) உள்ளன. ஆகவே, மீதி மூன்றில் இரண்டுதான் சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கின்றனவா? ஒருவேளை அவர் கடைசியாகச் சேகரித்து பாடம்செய்த செந்தலை வாத்தைத்தான் அவருடன் எடுத்து வந்தாரா? செந்தலை வாத்து இன்னும் அற்றுப் போகாமல் இருக்கிறதா என்கிற கேள்வியைப் போலவே இதுவும் புரியாத புதிராகவே இருக்கிறது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x